பார்க் ஹோட்டல்ஸ் நிறுவனம் பங்கு வெளியிட செபி அனுமதி ரூ.1,000 கோடி திரட்ட முடிவு


பார்க் ஹோட்டல்ஸ் நிறுவனம் பங்கு வெளியிட செபி அனுமதி ரூ.1,000 கோடி திரட்ட முடிவு
x
தினத்தந்தி 18 March 2020 10:20 AM GMT (Updated: 18 March 2020 10:20 AM GMT)

பார்க் ஹோட்டல்ஸ் நிறுவனம் பங்கு வெளியிட பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கி உள்ளது.

பார்க் ஹோட்டல்ஸ் நிறுவனம் பங்கு வெளியிட பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கி உள்ளது. இவ்வெளியீடு மூலம் இந்நிறுவனம் சுமார் ரூ.1,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.

சொகுசு ஹோட்டல்

அபிஜே சுரேந்திரா குழுமத்தின் ஓர் அங்கமான பார்க் ஹோட்டல்ஸ் நிறுவனம் ‘தி பார்க்’ என்ற பிராண்டின் கீழ் சொகுசு ஹோட்டல்களை நடத்தி வருகிறது. அந்தக் குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் விருந்தோம்பல், கப்பல் போக்குவரத்து, தேயிலை, ரியல் எஸ்டேட், சில்லரை வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றன.

பார்க் ஹோட்டல்ஸ் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களிலும், ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜம்மு, நவி மும்பை, ரெய்பூர், விசாகப்பட்டினம், கோயமுத்தூர் போன்ற முதல் நிலை நகரங்களிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டும் வகையில் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்க தயாராகி இருக்கிறது. எனவே அதற்கு அனுமதி கேட்டு செபி அமைப்பிற்கு விண்ணப்பித்தது. செபி இப்போது அனுமதி அளித்து இருக்கிறது.

இந்த வெளியீட்டில் ரூ.400 கோடி மதிப்பிற்கான புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன. மேலும் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் ரூ.600 கோடி வரையிலான மதிப்பிற்கு பழைய பங்குகளும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் மொத்தம் ரூ.1,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

நிர்வகிக்கும் நிறுவனங்கள்

பார்க் ஹோட்டல்ஸ் பங்கு வெளியீட்டை ஆக்சிஸ் கேப்பிட்டல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஜே.எம். பைனான்சியல் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. வெளியீட்டுக்குப் பின் அதன் புதிய பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

Next Story