சிறப்புக் கட்டுரைகள்

கொரோனா வைரஸ்:வருமுன் காப்போம் + "||" + Coronavirus: Protect Before Come

கொரோனா வைரஸ்:வருமுன் காப்போம்

கொரோனா வைரஸ்:வருமுன் காப்போம்
கொரோனா வைரஸ் பரவலாக்கலை தடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. நோய் தாக்கம் பெரிய அளவில் இருந்தால், இப்போது இருக்கும் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை கொண்டு அதை சமாளிப்பது கடினம்.
கோவிட்-19 (கொரோனா) நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 114 ஆக அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஒ) இதை ஒரு பெரும் தொற்று நோய் தாக்குதல் என்று அறிவித்துள்ள நிலையில், இதன் பரவலை தடுக்கவும் இந்தியா தயாராக உள்ளதா ? கடுமையான பரவலாக்களை சமாளிக்க முடியுமா ?

மார்ச் 16 வரையில், 17 வெளிநாட்டினர் உள்ளிட்ட 114பேர்களுக்கு நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை பற்றி அச்சம் பரவி, இந்தியா முழுவதும் மக்கள் பொது இடங்களுக்கு செல்வதையும், பயணங்கள் மேற்கொள்வதையும் குறைத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், தெருக்களில் எச்சில் துப்புவது,கைகளை சோப்பு கொண்டு கழுவாமல் இருப்பது, மோசமான சுகாதார பழக்கங்கள் கொண்ட மக்களை கொண்டுள்ள இந்தியாவினால் வர இருக்கும் பெரும்அச்சுறுத்தலை சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாறி வரும் சூழல்களை சமாளிக்கும் திறன்களை மருத்துவமனைகள் கொண்டுள்ளனவா ?நோய் பரவலாக்கலை கட்டுப்படுத்த, மருத்துவமனைகளில் போதுமான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் மற்றும் ஐ.சி.யு.க்கள் உள்ளனவா ? தேசிய அளவில் ஒழுங்கை கடை பிடிக்கும் கட்டுப்பாடு நமக்கு உள்ளதா ? மருத்துவ கட்டமைப்புகள்

“இந்தியாவில் கோவிட்-19 பரவலாக்கலை தடுக்க, சந்தேகத்திற்குள்ளாகும் அனைவரையும் பரிசோதிக்க அல்லது தனிமைப்படுத்த நாம் அசாதாரணமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’’ என்று பெங்களூருவைச் சேர்ந்த பொது மருத்துவத்திற்கான இந்திய நிறுவனத்தின் தொற்று நோய்த் துறையின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் கிரிதரா ஆர் பாபு கூறுகிறார். “இந்த பொன்னான சந்தர்ப்பத்தை நாம் தவற விட்டோம் என்றால், பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளை சமாளிக்கும் திறன் இல்லாத நம் அமைப்பு சீர் குலையும். சிக்கலான நிலையில் உள்ள இந்த நோயாளிகளுக்கு செயற்கை சுவாச கருவிகளும், ஐ.சி.யு.க்களும் தேவைப்படும். அதற்கு தேவையான எண்ணிக்கையில் நம்மிடம் இவை இல்லை’’ என்கிறார்.

இந்தியாவில் கிராமப்புறங்களில் 2,65,275 படுக்கைகளை கொண்ட 21,403 அரசு மருத்துவமனைகளும், நகர்ப்புறங்களில் 4,48,711 படுக்கைகளை கொண்ட 4,375மருத்துவமனைகளும் உள்ளதாக மருத்துவ புலானாய்வுக்கான மத்திய அலுவலகம் வெளியிட்டுள்ள தேசிய மருத்துவ ஆய்வு 2019 அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளமுதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.தமிழகத்தில் கிராமப்புறங்களில், 40,179 படுக்கைகளை கொண்ட 692 மருத்துவமனைகளும், நகர்ப்புறங்களில்37,353 படுக்கைகளை கொண்ட 525 மருத்துவமனைகளும் உள்ளன. இவற்றில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான மருத்துவமனைகள் அனைத்தும் அடங்கும்.

