சந்தை நிலவரங்கள் காரணமாக பர்கர் கிங் இந்தியா நிறுவனத்தின் பங்கு வெளியீடு ஒத்திவைப்பு


சந்தை நிலவரங்கள் காரணமாக பர்கர் கிங் இந்தியா நிறுவனத்தின் பங்கு வெளியீடு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 18 March 2020 9:37 AM GMT (Updated: 18 March 2020 9:37 AM GMT)

பர்கர் கிங் இந்தியா நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியைத் திரட்டும் வகையில் புதிய பங்குகள் வெளியிட உத்தேசித்தது.

புதுடெல்லி

துரித சேவை ரெஸ்ட்டாரன்ட் நிறுவனமான பர்கர் கிங் இந்தியா நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு மோசமான சந்தை நிலவரங்கள் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது.

விரிவாக்க நடவடிக்கைகள்

பர்கர் கிங் இந்தியா நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியைத் திரட்டும் வகையில் புதிய பங்குகள் வெளியிட உத்தேசித்தது. எனவே அதற்கு அனுமதி கேட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செபி அமைப்புக்கு விண்ணப்பித்தது. அதற்கு செபி அனுமதியும் வழங்கி இருந்தது.

இந்தப் புதிய பங்கு வெளியீட்டில் நிறுவன முதலீட்டாளரான கியூ.எஸ்.ஆர். ஏஷியாவின் 6 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளது. இது தவிர ரூ.400 கோடிக்கு புதிய பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மொத்தத்தில் இந்த வெளியீடு மூலம் சுமார் ரூ.1,000 கோடி திரட்ட வாய்ப்புள்ளது. புதிய பங்குகள் விற்பனை மூலம் திரட்டும் நிதியை விரிவாக்கத் திட்டங்களில் முதலீடு செய்ய இருப்பதாக பர்கர் கிங் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த வெளியீட்டை கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், சி.எல்.எஸ்.ஏ. இந்தியா, ஜே.எம். பைனான்சியல் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. வெளியீட்டுக்குப் பின் பர்கர் கிங் இந்தியா நிறுவனத்தின் புதிய பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

இந்நிறுவனம் நடப்பு மார்ச் மாத இறுதிக்குள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்க தயாராக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக பங்குச்சந்தைகள் கண்டு வரும் கடும் சரிவு காரணமாக இந்த வெளியீட்டை தற்காலிக தள்ளி வைத்துள்ளது. உலக வியாபாரத்தை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், பொருளாதார மந்தநிலை போன்றவையே காரணம் என இந்நிறுவனம் கூறுகிறது. அன்மையில் பங்கு வெளியிட காத்திருந்த மற்றொரு நிறுவனமான ரொசாரி பயோடெக் தனது வெளியீட்டை தள்ளிப்போட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூன் 30 நிலவரப்படி, இந்தியாவின் 47 பெரும் நகரங் களில் பர்கர் கிங் இந்தியா நிறுவனம் சுமார் 202 ரெஸ்ட்டாரன்களை கொண்டுள்ளது. இத்துறையில் துரிதமாக வளர்ந்து வரும் நிறுவனங்களும் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.

புதிய வெளியீடுகள்

கடந்த 2019-ஆம் ஆண்டில் புதிய வெளியீடுகள் குறைந்து இருந்ததால் துணிகர மற்றும் தனியார் பங்கு முதலீட்டாளர்கள் பலர் நிறுவனங்களில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பங்கு வெளியீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் மேற்கண்ட முதலீட்டாளர்கள் அதிக அளவில் தமது முதலீடுகளை திரும்பப் பெறுவார்கள் என்பதால் நடப்பு ஆண்டில் இப்பிரிவு பரபரப்பாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story