மரபணுக்களின் பரிணாமம்...


மரபணுக்களின் பரிணாமம்...
x
தினத்தந்தி 16 March 2020 11:13 AM GMT (Updated: 16 March 2020 11:13 AM GMT)

பரிணாமம் என்ற சொல்லைக் கேட்ட உடனே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு படம்தான் நினைவுக்கு வரும். அது என்னவென்றால், ‘முதுகு வளைந்து குனிந்தபடி இருக்கும் குரங்கு ஒன்று அடுத்தடுத்த நிலைகளில் முதுகு மெல்ல மெல்ல நேராகி, நிமிர்ந்து நடக்கத்தொடங்கி, குரங்கு தோற்றமானது அப்படியே மனித உருவத்துக்கு மாறியிருக்கும் பரிணாம விளக்கப் படம்தான்.

தண்ணீரில் வாழ்ந்த சில மீன்களுக்கு கால்கள் முளைத்து அவை நடந்து நிலத்துக்கு வந்தன (சலமாண்டர்/salamander) என்றும், நடப்பது மற்றும் ஓடுவது ஆகியவற்றை மட்டுமே மேற்கொள்ளும் திறன்கொண்ட சில டைனோசார்களுக்கு இறக்கை முளைத்து அவை பறக்கத் தொடங்கின (ஆர்க்கியாப்டேரிக்ஸ்/Archeopteryx) என்றும், அவற்றில் மேலும் சில கருப்பைகளை வளர்த்துக்கொண்டு குழந்தைபெறும் திறனைப் பெற்றன என்றும் நம்மில் பலரும் கேட்டிருப்போம். ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல. மேலும் பரிணாமம் குறித்த நம் புரிதலில் பல தவறுகள் உள்ளன என்று சமீபத்திய பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் வாழ்வதில் மிகவும் திறமையான பல பரிணாமக் கிளைகள் அல்லது உயிரின குழுக்கள் எந்த மாற்றமும் அடையாமல் அப்படியே இருந்துவிட்டன. உதாரணமாக, பாக்டீரியா போன்ற உயிர்களைக் கூறலாம். மாறாக, ஒட்டுண்ணி வகையைச் சார்ந்த வேறு சில உயிரினங்கள் இயற்கையாக அமைந்த தங்களின் சிக்கலான உடல் அமைப்புகளை துறந்துவிட்டு அவற்றுக்கு பதிலாக எளிமையான அமைப்புகளை உருவாக்கிக்கொண்டு வாழத்தொடங்கிவிட்டன என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இம்மாதிரியான உயிரியல் மற்றும் உடலியல் மாற்றங்கள், உயிரின செயல்பாடுகளுக்கு மரபணுக்களே அடிப்படை என்பதால், பரிணாம வளர்ச்சியானது மரபணு அளவில் எந்த வகையான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது என்று கண்டறிய இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு, எஸ்செக்ஸ் மற்றும் பிரிஸ்டல் ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய ஆய்வுக்குழுவானது ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அதற்காக சுமார் 100-க்கும் மேற்பட்ட உயிரினங்களின் மரபணுக்கோப்புகளை (genome) ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து அவற்றுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பதிவு செய்தனர். அந்த ஆய்வின் முடிவுகளைப் பார்த்தபொழுது, மனிதர்கள் உள்ளிட்ட மிகவும் அதீதமாக பரிணாமம் அடைந்த உயிரினக் குழுக்களில் மிகவும் அதிகப்படியான மரபணுக்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. ஆனால் அதேசமயம் புதிய மரபணுக்கள் எதுவும் காணப்படவில்லை.

அதாவது, பரிணாமத்தில் மனிதர்களுக்கு முந்தைய உயிரினங்களான குரங்குகள் மற்றும் இதர பாலூட்டிகளில் இருந்த பல மரபணுக்கள் மனித மரபணுக்கோப்புகளில் இருக்கவில்லை. ஆனால் அதேசமயம் மனிதனுக்கு முந்தைய உயிர்களில் இல்லாத மரபணுக்கள் எதுவும் மனித மரபணுகோப்பில் புதிதாக தோன்றியிருக்கவும் இல்லை.

இந்த புதிய கண்டுபிடிப்பானது, உயிர்களின் பரிணாமமானது புதிய பண்புகளை உருவாக்கிக்கொண்டு தொடர்ந்து மேம்பட்டுக்கொண்டே இருக்கும் தன்மைகொண்டது எனும் நம்முடைய பழைய புரிதலை மறுக்கிறது. மாறாக மரபணுக்களின் இழப்புகள் காரணமாக இருக்கும் பண்புகளை இழந்துவிடுவதன் மூலமாகவும் உயிர்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்கின்றன எனும் புதிய கருதுகோளை அழுத்தமாக முன்வைக்கிறது.

