ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் 1.78% வளர்ச்சி


ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் 1.78% வளர்ச்சி
x
தினத்தந்தி 17 March 2020 10:04 AM GMT (Updated: 17 March 2020 10:04 AM GMT)

பிப்ரவரி மாதத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் 1.78 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

புதுடெல்லி

பிப்ரவரி மாதத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் 1.78 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

எல்.ஐ.சி. நிறுவனம்

இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில் மொத்தம் 24 நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் பொதுத்துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி. நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் தனது பிரிமிய வருவாயில் 94 சதவீதத்தை முகவர்கள் வாயிலாக ஈட்டுகிறது. மீத வருவாய் ஆன்லைன் வாயிலாகவும், வங்கிகள் வாயிலாகவும் ஈட்டப்படுகிறது. பாலிசிகள் விற்பனை மற்றும் பிரிமிய வருவாய் அடிப்படையில் எல்.ஐ.சி. நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

பிப்ரவரி மாதத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மொத்தம் ரூ.18,533 கோடியை புதிய பிரிமிய வருவாயாக ஈட்டி உள்ளன. சென்ற நிதி ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 1.78 சதவீத வளர்ச்சியாகும். அப்போது வருவாய் ரூ.18,209 கோடியாக இருந்தது. இதில் எல்.ஐ.சி. நிறுவனம் அதிகபட்சமாக ரூ.10,404 கோடி வருவாய் ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.12,055 கோடியாக இருந்தது. ஆக, வருவாய் 13.7 சதவீதம் குறைந்துள்ளது.

மற்ற 23 தனியார் நிறுவனங்கள் 32 சதவீத வளர்ச்சியுடன் ரூ.8,128 கோடியை புதிய பிரிமிய வருவாயாக ஈட்டி உள்ளன. இதில் எச்.டீ.எப்.சி. லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.1,580 கோடியை ஈட்டி இருக்கிறது. இதன்படி இந்நிறுவனம் 33 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், ஜனவரி வரையிலான 10 மாதங்களில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங் கள் மொத்தம் ரூ.2.15 லட்சம் கோடியை புதிய பிரிமிய வருவாயாக ஈட்டி உள்ளன. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 35 சதவீத வளர்ச்சி யாகும். அப்போது வருவாய் ரூ.1.59 லட்சம் கோடியாக இருந்தது.

ரூ.2.15 லட்சம் கோடி

சென்ற நிதி ஆண்டில் (2018-19) ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.2.15 லட்சம் கோடியை புதிய பிரிமிய வருவாயாக ஈட்டி இருந்தன. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 10.7 சதவீத வளர்ச்சியாக இருந்தது. அதில் எல்.ஐ.சி. நிறுவனம் மட்டும் ரூ.1.42 லட்சம் கோடியை ஈட்டியது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story