சிறப்புக் கட்டுரைகள்

இயற்கை அறிவோம் : பாலைவனத்திலும் தாவரத்தை துளிர்க்க வைக்கலாம்... + "||" + Know the Nature: The plant can be planted in the desert

இயற்கை அறிவோம் : பாலைவனத்திலும் தாவரத்தை துளிர்க்க வைக்கலாம்...

இயற்கை அறிவோம் : பாலைவனத்திலும் தாவரத்தை துளிர்க்க வைக்கலாம்...
இயற்கை ஒருபுறம் அழிந்துவருவது மனிதர்களை திகைக்க வைத்திருக்கிறது. எனவே மறுபுறம் இயற்கை பேணும் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
மரங்களை பெருக்குவது, மாசுகளை குறைப்பது போன்றவை இயற்கை பேணுதலின் முக்கிய நடவடிக்கைகளாகும்.

மரங்களை வளர்க்க, கன்றுகளை நடுவதுடன், அவற்றை தொடர் பராமரிப்பு செய்ய வேண்டும். அதற்கான நீராதாரம் அவசியம். எனவே நீர்வளம் குறைந்த இடத்திலும் தாவரங்களை பராமரிப்பது இயற்கை பேணுவதில் சவாலான காரியமாகும்.

இத்தகைய சவாலை எளிதாக சமாளித்து, பாலைவனமாக இருக்கும் இடங்களிலும் தாவரங்களை துளிர்க்க வைக்கும் அற்புத கருவி ஒன்று நெதர்லாந்தில் உருவாக்கப்பட்டது. மலர்கள் ஏற்றுமதியாளரான பீட்டர் ஹோப் என்பவர் இந்த தனித்துவமான கருவியை உருவாக்கினார். இது வறண்ட பகுதிகளிலும், தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள இடங்களிலும் தாவர வளர்ச்சியைத் தூண்டும்.

இவரது கருவியின் பெயர் ‘த குரோயாசிஸ் வாட்டர்பாக்ஸ்’ (Groasis waterboxx) என்பதாகும். 50 சென்டிமீட்டர் அகலமுள்ள பிளாஸ்டிக் வாளி போன்றது இது. தண்ணீரை மழையில் இருந்தும், ஈரப்பதம், பனி போன்ற உறைநிலையில் இருந்தும் நீரை கவர்ந்து சேகரித்து வைத்துக் கொள்ளக் கூடியது. மேலும் இதில் 2 சிறிய செடிகள் வளரவும் வசதி இருக்கிறது.

இந்த கருவியை சகாரா பாலைவனத்தில் 3 வருடங்களுக்கு தரையில் பதித்து வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. மொரோகோவில் நடந்த இந்த ஆய்வில் அது வெற்றிகரமாக பாலைவனத்திலும் தாவரங்களை துளிர்க்க வைத்தது. இதற்காக 2010-ம் ஆண்டு பாப்புலர் சயின்ஸ் சிறந்த கண்டு பிடிப்புக்கான விருது பெற்றது.

ஆரம்பத்தில் பிளாஸ்டிக் கருவியாக இருந்த இந்த சாதனத்தை, மக்கும் திறனுள்ள சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்யாத பொருளில் மேம்படுத்தி தயாரித்து வழங்கினார் ஹோப்.