இந்திய அளவில், பொது மருத்துவமனைகளில்,தீவிர சிகிச்சை பிரிவு வசதிகளில் பற்றாக்குறை உள்ளது. ஒரு மருத்துவமனை, எவ்வகையான நோய்களுக்கான சிறப்பு வசதிகளை, எந்த அளவில் கொண்டுள்ளது என்பதை பொருத்து, அதன் ஐ.சி.யு.க்களில் (தீவிர சிகிச்சை பிரிவு) உள்ள படுக்கைகளின் எண்ணிக்கைஅமைந்திருக்கும். இந்தியாவில் பொது மருத்துவமனைகளில் 70,000 ஐ.சி.யு படுக்கைகள் உள்ளதாகவும், அவற்றில் 8,000 மட்டும் தரமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, தனது அறிக்கையில் (2006-2007) கூறுகிறது.சுவாச நோய்களுக்கான ஐ.சி.யு.க்களில், செயற்கை சுவாச கருவிகள் தொடர்புடைய நிமோனியா நோய்தான் மிக அதிகமாக பரவும் தொற்று நோயாக உள்ளதாக நோய் தொற்று கட்டுப்பாடு மற்றும் முன் தடுப்புகளுக்கான இதழில் வெளியான, இந்திய பொது மருத்துவமனைகளில் உள்ள ஐ.சி.யு.க்களில் மருத்துவம் சார்ந்த நோய்தொற்றுகள் பற்றி 2019-ல் செய்யப்பட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் பொது மருத்துவத் துறைக்கு தேவையான மருத்துவர்கள் இல்லை. இந்தியாவில் 10,189 மக்களுக்கு ஒரு அரசு மருத்துவர் உள்ளதாக நோய்களின் போக்குகள், பொருளாதாரம் மற்றும் கொள்கைக்கான மையம் 2019-ல் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம் இது 1 : 1,000ஆக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.இதன் படி இந்தியாவில் ஆறு லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. செவிலியர் நோயாளிகள் விகிதம் 1 : 483ஆக உள்ளது. இது இந்தியாவில் சுமார் 20 லட்சம் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதை சுட்டுகிறது. 2020-ல் பொது மருத்துவத்திற்கு மத்திய, மாநில அரசுகள் மொத்தமாக, ஜி.டி.பி.யில் 1.6 % ஒதுக்கின. இது உலக சராசரியான 6 % விட மிகக் குறைவாக உள்ளது. நோய் பரவலாக்கல் மிக வேகமாக இருப்பதையும், இந்தியாவில் நோய் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் கொண்டு, இந்தியாவில் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை பற்றி கவலை எழுந்துள்ளது. “தற்போது தமிழகத்தில், கோவிட்-19 நோயாளிகளுக்கு,255 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை விரிவுபடுத்த, மேலும் பல இடங்களை தேர்வு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க, பல முன்னணி தனியார்மருத்துவமனைகளின் ஒத்துழைப்பையும் பெற்றுள்ளோம். கோவிட்-19 தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம்’’ என்று தமிழ்நாடு பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறையின் இயக்குனர் டாக்டர் கே.குழந்தைசாமி கூறுகிறார்.

“இந்த நோயை கட்டுப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பும், பொறுப்புணர்வும் மிகவும் தேவைப்படுகிறது. மக்கள் தங்களின் கைகளை தினமும் குறைந்தது 10 முதல் 15 முறை கழுவ வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் தங்களின் வாயை மறைத்துக் கொள்ள வேண்டும். தரைகளை மட்டுமல்லாமல் அனைத்துதளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்’’ என்கிறார்.

சோதனை ஆய்வகங்கள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு (ஐ.சி.எம்.ஆர்) - வைரஸ் நோய்களுக்கான தேசிய நிறுவனம், பூனே, உறுதி செய்யப்பட்ட கோவிட்-19 மாதிரிகளை மறு ஆய்வு செய்து இறுதி செய்யும் தலைமை சோதனை ஆய்வகமாக திகழ்கிறது.மாதிரிகளை சோதிப்பதற்கான தர நிர்ணயக் கட்டுப்பாடுகளை உறுதி செய்வதிலும்,தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதிலும் ஈடுபட்டுள்ளது. பயோ பாதுகாப்பில் 4-ம் கட்ட (பயோ பாதுகாப்பில் உச்சபட்ச பிரிவு), எபோலா வைரஸ் போன்ற தொற்று நோய் கிருமிகளை கையாளும் திறன் கொண்டது. 
இந்தியாவில் தற்போது கோவிட்-19க்கான 52 சோதனை ஆய்வகங்களும், மாதிரிகள் சேகரிப்பில் உதவ 57 சோதனை ஆய்வகங்களும் உள்ளதாகஐ.சி.எம்.ஆர்.தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவின் கோவிட்-19 சோதனை மையங்களில், சென்னையில் உள்ள கிங் நோய் தடுப்பு மருத்துவ நிறுவனமும் (கே.ஐ.பி.எம்.ஆர்)ஒன்று. இந்த சோதனை மையங்களில் 25,000 மாதிரிகள் வரை சோதனை செய்ய வசதிகள் உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கான இணைஅமைச்சர் அஸ்வினி குமார் சவுத்திரி, மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்தார். 

