பிப்ரவரி வரையிலான 5 மாதங்களில் 23 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி


பிப்ரவரி வரையிலான 5 மாதங்களில் 23 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி
x
தினத்தந்தி 16 March 2020 11:29 AM GMT (Updated: 16 March 2020 11:29 AM GMT)

நடப்பு சந்தை பருவத்தில் (2019 அக்டோபர்-2020 செப்டம்பர்) பிப்ரவரி வரையிலான 5 மாதங்களில் 23 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி ஆகி இருக் கிறது.

இந்தியா பிரேசில்

சர்வதேச அளவில், சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் நாடு முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. உள்நாட்டில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் இந்த 3 மாநிலங்களின் பங்கு 70 சதவீதமாக உள்ளது.

நம் நாட்டில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலம் சர்க்கரை சந்தைப் பருவமாகும். நடப்பு 2019-20 பருவத்தில் உற்பத்தி 2 சதவீதம் உயர்ந்து 2.65 கோடி டன்னாக இருக்கும் என இஸ்மா எனும் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் மதிப்பீடு செய்து இருக்கிறது.

பிப்ரவரி 29 நிலவரப்படி நாட்டில் மொத்தம் 1.95 கோடி டன் சர்க்கரை உற்பத்தி ஆகி உள்ளதாக இஸ்மா தெரிவித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே நாளில் அது 2.49 கோடி டன்னாக இருந்தது. ஆக, உற்பத்தி சுமார் 22 சதவீதம் சரிவடைந்துள்ளது. எனினும் இந்தப் பருவத்தில் 2.73 கோடி டன் சர்க்கரை உற்பத்தி ஆகும் என்றும், கடந்த பருவத்தை விட இது 18 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடப்பு 2019-20 பருவத்தில் 60 லட்சம் டன் வரை சர்க்கரை ஏற்றுமதி செய்ய இந்திய ஆலைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. எனினும் இந்தப் பருவத்தில் 50 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி ஆகும் என வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், பிப்ரவரி வரையிலான முதல் 5 மாதங்களில் 23 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி ஆகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் இதுவரை சர்க்கரை ஆலைகளின் கைவசம் 35 லட்சம் டன்னுக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் இருப்பதாக தெரிகிறது.

சோமாலியா, ஈரான்

வங்காளதேசம், இலங்கை, சோமாலியா, ஈரான் ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் சர்க்கரை இறக்குமதி செய்து வருகின்றன. சென்ற பருவத்தில் (2018 அக்டோபர்-2019 செப்டம்பர்) இந்திய ஆலைகளுக்கு 50 லட்சம் டன் வரை சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்பருவத்தில் 37 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே ஏற்றுமதி ஆகி இருக்கிறது.

Next Story