பொருளாதார சரிவில் இருந்து இந்தியா எழுச்சி பெறும்! சர்வதேச நிதியம் கணிப்பு


பொருளாதார சரிவில் இருந்து இந்தியா எழுச்சி பெறும்! சர்வதேச நிதியம் கணிப்பு
x
தினத்தந்தி 16 April 2020 3:00 PM GMT (Updated: 16 April 2020 3:00 PM GMT)

பொருளாதார சரிவில் இருந்து இந்தியா எழுச்சி பெறும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

புதுடெல்லி,

செவ்வாய்!

 சூரியனில் இருந்து நான்காவதாக இருக்கிற கோளுக்கு பெயர்தான் செவ்வாய்.

இந்த கோள், செந்நிறமாக இருப்பதால்தான் அதற்கு பெயர் செவ்வாய்.

ஆனால் வரலாறு, ‘கருப்பு செவ்வாய்’ என்று ஒரு நாளைப் பதிவு செய்து வைத்திருக்கிறதே, அந்த கருப்பு செவ்வாய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சி

அதற்கு கொஞ்சம் வரலாற்றின் பின்பக்கத்தை லேசாய்ப் புரட்டிப்பார்க்க வேண்டியதிருக்கிறது.

ஏனெனில் இப்போது அந்த வரலாறு திரும்பப்போவதாக சொல்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

அது 1929 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ந்தேதி செவ்வாய்க்கிழமை.

அந்த நாளில்தான் அமெரிக்க பங்குச்சந்தை என்று பரவலாக அழைக்கப்பட்டு வந்த நியூயார்க் பங்குச்சந்தை, வரலாறு காணாத பெரும் சரிவை சந்தித்தது. ஒரே நாளில் 1 கோடியே 60 லட்சம் பங்குகள் விற்கப்பட்டன.

பொருளாதார சரிவு

அதைத்தொடர்ந்து அமெரிக்கா மட்டுமின்றி, அனைத்து ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, பூமிப்பந்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்தன. அதனால்தான் அந்த நாள் வரலாற்றின் பக்கங்களில் ‘கருப்பு செவ்வாய்’ என்று பதிவாகி இருக்கிறது.

முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர் அடுத்த 10 ஆண்டுகளில் நிலவிய அசாதாரணமான நிலை, தொழிலாளர்கள் நகரங்களுக்கு இடம் பெயர்ந்தது, விவசாய பொருட்கள் அளவு கடந்து உற்பத்தியானது என பல காரணங்களை அந்த கருப்பு செவ்வாய்க்கு காரணமாக சொல்கிறார்கள். நியூயார்க் பங்குச்சந்தைக்கு முன்பாக லண்டன் பங்குச்சந்தையும் வீழ்ந்திருந்தது.

மீண்டும் அதே நிலை

அதே போன்றதொரு நிலைதான் இப்போது, உலக பொருளாதாரத்துக்கு நேரிட்டு இருக்கிறது. இப்போது அடிப்படை காரணம் ஒன்றே ஒன்றுதான்.

அந்த ஒன்று கொரோனா வைரஸ்.

இந்த கொரோனா வைரஸ், இன்றைக்கு உலக மக்களில் மூன்றில் ஒருவரை வீடுகளுக்குள் முடக்கி இருக்கிறது. எந்த நாட்டை பார்த்தாலும் ஊரடங்கு, ஊரடங்கு, ஊரடங்கு என்பதுதான் இப்போது பேச்சாக இருக்கிறது. இந்த ஊரடங்குதான் மீண்டும் 1929 போன்று ஒரு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை உலகமெங்கும் கொண்டு வரப்போகிறது என பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஆச்சரியம்

ஆனால் ஒரு ஆச்சரியம், இதிலும் இந்தியாவும், சீனாவும் சற்றே தப்பி பிழைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள், பொருளாதார வல்லுனர்கள். அதெப்படி என்பதை இனி வரக்கூடிய நாட்கள்தான் காட்டும்.
உலக நாடுகளில் இன்றைய தினம் நடைமுறையில் உள்ள ஊரடங்கு எந்த நிலைக்கு நாடுகளை கொண்டு செல்லப் போகிறது என்று ஆராய்ந்து அறிந்து நம்மோடு பகிர்ந்து கொணடிருக்கிறார், ஒரு பொருளாதார வல்லுனர்.

அவர் வேறு யாருமல்ல. ஐ.எம்.எப். என்று அழைக்கப்படுகிற சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனர் கீதா கோபிநாத். அவரது பார்வை இது 

1991 ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா மிக மோசமான ஒரு பொருளாதார நிலையை சந்திக்கப்போகிறது.

இந்தியா மட்டும்தானா, சீனாவும் அப்படித்தான்.

வல்லரசு நாடுகள்

ஆனால் இந்தியா, சீனாவை விட வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நிலைதான், அய்யோ பாவம் என்று சொல்கிற வகையில் அமையப்போகிறது. இந்தியாவும், சீனாவும்தான் இந்த உலகளவிலான பொருளாதார சரிவிலும் கொஞ்சம் பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிக்கலாம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 1.9 சதவீதமாக இருக்கும்.சீனாவின் பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதமாக அமையும்.

உலக பொருளாதாரம், மைனஸ் 3 சதவீதம் என்ற எதிர்மறை நிலையை சந்திக்கும். ஆனால் 3 மாதங்களுக்கு முன்பான நிலை என்ன தெரியுமா? உலக பொருளாதாரம், 6.3 சதவீதம் வளர்ச்சியை சந்திக்கும் என்பதாகத்தான் இருந்தது.

