சிறப்புக் கட்டுரைகள்

கலைப்பொருட்கள் தயாரிக்கலாம் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்! + "||" + Artifacts can be made Earn from home!

கலைப்பொருட்கள் தயாரிக்கலாம் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்!

கலைப்பொருட்கள் தயாரிக்கலாம் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்!
உல்லன் நூல்களில் விதவிதமான ஸ்வெட்டர்கள் மற்றும் அலங்கார கலைப்பொருட்களை உருவாக்கும் பெண்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
ல்லன் நூல்களில் விதவிதமான ஸ்வெட்டர்கள் மற்றும் அலங்கார கலைப்பொருட்களை உருவாக்கும் பெண்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து தனித்துவமாக தன் கலைப் படைப்புகளை மெருகேற்றி காட்சிப்படுத்துகிறார், செண்பகவல்லி. இவர் ‘குரோஷா’ எனும் கலையின் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்து, கை விரல்கள் மூலம் மாயஜாலங்களை செய்து வர்ண ஜாலங்களில் மிளிரும் அலங்கார பொருட்களையும் அற்புதமாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார். முழுவதும் குரோஷாவால் உருவாக்கப்பட்ட மேஜை அலங்கார விரிப்புகள், குழந்தைகள் விரும்பும் டேடிபியர் பொம்மைகள், ஹேண்ட் பேக், பர்ஸ், வீட்டு வாசலில் தொங்க விடப்படும் தோரணங்கள், தொப்பிகள், கடவுள் உருவங்கள், வண்ண கூடைகள், செல்போன் பவுச், மாலை, கீ செயின் என எண்ணிலடங்கா அலங்கார படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவர் செய்யும் பொம்மைகள் கண்களை ஈர்க்கின்றன.

34 வயதாகும் செண்பகவல்லி கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் என்ற ஊரை சேர்ந்தவர். கைவினை கலையில் சாதித்து, பெண்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்கள் சம்பாதிக்கவும் வழிகாட்டுகிறார். இவர் உருவாக்கும் நூலிழையால் ஆன தாம்பூல பைக்கு தனி மவுசு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் பைகள் ஒழிக்கப் படுவதால், திருமண வீட்டினர் இவருக்கு அதிக அளவில் ஆர்டர்கள் கொடுக்கிறார்கள்.

‘‘எனக்கு சிறு வயதில் இருந்தே, கைவினை பொருட்களை தயாரிப்பதில் ஆர்வம் உண்டு. அந்த ஆர்வம் தான் நூல் மூலம் அலங்கார பொருட்களை விதவிதமாக தயார் செய்ய தூண்டியது’’ என்பவர் குரோஷா கலை பற்றி விவரிக்கிறார்.

‘‘குரோஷா என்பது ஊசி. அதை கொண்டு உருவாக்கப்படும் கலைப்படைப்புகளுக்கு குரோஷெட் என்று பெயர். குரோஷாவை கொண்டு செய்வது கொக்கிப்பின்னல் எனப்படும். அதாவது, நீளமான ஊசியில் கொக்கி இருக்கும், அதில் நூலை கோர்த்தபடி பொருட்களை வடிவமைப்பதுதான் குரோஷா கலை. உல்லன் நூலை கொண்டு ஸ்வெட்டரை உருவாக்கலாம். குரோஷா ஊசியை பயன்படுத்தி விதவிதமான மேஜை விரிப்பு, அலங்கார தோரணம் போன்ற ஏராளமான கண்கவர்கலைப் பொருட்களை தயாரிக்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. அதாவது நூற்கண்டு மட்டும்தான் தேவைப்படும். ஒரு கண்டு நூலில் (10 ரூபாய்) 250 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்த நூலில் தயாராகும் பொருட்கள் அழகாக மட்டுமின்றி தரமாகவும் இருக்கும். பல வருடங்கள் ஆனாலும், நிறம் மங்காமல் பொலிவுடன் காட்சி அளிக்கும். சோப்பு போட்டு துவைத்தாலும் மெருகு குலையாது. இதுதான் இந்த நூலினால் உருவாக்கப்பட்ட பொருளின் சிறப்பம்சமாகும். வருங்காலங்களில், பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு முன்னோடியாக இந்த குரோஷா கலை இருக்கும்’’ என்கிறார் செண்பகவல்லி.

இவர் உல்லன் நூலில் 100 வகைக்கும் மேற்பட்ட கலைப் பொருட்களை வடிவமைத்திருக்கிறார். வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு இந்த கலை வருமானமும், மன நிம்மதியும் தேடித்தரும் என்றும் சொல்கிறார்.

