சிறப்புக் கட்டுரைகள்

மனச்சோர்வுக்கு மகத்தான மருந்து + "||" + Great medicine for depression

மனச்சோர்வுக்கு மகத்தான மருந்து

மனச்சோர்வுக்கு மகத்தான மருந்து
வாழ்வில் ஒவ்வொரு விஷயமும் நாம் எதிர்பார்க்கிற வண்ணம் நடந்து கொண்டிருந்தால் மனம் மகிழ்ச்சியடைகிறது. ‘அடடா! அற்புதமான வாழ்க்கை’ என்று எண்ணி பெருமிதம் கொள்கிறது. மழை வேண்டும் என்று நினைத்துவிட்டால், உடனே மழை வந்தாக வேண்டும்.
மழை போதும், வெயில் வேண்டும் என்று விரும்பி விட்டால், உடனே வெயிலடிக்க வேண்டும். தூர்வாராமலே கிணற்றில் நீர் சுரக்க வேண்டும். இப்படி எல்லாமே ஆசைப்படி அமைந்துவிட்டால் மனதின் உற்சாகத்திற்கு குறைவே இருக்காது.

தேர்வில் வெற்றி, உயர் பதவி, ஊதிய உயர்வு, வியாபார விருத்தி என அனைத்துமே தங்குதடையின்றி வந்துவிட வேண்டும் என்றுதான் மனித மனம் ஆசைப்படுகிறது. அப்படி நடந்து விட்டால் நல்லது தான். ஆனால் அப்படியே தான் நடக்கும் என்ற நியதி ஏதும் இல்லையே.

மேடு வரும், பள்ளம் வரும். சாலை என்றால் ஏற்ற இறக்கம் இல்லாமலா!. லாபம் வரும், நஷ்டம் வரும். வியாபாரத்தில் இல்லாததா!. காதல் வரும், மோதல் வரும். காவியங்கள் சொல்லாததா!. சிரிப்பு வரும், அழுகை வரும். நம் கண்ணும் நெஞ்சும் காணாததா!. வாழ்க்கை என்றால் எல்லாம் இருக்கத்தான் செய்யும். நிமிடந்தோறும் தித்திப்பு என்றால் வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது. அதீத தித்திப்பு ஆரோக்கியமும் அல்ல. எல்லாமே நமக்கு தேவை. அப்படியானால்தான் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும், உறுதிமிக்கதாகவும் விளங்கும்.

நேற்றிருந்தது போல் இன்று இருப்பதில்லை, இன்று இருப்பதுபோல் நாளை இருப்பதில்லை. எனவே எத்தகைய சவால்களையும் மிகச்சாதாரணமாக எதிர்கொள்ள கூடிய மனோதிடமே மிக அவசியம். சின்னச் சின்ன காயங்களை பார்த்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தால், சுய பரிதாபமே மனதை பலவீனப்படுத்தி கோழை ஆக்கி விடும். புத்தியும் மழுங்கிப் போகும். நம் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் முழுமுதல் எதிரி நம் ‘மனச்சோர்வுதான்’ என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

மெல்ல கொல்வது என்பதற்கு சிலந்தி ஒரு சரியான உதாரணம். பெண் சிலந்தி நுட்பமாக வலை பின்னும் கூர்ந்து பார்த்தால் மென்மையாகத் தெரியும். ஆனால் இரையைத் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்கும். அந்த வலையில் பூச்சி மாட்டிக்கொண்ட மறுகணமே பாய்ந்து சென்று தனது கொடுக்கினால் ஒரு வகை திரவத்தை செலுத்தும். சிலந்தியின் விஷம் ஏறியதும் ஒரு மயக்கத்தில் பூச்சி உயிரை விட, அதை ஒரு வாரம் வைத்து நிதானமாக சாப்பிடும்.

அதை போன்றதுதான் மனச்சோர்வு என்னும் கொடிய வலை. அதில் நாம் வீழ்ந்துவிட்டால், விரக்தியே நம் வாழ்க்கையை மெல்ல மெல்ல தின்று தீர்த்துவிடும். எனவே மனச்சோர்வுக்கு ஒருபோதும் இடம் கொடுத்துவிடாதீர்கள். எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மேற்கொள்ள முடியும் என்ற எண்ணமே உங்கள் வாழ்வை சுலபமாக்கும்.

பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அவைகளை அலட்சியப் படுத்திவிட்டால், அவற்றில் எந்தவொன்றும் உங்களை தொட முடியாது. அவை வந்த வழியே திரும்பி போய்விடும். வாழ்வில் கிடைக்க பெற்றிருக்கின்ற நன்மைகளையும், நற்பேறுகளையும் எண்ணி எண்ணி மகிழ்வுறுவதே வாழ்வின் பேரின்பம். நினைத்துப் பார்த்து நெஞ்சம் நெகிழ்வதற்கு எத்தனையோ நல்ல விஷயங்கள் நம் வாழ்வில் உண்டே! எண்ணிப் பார்க்கின்றோமா?

மீனை விரும்பி சாப்பிடுபவர்களில் பலர் அதன் தலையை ருசிப்பதில்லை. மீனின் உடற்பகுதியைவிட தலைப்பகுதிதான் அதிக சத்து கொண்டதாக இருக்கிறது. தலைப்பகுதியில் பலவகை வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. ஆனால் கடைகளில் மீன் வாங்கும்போது அதன் தலையை தவிர்த்துவிடுபவர்கள் உண்டு.

அப்படிதான் வாழ்வின் உன்னத விஷயங்களை தவிர்த்துவிட்டு, மனதை சோர்வுக்கு உட்படுத்துகின்ற விஷயங்களிலேயே சிலர் கவனம் செலுத்தி கொண்டிருப்பார்கள். புரமோஷன் வருமோ, வராதோ? என்ற பதற்றம். வேலை போய்விடுமோ? என்ற பயம்.

தங்கம் விலை ஏறிக்கொண்டே இருக்கிறதே, வாங்க முடியுமா? என்ற கலக்கம். வேலைக்காக வெளிநாடு சென்ற மகன் அங்கே கட்டுப்பாட்டுடன் இருப்பானா? என்ற சந்தேகம். இன்னும் வீடு வாங்க முடியவில்லையே என்னும் அங்கலாய்ப்பு!. பக்கத்து வீட்டுக்காரன் கார் வாங்கிவிட்டானே! என்ற புகைச்சல்.

இப்படி தேவையற்ற எண்ணங்களையும், ஏக்கங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக தொடுத்துக் கழுத்தில் போட்டுக் கொண்டால், கழுத்தும் முதுகும் வளைந்து வாழ்க்கையே கோணலாகி விடத்தானே செய்யும். மகிழ்ச்சியுடன் இருப்பவர்களுக்கு சஞ்சலமும், தவிப்பும் ஏற்படாது. அதுதான் புத்திசாலித்தனம். ஒருவனின் புத்தி சாதுர்யம் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலை அவனுக்கு தருகிறது.

சிந்தனை, ஊக்கம், கடும் உழைப்பு ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் புத்திக்கூர்மை என்றார் ஃபிரான்சில் கால்ட்டன். பேச்சுத் திறமை, வார்த்தை சரளம், எண்களில் திறமை, முப்பரிமாண சிந்தனை, உணர்வு, ஊகம், ஞாபகம் ஆகியவை புத்திசாலித்தனத்திற்கான ஏழு அம்சங்கள் என்றார் தர்ஸ்டோன். இவற்றுடன் இன்னொன்றையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் ‘துணிச்சல்’.

தேவையற்ற பயமும், கலக்கமும் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்றன. நடப்பது நடக்கட்டும், நேருக்கு நேர் பார்த்துவிடலாம் என்று துள்ளி எழுந்துவிட்டால் பிரச்சினைகள் தள்ளி போய்விடும். இதனால்தான், மனதில் உறுதி வேண்டும் என்றான் பாரதி. நம் மனதை பலவீனப்படுத்தக் கூடிய எத்தனையோ விஷயங்களை நாம் சந்திக்க நேரிடலாம். ஆயினும் கலங்கிவிடக் கூடாது. புலம்பித் திரியக் கூடாது. ஏனெனில், நம் எதிர்மறை எண்ணங்களும் கோழைத்தனமான வார்த்தைகளுமே நம் மனதை சிதைத்துவிடும். எனவே திடம் கொள்ளுங்கள். இலக்கை நோக்கிய பார்வை, தொய்வுறாத உழைப்பு, உள்ளத்தின் உற்சாகம் ஆகியவற்றின் கூட்டு கலவையே நம் மனச்சோர்வை மாற்றும் மகத்தான மருந்து. இதனை கைக்கொண்டால் போதும். மனச்சோர்வு ஓடிவிடும்; நம் வாழ்க்கை கோடிபெறும்.

- கவிஞர் தியாரூ, தமிழகஅரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருதுபெற்றவர்.