ஆக, 6.3 சதவீத வளர்ச்சியை சந்திக்க இருந்த உலக பொருளாதாரம், அந்த நிலையில் இருந்து மைனஸ் 3 சதவீதம் என்ற எதிர்மறை பொருளாதார வளர்ச்சியை அதாவது சரிவை நோக்கி கீழிறங்குகிறது.

இப்படி ஒரு நிலை வந்திருப்பதற்கு காரணம் கொரோனா வைரசும், அதனால் உலக நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கும், அதன் தொடர்ச்சியாய் நிலை குலைந்து போய் இருக்கும் மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும்தான்.

என்னதான் நடக்கப்போகிறது?

கொரோனா வைரஸ் தொற்று நோயியல், அதன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் செயல்திறன், தடுப்பூசி கண்டுபிடிப்பு என பல அம்சங்கள்தான் அதைத் தீர்மானிக்கும். ஆனால் என்ன நடக்கும் என்பதை கணிப்பது கடினம்.

இப்போது பார்த்தீர்களானால், உலக நாடுகளில் பல நெருக்கடிகள் உண்டாகி இருப்பதை பார்க்க முடியும்.

சுகாதார நெருக்கடி, நிதி நெருக்கடி, விளைபொருட்கள் விலை சரிவு எல்லாம் சேர்ந்து பல சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளன. 2020 ம் ஆண்டின் பிற்பாதியில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தீவிரம் மங்கிப்போய் விடும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

உலகமெங்கும் எடுக்கப்பட்ட கொள்கை நடவடிக்கைகள், நிறுவனங்களின் திவால் நிலை, வேலை இழப்பு, நிதி நெருக்கடிகள் ஆகியவற்றை தடுக்கும் வாய்ப்பு உண்டு.

2021 ல் ஏறுமுகம்

2020 ம் ஆண்டு பல நாடுகளும் பொருளாதார சரிவை சந்தித்தாலும் மறு ஆண்டில், 2021 ல் அந்த சரிவில் இருந்து மீண்டு எழுந்து பொருளாதார வளர்ச்சியை எட்டும் நிலை உருவாகும் என்பதுதான் எங்கள் ஐ.எம்.எப்.பின் கணிப்பாக அமைந்துள்ளது.

2021 ல் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதத்தை எட்டிப்பிடிக்கும்.
இந்திய பொருளாதாரம் 7.4 சதவீத வளர்ச்சி அடையும். சீன பொருளாதாரம் 9.2 சதவீத வளர்ச்சியை தொடும். அமெரிக்க பொருளாதாரம் 4.5 சதவீத வளர்ச்சி என்ற நிலையில் இருக்கும். ஜப்பான் பொருளாதாரம் 3 சதவீத வளர்ச்சியைக் காணும்.

தற்போது எழுந்திருக்கிற நிலை, எந்த நாடும் காப்பாற்றப்படாததால் உண்மையான உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக அமைந்துள்ளது.
சுற்றுலா, பயணம், விருந்தோம்பல், பொழுதுபோக்கு போன்றவற்றை மட்டுமே நம்பியுள்ள நாடுகள்கூட, அவற்றின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் இடையூறுகளை சந்திக்கின்றன. வளர்ந்து வரும் சந்தைகள், வளரும் பொருளாதாரங்கள், இதுவரை சந்தித்திராத மாற்றங்களால் கூடுதலான சவால்களை எதிர்கொள்கின்றன.

மந்தமான பொருளாதார நிலை, அதிக கடன்கள் ஆகியற்றுடன் பாதிப்பை சந்தித்து வந்த நிலையில்தான் பல நாடுகள், கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு ஆளாகி உள்ளன. இப்படி சொல்லிக்கொண்டு போகிறார் சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனர் கீதா கோபிநாத்.

2021 ம் ஆண்டைப் பொறுத்தமட்டில், அது எப்படி அமையும் என்பதை 2020 ம் ஆண்டின் பிற்பாதியில் கொரோனா வைரசை எப்படி கட்டுப்படுத்த போகிறோம் என்பதுதான் தீர்மானிக்கும் என்று அடித்துச்சொல்கிறது சர்வதேச நிதியம்.

நரசிம்மராவ், மன்மோகன்சிங்

இந்தியாவைப் பொறுத்தமட்டில் 1991 ல் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து நாடு மீண்டதில் அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ், நிதி மந்திரி மன்மோகன்சிங் மேற்கொண்ட தாராளமயமான பொருளாதார சீர்திருத்தங்கள்தான் முக்கிய பங்கு வகித்தன என்பதை நடுநிலையாளர்கள் இப்போதும் ஒப்புக்கொள்கிற விஷயமாக இருக்கிறது.

1991 ல் முதலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த சந்திரசேகர் அரசால் பட்ஜெட்டைக்கூட நிறைவேற்ற முடியாமல் போனது. சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்., உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகள் இந்தியாவுக்கு கடன் உதவி அளிக்க முடியாது என்று கைகளை விரித்து விட்டன.

இன்றைக்கு அதையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம்.

மோடி  நிர்மலா சீதாராமன்

இப்போது கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசால் பெரும் பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்தாலும். இனி வரக்கூடிய நாட்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதுடன், ஆக்கப்பூர்வமான பொருளாதார நடவடிக்கைகளை பிரதமர் மோடியும், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் மேற்கொள்கிறபோது, ‘இதுவும் கடந்து போகும்’ என்பது போல நெருக்கடிகள் நீங்கும். ஒரு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்!

Next Story