‘‘மனதில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் மனதுக்கு பிடித்த இந்த கலையை செய்யும்போது மனபாரமெல்லாம் இறங்கிவிடும். மன நிம்மதி தருவதோடு போதிய வருமானமும் கிடைப்பதால், புதுப்புது படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது. அதனை செயலில் காட்டி வருகிறேன். ஊசியையும், நூலையும் பயன் படுத்தும் நுட்பமான வேலை என்பதால் இரவு ஓய்வு எடுத்து விடுவேன். ஆரம்பத்தில் நான் உருவாக்கிய படைப்புகளை, வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு கிப்ட்டாக கொடுத்தேன். அவை அழகாக இருப்பதாக என்னை பாராட்டினார்கள்.

அவர்களின் வீட்டில் விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கும்போதெல்லாம் என்னை தொடர்பு கொண்டு புதுவிதமான அலங்கார பொருட்களை தயாரித்து கொடுக்குமாறு கூறி என்னை உற்சாகப்படுத்தினார்கள். என்னிடம் அவைகளை வாங்கி விருந்தினர்களுக்கு பரிசளித்தார்கள். அது எனக்கு ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்தது. பேன்சி ஸ்டோர் நடத்துபவர்களும் வாங்கி சென்றார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களும் என்னிடம் கலை பொருட்களை வாங்கி, விற்பனை செய்தார்கள். குடும்ப தலைவிகள் இந்த கலையை கற்றுத்தேர்ந்தால் வீட்டில் பொழுதை போக்கும் நேரத்தில் படைப்புகளை உருவாக்கி வருமானம் தேடிக்கொள்ளலாம். முழு ஈடுபாட்டோடு செயல்பட்டால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்’’ என்பவர் அதற்கான வழிமுறைகளையும் விளக்குகிறார்.

‘‘இந்த கைவினை தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் முறையான பயிற்சியை பெற வேண்டும். முழு மனதோடு ஈடுபட்டால் பெண்களால் ஒரு வாரத்தில் கூட கற்றுவிட முடியும். படிப்படியாக ஒவ்வொரு பொருட்களாக தயாரித்து சம்பாதிக்கலாம். தினமும் இரண்டு மணி நேரம் இந்த கைவினை தொழிலில் ஈடுபட்டால், 200 ரூபாய் சம்பாதிக்கலாம். அலங்கார விரிப்பு என்றால் ஒரு நாளில் மூன்று தயாரித்து அதன் மூலம் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனக்கு அதிக ஆர்டர் வரும் போது, என்னிடம் பயிற்சி எடுத்தவர் களின் உதவியை நாடுவேன். அதில் அவர்களுக்கும் வருமானம் கிடைக்கும். மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு இந்த கைவினை கலையை கற்று கொடுத் திருக்கிறேன்.

அலங்கார பொருட்கள் மட்டுமின்றி ஜிமிக்கி, வளையல், பேஷன் ஜூவல்லரி போன்றவைகளையும் இந்த நூலில் உருவாக்குகிறேன். ஊசி, நூலை தவிர இந்த தொழிலுக்கு வேறு முதலீடு எதுவும் கிடையாது. வருமானத்திற்கு மட்டுமின்றி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களின் மனதுக்கு இதமளிக்கும் மருந்தாகவும் இந்த கலை இருக்கும்’’ என்கிறார்.

ஆரம்பத்தில் செண்பகவல்லியின் கலை ஈடுபாட்டை பார்த்து சிலர் கேலியும், கிண்டலும் செய்திருக்கிறார்கள். அதுதான் இவருக்கு வேகத்தை கொடுத்து, வெற்றிக்கும் அழைத்து சென்றிருக்கிறது.

‘‘ஆரம்பத்தில், நான் என்ன செய்கிறேன் என்று பார்க்காமலே பூ ஊசி, நூலை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறாய். அதனால் எந்த பிரயோஜனமும் கிடையாது. உருப்படியான வேறு வேலையை பார் என்று நிறைய பேர் என்னை ஏளனமாக பேசி னார்கள். என்னுடைய பெற்றோரான ஹரிஹரனும், வள்ளி குமாரியும்தான் என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கம்தான் எனக்கு பக்கபலமாக அமைந்தது. மற்றவர்களை சார்ந்திருக்காமல் சொந்தக்காலில் நின்று உழைத்து தன்னம்பிக்கையோடு வாழும் மன தைரியத்தை தந்தது. எனது கலைத்திறனால் நான் மட்டுமின்றி என்னை சார்ந்தும் நிறைய பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார்.

