`மாமியார் மருமகள்' பள்ளிக்கூடம்


`மாமியார் மருமகள் பள்ளிக்கூடம்
x
தினத்தந்தி 15 March 2020 11:33 AM GMT (Updated: 15 March 2020 11:33 AM GMT)

வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அதனால் படிப்பறிவை இழந்த பெண்கள் நிறைய உண்டு.

வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அதனால் படிப்பறிவை இழந்த பெண்கள் நிறைய உண்டு. அவர்களும் இப்போது மாணவ-மாணவர்களுக்கு இணையாக சுறுசுறுப்புடன் பள்ளிக்கூடம் சென்று படித்துக்கொண்டிருக்கிறார்கள். வெளி உலகம் தெரியாத பெண்கள், தங்கள் பெயரை கூட எழுதத் தெரியாத பெண்கள் கல்வி அறிவு மூலம் இன்று எழுத்தறிவை பெற்று நாட்டு நடப்புகளை வாசித்து தெரிந்து கொள்கிறார்கள்.

வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பெண்களுக்கு கல்வி அறிவை வழங்கி அவர்களை வெளி உலகுடன் இணையவைக்கும் நோக்கத்தில் மத்தியபிரதேச மாநிலம் திகாம்பர்க் மாவட்டத்தில் 35 இடங்களில் இந்த பெண்கள் பள்ளிக் கூடங்கள் இயங்கி வருகிறது. திகாம்பர்க் மாவட்ட கலெக்டர் ஹர்ஷிகா சிங் முயற்சியில் இந்த பள்ளிக்கூடங்கள் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன. பிரசவத்தின்போது தாய் சேய் இறப்பு விகிதம் அதிகரிப்பு, சுகாதாரமின்மை, பெண்கள் மத்தியில் கல்வியறிவு இன்மை, ஆண்-பெண் பாலின விகிதத்தில் அதிகமான ஏற்றத்தாழ்வு போன்றவை இந்த மாவட்டத்தின் முக்கிய பிரச்சினையாக இருந்திருக்கிறது. ஆண் குழந்தைகளை கட்டாயம் பெற்றெடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு அங்குள்ள பெண்கள் ஆளாகி இருக்கிறார்கள். 6-7 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தவர்களும் அடுத்து ஆண் குழந்தையை எதிர்பார்த்து வயிற்றில் வாரிசை சுமந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் முடிவு கட்டும் நோக்கத்தில் கல்வியை ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறார், ஹர்ஷிகா சிங். கடந்த ஆண்டு திகம்பர்க் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றவர் ஓராண்டுக்குள் பெண்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

‘‘கல்வி அறிவு இல்லாமல் இருப்பதே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை புரிந்துகொண்டேன். குடும்பத்திலும், சமூகத்திலும் ஆண் ஆதிக்கம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. 30 வயதை கடந்த பெண்கள் கூட வீட்டில் உரிமையோடு பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கல்விதான் அந்த நிலையை மாற்றும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தேன்’’ என்கிறார், ஹர்ஷிகா. படிப்பை பாதியில் கைவிட்ட பெண்கள், எழுத, படிக்க தெரியாத பெண்களுக்காக 35 கிராம பஞ்சாயத்துக்களில் மகளிர் பள்ளிக்கூடத்தை தோற்றுவித்திருக்கிறார்.

அந்த பள்ளிக்கூடங்களில் சேர்ந்திருக்கும் பெண்களுக்கு மருமகள்கள் ஆசிரியர்களாக இருந்து பாடம் நடத்தும் சுவாரசியமும் நிகழ்ந் திருக்கிறது.

‘‘பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களாக உள்ளூரை சேர்ந்தவர்களைத்தான் நியமித் திருக்கிறோம். அவர்களால்தான் தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து கல்வியின் அவசியத்தை புரியவைக்கவும், அவர்களுக்கு புரியும்படி சொல்லிக்கொடுக்கவும் முடியும். சிறுமியாக இருக்கும்போதே குடும்ப சூழ்நிலையால் படிப்பை பாதியில் கைவிட்ட பெண்கள் இப்போது திருமணமாகி குடும்பத்தை நிர்வகிப்பதால் படிப்பை தொடர்வதற்கு தயங்கினார்கள். சில நாட்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்துவிட்டு பின்னர் வராமலும் இருந்தனர். அவர்களையெல்லாம் திரும்பவும் அழைத்து வந்து கல்வி கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்’’ என்கிறார்.

ஹர்ஷிகா சிங்கின் முயற்சியால் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு சென்று பெண்கள் படிப்பதற்கு வசதியாக மாலை நேரத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால் வீட்டுவேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு ஆர்வமாக சென்று படிக்கிறார்கள். வாரத்தில் நான்கு நாட்கள் ஒரு மணி நேரம் கல்வி போதிக்கப்படுகிறது. பெயர்களை எழுத கற்றுக்கொள்ளுதல், கையொப்பம் இடுதல், எளிமையான கணக்குகளை அறிதல், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பாடத்திட்டத்தை ஹர்ஷிகா சிங் உருவாக்கியுள்ளார்.

இந்த பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கும் 40 வயதான குலாப், ‘‘நான் சிறுவயதில் பள்ளிக்கூடம் சென்று படிக்க விரும்பினேன். ஆனால் அந்தகால வழக்கப்படி சிறுவயதிலேயே எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அதனால் பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியவில்லை. இதுநாள் வரை என் பெயரை கூட எழுதத்தெரியாமல் இருந்தேன். இப்போது அழகாக எழுதுகிறேன். அடிப்படை கணக்குகளையும் கற்றுக்கொண்டிருக்கிறேன்’’ என்கிறார்.

இங்கு பயிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்பையும், சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொடுக்கிறார்கள். மேலும் மாவட்டத்தில் உள்ள 323 கிராம பஞ்சாயத்துக் களிலும் இதுபோன்ற பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு கலெக்டர் ஹர்ஷிகா சிங் ஏற்பாடு செய்து வருகிறார்.

Next Story