கொரோனா ஒரு அறிவியல் பாடம்


கொரோனா ஒரு அறிவியல் பாடம்
x
தினத்தந்தி 18 March 2020 8:43 AM GMT (Updated: 18 March 2020 9:00 AM GMT)

இன்று சீன நாட்டின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ், மற்ற நாடுகளுக்கு பரவி விடாமல் இருக்க பெருமுயற்சி நடைபெறுகிறது. இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இன்றைய நிலையில் 100-க்கும் மேற்பட்டோருக்கு நோய் அறிகுறிகள் உள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் வரும் காலங்களில் தான் இதன் முழு தாக்கம் புரியும். வைரஸ் நோய் உலகை அச்சுறுத்துவது ஒன்றும் புதிதல்ல.

இதில் கொரோனா வைரசின் அறிகுறிகள் சார்ஸ் வைரஸ் போன்ற அறிகுறிகள் தான். சார்ஸ் தொற்று அறிகுறி இருப்பதாகக் கூறிய உகான் மருத்துவரான லீ லென்லியாப் என்பவரை சீனா காவல் துறையினர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதில் பரிதாபம் என்னவென்றால் அவரும் இந்த நோயால் இறந்துவிட்டார். பெரும் நோய்கள் மனித குலத்தை அழித்த நிகழ்வுகள் வரலாற்றில் பல உண்டு. 1347 முதல் 1351 வரை உலகை அச்சுறுத்திய பெரும் கொள்ளை நோயால் சுமார் 20 கோடி மக்கள் இறந்தார்கள். லண்டனில், இந்த பெருநோய் 1665-ம் ஆண்டு லட்சம் பேரைக் கொன்றது. இதே சீனாவில் 1855-ம் ஆண்டு, உகான் நகரில் உருவான கொள்ளை நோய் எலிகள் மூலமாக பரவி இந்தியா மற்றும் சீனாவில் 150 லட்சம் மக்களைக் கொன்று குவித்தது.

அன்றைய கால கட்டத்தில் இந்த நோய்கள் வானிலிருந்து மனிதனை மிரட்ட அனுப்பட்ட நோய் என்று மத குருமார்கள் சொல்லி வந்தனர். பேய், பிசாசு, முனி இதற்கு காரணம் என்றும் பாமர மக்களின் நம்பிக்கைகள். இப்படிப்பட்ட நோய்கள் ஏற்படும் விதம், இவற்றை ஏற்படுத்தும் காரணி போன்றவை நமக்கெல்லாம் தெரிய வைத்தவர்கள் மாபெரும் உயிரியல் விஞ்ஞானிகள். அதில் லூயி பாஸ்டர், ராபர்ட் கோச் போன்ற உயிரியல் அறிஞர்களுடைய “நுண்ணுயிரிகள் நோய்களுக்கான காரணி” என்ற கோட்பாடு புரட்சியை ஏற்படுத்தியது. மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்துவது பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா போன்ற கிருமிகள் என்றார்கள் இவர்கள். எடுத்துக்காட்டாக பாக்டீரியா நுண்ணுயிரி, என்புருக்கி, காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்படுத்தும். வைரஸ் நுண்ணுயிரி, பெரியம்மை, சளி, மஞ்சள் காமாலை, இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்களை ஏற்படுத்தும். நாம் இப்போது எதிர்கொள்ளும் கொரோனாவும் ஒரு வைரஸ் நோய்தான்.

பாலை கொதிக்க வைத்து பின்னர் திடீரென குளிர்படுத்தினால் நோய்க் கிருமிகள் செத்துவிடும் என்றும் லூயி பாஸ்டர் கண்டறிந்தார். எட்வர்டு ஜென்னர் என்பவர் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்ததும், ஜொனால் சார்க் என்பவர் இளம் பிள்ளை வாத நோய்க்கு மருந்து கண்டுபிடித்ததும் பெரிய மருத்துவ புரட்சியாக அமைந்தன.

இந்திய நாட்டு மக்களை தாக்கிய மலேரியா நோய் ‘புரோட்டோசோவா’ என்ற தொற்று கிருமியால் ஏற்படுகிறது என்று கண்டுபிடித்தவர் ரொனால்டு ரோஸ் என்ற சென்னையில் வேலைபார்த்த ஆங்கிலேய மருத்துவர் ஆவார். அந்த அனாப்லஸ் கொசுவை குன்னூரில் பிடித்து ஆய்வு செய்தார். அதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

