மொத்த மின் உற்பத்தி திறனில் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட மின் திட்டங்களின் பங்கு 44 சதவீதம்


மொத்த மின் உற்பத்தி திறனில் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட மின் திட்டங்களின் பங்கு 44 சதவீதம்
x
தினத்தந்தி 16 March 2020 11:44 AM GMT (Updated: 16 March 2020 11:44 AM GMT)

நாட்டின் மொத்த மின் உற் பத்தி திறனில், 2019-ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட மின் திட்டங்களின் பங்கு 44 சதவீதமாக இருக்கிறது.

முக்கிய எரிபொருள்

அனல்மின் நிலையங்களில் டீசல் போன்ற எரிபொருள்களும் பயன்படுத்தப்பட்டாலும் நிலக் கரிதான் மிக முக்கிய எரிபொருளாக இருந்து வருகிறது. நம் நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக் கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

உலக அளவில் இப்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் செல்வாக்கு பெற்று வருகின்றன. என்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரை அடுத்த 10 ஆண்டுகளுக்கு (2030 வரை) மின் துறையில் அனல் மின் திட்டங்களின் பங்கு 50 சதவீதமாக இருக்கும் என்பதால் நிலக்கரியின் ஆதிக்கமும் அதுவரை நீடிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், சென்ற ஆண்டு இறுதியில் மொத்த மின் உற்பத்தி நிறுவுதிறனில் நிலக்கரி சார்ந்த மின் திட்டங்களின் பங்கு 44 சதவீதமாக இருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து 5 ஆண்டுகள் புதிய மின் உற்பத்தி திட்டங்களில் நிலக்கரியின் பங்கு குறைந்து வந்த நிலையில் கடந்த ஆண்டில் அதன் பங்களிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில் 29,900 கோடி டன் அளவிற்கு நிலக்கரி வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 12,300 கோடி டன்னை உற்பத்தி செய்து, உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நிலக்கரி வளம் 100 ஆண்டுகளுக்கு போதுமானது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா 3-வது இடம்

உலக நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் உலக நிலக்கரி உற்பத்தியில் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியாதான் முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.

Next Story