இவர் கலைப்பயிற்சி ஆசிரியைக்குரிய கல்வியையும் முறைப்படி கற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் பள்ளி, கல்லூரிகளில் பகுதிநேர கலைப்பயிற்சி ஆசிரியையாகவும் பணியாற்றுகிறார். செண்பகவல்லிக்கு 10 வயதில் சஞ்சய் என்ற மகன் உள்ளான். சமீபத்தில் இவருடைய கணவர் இறந்துவிட்டார். அந்த சோகத்தையும் கடந்து இவர் கலையில் சாதித்துக்கொண்டிருக்கிறார்.

நூலில் தாம்பூல பை

‘‘திருமண நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்கள், நண்பர்களுக்கு தாம்பூல பை கொடுப்பது வழக்கம். முன்பெல்லாம் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட தாம்பூல பையைத் தான் திருமண நிகழ்ச்சியில் பயன்படுத்துவார்கள். அதை பார்த்த போது, பிளாஸ்டிக் ஒழிப்புக்கு நாமும் முன்னோடியாக விளங்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அதன்படி நூலால் முழுக்க முழுக்க வடிவமைக்கப்பட்ட தாம்பூல பையை உருவாக்கினேன்’’ என்பவர் விதவிதமான கலரில் பல வடிவங்களில் தாம்பூல பைகளை உருவாக்குகிறார்.

தாம்பூல பைகளை வீட்டிலேயே தயாரிக்க வழிகாட்டுகிறார்.

தேவையான பொருட்கள்:

உல்லன் நூல் -2 (சிவப்பு, மஞ்சள் கலர்)

குரோஷா ஊசி -1

கத்தரிக்கோல் - 1

பின்னல் முறைகள்:

சங்கிலி பின்னல்

லூப் பின்னல்

தனி முடிச்சு

செய்முறை:

முதலில் சிவப்பு வண்ண நூலில் 35 சங்கிலி தையல் போட வேண்டும். அதன் மேல் லூப் தையலால் ஆன தனி முடிச்சு (குரோஷா) 4 வரிசையாக தொடர்ந்து போடவும்.

அதை சுற்றிலும் தனிமுடிச்சு போட வேண்டும். இப்போது தாம்பூலப்பையின் அடிப்பகுதி தயாராகி விடும்.

பின்னர் அதன்மேல் சுற்றிலும் 2 வரிசை தனி குரோஷா போட வேண்டும். பின்பு அந்த நூலை ‘கட்’ செய்ய வேண்டும்.

அடுத்து மஞ்சள் வண்ண நூலை அதனுடன் இணைத்து மீண்டும் சுற்றிலும் 4 வரிசை தனி குரோஷா போடவும்.

பின்பு சிவப்பு வண்ண நூலை கொண்டு 3 வரிசை தனி குரோஷா போட வேண்டும்.

அதனை தொடர்ந்து ஒரு தனி குரோஷா போட்டு கீழே மூன்று லூப் தள்ளி மேலே 3 சங்கிலி போட்டு மறுபடியும் ஒரு தனி குரோஷா என்ற முறையில் போடவும். இப்படி போடும் போது, அதில் கட்டம் போன்று தோன்றும். இதனை வார் (ரோப்) போடுவதற்கு பயன்படுத்த வேண்டும். பின்னர் மூன்று சங்கிலி போன்ற இடத்தில் மூன்று தனி குரோஷா போடவும். பின்னர் நூலை கட் பண்ணவும்.

பிறகு சிவப்பு வண்ண நூல் கொண்டு தனி முடிச்சு போட்டு முடிக்கவும்.

சிவப்பு, மஞ்சள் இரண்டு வண்ண நூலை சேர்த்து 90 சங்கிலி போடவும். இதுபோல் இரண்டு வார் (ரோப்) தயார் செய்யவும்.

பையின் மேல்பகுதியில் கட்டம் அமைந்த இடத்தில் ஒரு கட்டம் விட்டு அடுத்த கட்டத்தில் வார் பகுதியை போடவும். போடும் போது வலது புறம் இருந்து ஆரம்பித்து மறுபடி ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வந்து இரண்டு நூலை சேர்த்து முடிச்சு போடவும். இதுபோல் இடது புறமும் வார் பகுதியை போட்டு முடிச்சு போடவும். இருபுறம் இருக்கும் வார் பகுதியை இணைத்தால் தாம்பூலப்பை ரெடி.

பிளாஸ்டிக்கை தவிர்க்க விரும்புகிறவர்கள், நூலால் ஆன தாம்பூல பையை வாங்கலாம். அதே சமயத்தில், இது வித்தியாசமாகவும், நிகழ்ச்சிக்கு வருபவர்களை கவரும் வகையிலும் இருக்கும். விலைக்கு தக்கபடி இதில் கூடுதல் வேலைப்பாடுகளை செய்யலாம். இது மக்களால் வாங்க முடிந்த விலைக்கு கிடைக்கும்’’ என்கிறார் செண்பகவல்லி.