சிகிச்சைக்கான மருந்துகள்

இதை குணப்படுத்த குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லாததால், கோவிட்-19 நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு, தற்போது பலம் அளிக்கும், நோய்அறிகுறிகளுக்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மார்ச் 2019-ல், மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின் கீழ் வரும் புதிய மருந்துகள் மற்றும் மருந்து சோதனைகளுக்கான விதிமுறைகள் (என்.டி.சி.டி) அமலுக்கு வந்தது. இதில் பொது மருத்துவம் தொடர்பான அவசர காலங்களில், அங்கீகாரம் பெறப்படாத மருந்துகளுக்கு மிக விரைவான முறையில் அங்கீகாரம் அளிக்கும் நடைமுறைகளும் அடக்கம். எனவே அவசர காலங்களில், பல கூறுகளை கொண்ட மருந்துகளை குறைந்தபட்ச அளவில் பயன்படுத்த அனுமதி பெற முடியும். கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் பல்வேறு மருந்துகளை உலகெங்கும் பல நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. 

“கோவிட்-19 தாக்குதல் போன்ற அவசர கால நிலைகளை சமாளிக்க தேவையான மருந்துகளை சோதனை செய்து பார்க்க தேவையான ஒழுங்குமுறை சட்டங்கள்உருவாக்கப்பட்டுள்ளன. நெறிமுறைகளை சீராய்வு செய்யவும், கண்காணிக்கவும் நாடு முழுவது பதிவு செய்யப்பட்ட நெறிமுறைகள் குழுக்கள் உள்ளன. இந்த அமைப்பின் மூலம், தேவைபடும் ஒரு புதிய மருந்தை அல்லது பல புதிய மருந்துகளை சோதிக்க முடியும். சோதனை முறைகள், சோதனை செய்யப்பட வேண்டியமருந்துகள் பற்றிய முடிவுகளை, அதி வேகமான மருந்து சோதனைகளை தீவிரமாக சீராய்வு செய்து, உறுதி செய்யும் நிபுணர்கள் குழுமங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒழுங்குமுறையாளர்கள் எடுப்பார்கள்’’ என்று ஐ.சி.எம்.ஆரின் நோய் தகவலியல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தை சேர்ந்த டாக்டர் ரோலி மாத்தூர் கூறுகிறார். 

இந்தியாவிடம் ‘மருந்துகள் போதுமான அளவுக்கு இருப்பு’ உள்ளதாகவும், சீனாவில் மருந்து உற்பத்தியை கோவிட்-19 தொடர்ந்து சீர்குலைத்தால், சீனாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதாக ரசாயனம் மற்றும் உரங்களுக்கான மத்திய அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா,மக்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்தார். இந்தியாவின் மருந்து இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவில் இருந்து வருகிறது.

இந்தியாவின் மருந்துகள் ஏற்றுமதி பெரும்பாலும் அமெரிக்காவிற்குதான் செல்கிறது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறைகளுக்கான மத்திய அமைச்சரகம் கூறுகிறது. மார்ச் 3, 2020-ல், பாரசிட்டமால் உள்ளிட்ட26 முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் மற்றும் மருந்துகள் ஏற்றுமதியை இந்தியாமட்டுப்படுத்தியுள்ளது. 2018-19-ல் 1438.9 கோடி டாலர்கள் மதிப்புடைய மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மருந்துகள், கைகளை சுத்தப்படுத்தும் திரவகங்கள் மற்றும் முகமூடிகளை, அச்சம் காரணமாக பெரிய அளவில் வாங்குவது பல கடைகளிலும்,ஆன்லைன் விற்பனை தளங்களிலும் பரவலாகியுள்ளது.

இந்த பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு ஒரு முகமூடியின் விலை ஒரு ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இன்று சுமார் ரூ.18ஆக உள்ளது. கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான பல மருந்துகளை உலகெங்கும் பல நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. “திட்டமிட்ட படி எல்லாம் நடைபெற்றால், கோவிட்-19க்கான மருந்து, 2021-க்குள் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வர சாத்தியமுள்ளது. அடுத்த சில வாரங்களில்,நோய் தடுப்பூசிகளுக்கான மருந்து சோதனைகள் தொடங்க வாய்ப்புள்ளது’’ என்கிறார் டாக்டர் கிரிதரா ஆர் பாபு.

சேதங்களை மட்டுப்படுத்துதல்

“இந்தியா இப்போது நோயை மட்டுப்படுத்தும் நிலையில் உள்ளது. புதிய நோயாளிகள் உருவாகாமல் தடுப்பதும், நோயாளிகளின் எண்ணிக்கையை மருத்துவ சேவைத் துறையின் திறன்களுக்கு ஏற்ற வகையின் மட்டுப்படுத்துவதும் மிக முக்கியமானது. ஏனென்றால் நம்மிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவளங்கள் தான் உள்ளன. இதை ‘வளைவை நேர்படுத்துதல்’ என்பார்கள். 

