தினம் ஒரு தகவல் : அசாத்திய கட்டிடங்களும், ராட்டினமும்...


தினம் ஒரு தகவல் : அசாத்திய கட்டிடங்களும், ராட்டினமும்...
x
தினத்தந்தி 16 March 2020 9:11 AM GMT (Updated: 16 March 2020 9:11 AM GMT)

உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தை கொண்ட பெருமை ஐக்கிய அரபு நாடுகள் நாட்டுக்குச் சொந்தமானது. அந்நாட்டின் துபாய் நகரில் உள்ள ஒரு கட்டிடம் 828 மீட்டர் உயரம் கொண்டது. 160 மாடிகளைக் கொண்டது. அது மட்டுமல்லாமல் உலகின் மிக உயரமான பார்வையாளர் தளம் என்ற பெருமையும் இந்தக் கட்டிடத்துக்கு உண்டு.

சவுதி அரேபியாவும் கிங்டம் என்ற பெயரில் இந்த கட்டிடத்துக்குப் போட்டியாக ஒரு கட்டிடத்தை கட்டவுள்ளது. இது கட்டப்பட்டுவிட்டால் உலகின் மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு நாடுகள் இழக்கும்.

இதற்கிடையில் இங்கிலாந்து உலகின் மிகக் குறுகிய விட்டம் கொண்ட கோபுரத்தை கட்டியுள்ளது. இதுதான் உலகின் மிக குறுகிய விட்டம் கொண்ட உயரமான கோபுரம் என உலக கின்னஸ் அமைப்பும் அங்கீகாரம் அளித்துள்ளது.

160.4 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கோபுரத்தின் விட்டம் 3.9 மீட்டர் ஆகும். இது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது. மார்க் பார்பீல்டு என்னும் கட்டுமான நிறுவனம் தான் இந்த கோபுரத்தைக் கட்டியுள்ளது. இது ராட்டினத்தைப் போன்றது. இந்த கோபுரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூடை மேலேயும் கீழேயும் ஏறி இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

‘லண்டன்-ஐ’ என்னும் பிரம்மாண்டமான ராட்சத ராட்டினத்தையும் இந்த நிறுவனம் தான் வடிவமைத்தது. தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ராட்டினமும் பிரிட்டிஷ் ஏர்வேசுக்கு சொந்தமானது. 120 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராட்டினத்தின் கூடை கண்ணாடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கூடை ராட்டினத்தில் உயரத்துக்குச் செல்லும்போது லண்டன் நகரையே பார்க்க முடியும். அதனால்தான் இது ‘லண்டன்-ஐ’ என அழைக்கப்படுகிறது.

Next Story