உண்மை இப்படியிருக்க, பல நாடுகளிலும் உள்ளூர் மருத்துவர்கள் எந்த நோயைப்பற்றி தகவல் வந்தாலும் அந்த நோய்க்கு அவர்கள் மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள் என்று அறிவித்துவிடுகிறார்கள். அதையும் பாமர மக்களும் நம்பி விடுகிறார்கள். நமது நாட்டு முன்னோர்களின் மருத்துவ முறை எவ்வளவு உயர்ந்தது என்றும் பேசி மகிழ்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட உரிமைகோரிக்கையில் எந்த ஆதாரமும் இருக்காது. உள்நாட்டு மருந்துகளால் இங்கே ஒருவருக்கு குணமாகிவிட்டது, அங்கே ஒருவரை குணப்படுத்தினேன் என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள்; . பாமரர்கள் இதை நம்பிவிட்டாலும் அறிவியல் அறிஞர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஏனென்றால் இவை ஆய்வுக்கு உட்படுத்தாத, போகிற போக்கில் சொல்லப்பட்ட வெற்று கண்டுபிடிப்புக்கள். புதிய வைரஸ் நோயின் தன்மை, அது உடலில் பரவும் விதம், அதன் வேதியியல் தன்மை, அதன் உடல் அமைப்பு, அதன் மறு உருவம் போன்றவற்றை ஆராய பல நூறு மருத்துவர்கள், பலவித நுண்நோக்கிகள், பல நோயாளிகள், பல நூறு கோடி ரூபாய்கள் செலவாகும். அதற்குப் மேலாக, இது பல ஆண்டுகள் காலம் பிடிக்கும். இப்படிப்பட்ட முயற்சியின் பின்னர்தான் மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதுவரை இன்றும் மருந்து கண்டுபிடிக்கவில்லை, முயற்சிக்கிறோம் என்றுதான் விஞ்ஞானிகள் கூறுவார்களே தவிர, பாரம்பரிய வைத்தியர்கள் போல எங்களிடம் மருந்து தயாராக உள்ளது என்று பொறுப்பற்ற பதிலை கூறிவிடமாட்டார்கள். 

தொற்று நோய் என்பது மக்களின் உயிருடன் விளையாடும் நோய் என்பதால் அறிவியல் மருத்துவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகளைத்தான் நாம் அறிவியல் பாடப்புத்தகத்தில் படிக்கிறோம். அவர்களை நாம் மதிக்க வேண்டும். நமது நன்மைக்காக அதை நாம் செய்ய வேண்டும்.

புதிய புதிய நோய்கள் இந்த உலகை அச்சுறுத்துவது இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் இந்த நூற்றாண்டில் அந்த கொடிய நோய்களை கண்டு அஞ்சாமல், அவற்றை யாரோ ஒருவர் அனுப்பி வைத்தார் என்று நம்பாமல் அந்த நோயை ஏற்படுத்தும் கிருமி எது, அது எப்படி பரவுகிறது என்பதை ஆராய்ந்து அறிந்து அதை முற்றிலும் ஒழிக்கும் பணியை இன்றைய அறிவியல் சமுதாயம் செய்கிறது.நுண்ணுயிரிகள் சிறியவை ஆனால் நம்மை விட பலம் வாய்ந்தவை; அவை ஒரு நாள் நம்மை ஆட்கொண்ட பின்னர் நம்மை உட்கொள்ளும். அதுவரை தனிமனிதன் அந்த நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடுவான். அந்த போராடும் சக்தி இருக்கும் வரை அவன் உயிர் வாழ்வான். இது தான் அறிவியல் உண்மை.

சிங்கத்தையும் புலியையும் பிடித்து வண்டலூர் பூங்காவில் கூண்டில் அடைத்த மனிதனால் 0.1 மைக்ரான் அளவுள்ள வைரஸை எளிதில் வெல்ல முடியவில்லை. இந்த உலகில் சுமார் 15 லட்சம் உயிரினங்களுக்கும் பூமி சொந்தம், அதில் நாமும் ஒருவர் என்ற தன்னடக்கம் நமக்கு வேண்டும்.

1930-ம் ஆண்டு இந்தியாவில் காலரா தொற்றுநோய் பலரை கொன்றது. அந்த நோய் குடிக்கும் தண்ணீர் மூலம் பரவுகிறது என்பதையும், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்று மக்களுக்கு புரிய வைக்க ஆங்கில மருத்துவர்கள் படாதபாடு பட்டார்கள். ஆனால் இன்று சமூக ஊடகங்கள் அந்த அரிய பணியை நொடிப்பொழுதில் செய்துமுடித்துவிட்டது. 

இருமினால் அல்லது தொடுவதால் வைரஸ் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற உண்மையையும், கைகளை கழுவினால் தவிர்க்கலாம் என்ற உண்மையையும் அறிவியல் ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்தியும், தேர்வுகள் வைத்தும் புரிய வைத்ததை விட இந்த கொரோனா வைரஸ் மக்களுக்கு எளிதில் கற்றுக் கொடுத்துவிட்டது. வினை தீர்க்க நாம் நாடும் வழிபாட்டு தலங்களுக்கே வர வேண்டாம் என்ற அறிவிப்புகள் வருமளவு வைரஸ் விழிப்புணர்வு பெருகிவிட்டது.

கொரோனா வைரஸ் பற்றி அச்சமடையலாம், ஆனால் பீதி வேண்டாம். உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மருத்துவர்கள் நம்மிடத்தில் இருக்கிறார்கள் என்பதில் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் அறிவுள்ள பொதுமக்களாக நாம் இருக்கிறோமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவந்துவிடும். கொரோனா ஒரு அறிவியல் பாடம்.

- முனைவர். செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ், காவல்துறை தலைமை இயக்குனர்.

Next Story