மேலும், உயிர்கள் தோன்றிய தொடக்கத்தில் ஒரு செல் உயிரி போன்ற மிகவும் எளிமையான உயிரியல் அமைப்புகளுடன் தொடங்கிய பரிணாமமானது அவ்வப்போது மிகவும் சிக்கலான உயிரியல் அமைப்புகளை உருவாக்கியது. பின்னர், காலம் செல்ல செல்ல, பரிணாம வளர்ச்சியில் மீண்டும் எளிமையான உயிரியல் அமைப்புகள் கொண்ட உயிர்கள் தோன்றின.

ஆக, பரிணாம வளர்ச்சியானது, “எளிமையான உயிரியல் அமைப்புக்கும் சிக்கலான அமைப்புக்கும் முன்னும் பின்னுமாக பயணித்ததே தவிர, எளிமையில் இருந்து தொடர்ந்து சிக்கலான உயிரியல் அமைப்புக்கு முன்னேறுவது என்று ஒரே திசையில் பயணிக்கவில்லை” என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதேசமயம், உயிர்களின் பரிணாம வளர்ச்சியானது ஒரு சிக்கலான அமைப்பிலிருந்து தடாலடியாக மிகவும் எளிமையான உயிரியல் அமைப்புக்கு பின்னோக்கியும் பயணிக்கவில்லை.

உயிர்கள் வாழ்கின்ற சுற்றுச்சூழலைப் பொறுத்து எளிமையான உயிரியல் அமைப்புகொண்ட உயிர்களும் வெற்றிகரமாக வாழ்ந்தன, சிக்கலான அமைப்பு கொண்டவையும் வெற்றிகரமாகவே வாழ்ந்தன என்றும், இவற்றில் ஒன்றைவிட மற்றொன்று சிறந்தது என்று சொல்ல முடியாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உயிரினப் பட்டியலில் மிகவும் அதீதமாக பரிணாமம் அடைந்த உயிர்களை மட்டும் கருத்தில் கொண்டால் உயிர்களின் பரிணாமமானது எளிமையில் இருந்து சிக்கலான அமைப்புக்கு ஒரே நேர்கோட்டில் அல்லது நூல் பிடித்தாற்போல தொடர்ந்து முன்னேறவில்லை என்பது புரியும் என்கிறார்கள் இந்த ஆய்வினை மேற்கொண்ட இங்கிலாந்து விஞ்ஞானிகளில் ஒருவரான பீட்டர் ஹாலண்ட்.

அதன் காரணமாகத்தான் ஆதி கால உயிர்கள் மிகவும் எளிமையானவை என்றும், சமீபத்திய உயிர்கள் மிகவும் சிக்கலான உயிரியல் அமைப்பு களை கொண்டவை என்றும் புரிந்துகொண்டால் அது முற்றிலும் தவறு என்கிறார் பீட்டர். ஏனெனில், மிகவும் அதீத பரிணாம வளர்ச்சி கண்ட உயிரினமாக கருதப்படும் மனிதனை விட மிகவும் சிக்கலான உயிரியல் மற்றும் மரபியல் அமைப்பு கொண்ட உயிரினங்கள் பூமியில் ஏராளம் என்பது மறுக்க முடியாத உண்மை.

மிகவும் முக்கியமாக, பரிணாம வளர்ச்சிப் பாதையில் புதிய மரபணுக்கள் தோன்றி அதன்மூலமாக சிக்கலான உயிரினங்கள் தோன்றியது என்று கூற முடியாத அளவுக்கு மனிதர்கள், பூச்சிகள் மற்றும் இதர முதுகெலும்புள்ள உயிர்களின் உயிரணுக்களில் எண்ணற்ற மரபணுக்கள் காணாமல் போயிருக்கின்றன என்ற உண்மை முதல் முறையாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில், பரிணாம வளர்ச்சிப் பாதையில் இருக்கும் மரபணுக்களை இழந்து எளிமையான உயிரியல் அமைப்புகளை உருவாக்கிக்கொண்டு வாழ்ந்த உயிரினங்களும் இருக்கின்றன. புதிய மரபணுக்களை சேர்த்துக்கொண்டு மிகவும் சிக்கலான உயிரியல் அமைப்புகளை உருவாக்கிக்கொண்ட உயிரினங்களும் இருக்கின்றன என்பதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். எனவே, பரிணாம வளர்ச்சியானது ஒரே திசையில் பயணிக்கும் ஒருவழிப்பாதை அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

- தொகுப்பு: ஹரிநாராயணன்


Next Story