இதை நாம், சமூக விலக்குகள், சோதனை வசதிகளை பரவலாக்குதல், கண்காணிப்பு அமைப்புகளை அதிகரித்தல், பயணங்களை மட்டுப்படுத்துதல் மற்றும் மக்கள் பெரும் திரளாக கூடுவதை தடுத்தல் போன்ற நோய் பரவலை கட்டுப்படுத்தும் முறைகள், முன்ணணியில் பணியாற்றும் மருத்துவ சேவைத் துறை ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பை அளித்தல், மருத்துவமனைகளில் நோய் தொற்றை கட்டுப்படுத்துதல், தனியார் மற்றும் பொது மருத்துவ துறைகளின் கூட்டு முயற்சிகள், அதிக அளவில் செயற்கை சுவாச கருவிகள் மற்றும் ஆக்சிஜன் உதவி அளித்தல், நோய் பரவல் பற்றி எச்சரிக்கைகளை அனுப்புதல் மற்றும் பொது மக்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகியவை மூலம் செயல்படுத்தலாம்” என்று இந்திய பொது மருத்துவ அறக்கட்டளையின் மூத்த பொது மருத்துவ விஞ்ஞானியும், சிஙகப்பூரின் நிலைத்தகு மருத்துவ புத்தாக்கங்களுக்கான நிறுவனத்தின்இயக்குனருமான டாக்டர் பிரியா பாலசுப்பரமணியம் கூறுகிறார். 

“முதியோர்கள், நிரந்தர நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வர்கள்,விமான நிலைய ஊழியர்கள், பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை பணியாளர்கள், கட்டுமானத் துறை தொழிலாளர்கள், சேரிகள் போன்ற எளிதாக நோய் பாதிக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள், வீடற்றவர்கள் ஆகியோருக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிக பாதுகாப்பை அளிக்க வேண்டும். இந்த தொற்று நோய் தாக்குதலை ஒரு தூண்டுதலாக கருதி,பொது மருத்துவமனைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க செய்து, மருத்துவ சேவை அமைப்புகளில் தரக்கட்டுப்பாடுகளை மேம்படுத்த வேண்டும்” என்கிறார்.ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பாதிப்பு?

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி, மனிதகுலத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்க்கிருமியிடம் இருந்து தங்கள் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு நாடும் மும்முரமாக எடுத்து வருகின்றன. சீனாவை அடுத்து இத்தாலியில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனாவின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை மக்கள் அறிந்துகொள்வதற்காக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ‘கோவிட்-19 மேப்’ என்ற உலக வரைபடத்தை வடிவமைத்து உள்ளது. இதற்கான இணையதளத்தில் சென்று பார்த்தால் உலக அளவில் கொரோனா நோய்க்கிருமியால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்? எந்தெந்த நாட்டில் எத்தனை பேரை இந்த நோய்க்கிருமி தாக்கி இருக்கிறது? எத்தனை பேர் பலியாகி உள்ளனர்? எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்? என்பன போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் அந்தந்த நாடுகள் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில், இந்த வரைபடத்தில் தகவல்கள் உடனுக்குடன் சேர்க்கப்படுகின்றன. இந்த உலக வரைபடத்தில் எந்த நாட்டை பற்றிய தகவலை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ, அதன் மீது ‘கிளிக்’ செய்தால், அந்த நாட்டில் கொரோனோவின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

கொரோனா வைரஸ்: உதவி மைய எண்கள் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும், அது குறித்த விவரங்களை தெரிவிக்கவும் உதவி மைய எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 044-29510500 என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்புகொண்டு கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். இதுபோல புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 104 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். ஏற்கனவே மத்திய அரசு இதுதொடர்பாக, 011-23978046 என்ற தொலைபேசி எண்ணை மைய உதவி எண்ணாக அறிவித்துள்ளது. தற்போது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவுக்கு 086-62410978, கேரளாவுக்கு 047-12552056, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு 104 என உதவி தொலைபேசி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

- விமர்சனங்களை மின்னஞ்சலில் அனுப்ப: NRD.thanthi@dt.co.in

தொடர்புடைய செய்திகள்

1. புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரசால் மிகப்பெரிய ஆபத்து...!
கொரோனா நோயாளி முக கவசம்அணியாமல் தும்மினாலோ, இருமினாலோ வைரஸ் சுற்றியிருப்பவர்களை தாக்கும்.
2. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. கணவருக்கு ‘93’ மனைவிக்கு ‘88’ கொரோனா வைரசில் இருந்து மீண்ட வயதான கேரள தம்பதியர் - குணமடைந்தது எப்படி? ருசிகர தகவல்கள்
கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
4. 2-ஆம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது: ஐ.நா தலைவர்
2-ஆம் உலகப் போருக்கு பின்னர் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது என்று ஐநா தலைவர் கூறினார்.
5. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.