சிறப்புக் கட்டுரைகள்

வணிகத்தின் கொரோனா தாக்கத்தை வங்கிகள் சரி செய்யுமா? + "||" + Will banks correct the corona impact of business?

வணிகத்தின் கொரோனா தாக்கத்தை வங்கிகள் சரி செய்யுமா?

வணிகத்தின் கொரோனா தாக்கத்தை வங்கிகள் சரி செய்யுமா?
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு கடந்த மார்ச் மாதம் உணரப்பட்ட பின் தமிழ் நாட்டிலும் அதன் பரவல் அங்கும் இங்குமாக அறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு கடந்த மார்ச் மாதம் உணரப்பட்ட பின் தமிழ் நாட்டிலும் அதன் பரவல் அங்கும் இங்குமாக அறியப்பட்டது. மெல்ல மெல்ல பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 56,342 பேர்களும், தமிழ்நாட்டில் 6,009 பேர்களும் பாதிப்புக்கு உள்ளாயிருக்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். வணிகத்தை பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை, தினமும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி பெரும்பாலான தொழில்களும் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கிய நிலையிலேயே உள்ளன. வணிகத்தின் கொரோனா தாக்கத்தை வங்கிகள் சரி செய்யுமா?

பல தொழில் முனைவோர்களும், தொழில் நிறுவனங்களும் மற்றும் பொதுமக்களுக்கு நேரடியாக சேவைகளை வழங்குவோர்களும் இன்று சந்திக்கும் பொதுவான பிரச்சினை பணப்புழக்கம் தடைப்பட்டதுதான். இவர்கள் எல்லாம் இருக்கிற சேமிப்பை வைத்துத்தான் மிகுந்த சிரமத்தோடு இந்த இரண்டு மாதங்களை நகர்த்தியிருக்கிறார்கள்.

இது போக, பலருக்கும் வங்கிகளில் ஏற்கனவே வாங்கியிருக்கும் கடன்கள் ஒரு பக்கம் அதன் வட்டி, திருப்பி செலுத்தும் தவணைகள் இன்னொரு பக்கம் இவை எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய பணத்தேவையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொரோனாவின் தாக்கம் முடிவுக்கு வரும் போது, விழுந்த வணிகத்தை மீட்டெடுக்கவும் வணிகத்தை முன்னெடுத்து செல்லவும் நிதி ஒரு பெரும் பங்கு வகிக்கும். இந்த நிலைமையை சரி செய்ய வங்கிகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டுதான் இந்திய ரிசர்வ் வங்கி சில முடிவுகளை எடுத்து அதை மற்ற வங்கிகள் மூலம் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி தங்களிடமிருக்கும் பொதுமக்களின் டெபாசிட் பணத்தில் ஒரு குறிப்பிட்ட அளவை ரிசர்வ் வங்கியில் வைப்பாக செலுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அதாவது இந்த தொகை, வங்கிகளின் டெபாசிட் தொகையில் 4 சதவீதம் என்று இருந்ததை கடந்த மார்ச் 22 முதல் ரிசர்வ் வங்கி 3 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் மூலம் ரூ. 137 ஆயிரம் கோடி வங்கிகளிடம் உபரி தொகையாக கிடைத்துள்ளது. இந்த தொகை கூடுதல் கடன்கள் வழங்க ஏதுவாக இருக்கும்.

2. இரண்டாவதாக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடன்கள் பெறுவதற்கு ஒரு சிறப்பு திட்டம் உள்ளது. மார்ஜினல் ஸ்டாண்டிங் பெசிலிட்டி என்ற திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.137 ஆயிரம் கோடி வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.

3. ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கெல்லாம் வங்கி என்று அழைக்கப்படுகிறது. வங்கிகளும் தங்களுக்கு தேவையான பணப்பற்றாக்குறையை சரி செய்ய கடைசியாக ரிசர்வ் வங்கியிடம்தான் கடன் வாங்குகின்றன. இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி வீதம்தான் ரெபோ வட்டி வீதம் என்று அழைக்கப்படுகிறது. 5.15 சதவீதமாக இருந்த இந்த ரெபோ வட்டி வீதத்தை மார்ச் 22 முதல் 4.4 சதவீதமாக ரிசர்வ் குறைத்துள்ளது.

இதன் மூலம் வங்கிகள் தங்கள் நிதி தேவைகளுக்கு இப்போது குறைந்த வட்டியில் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற முடியும். இதனால் வங்கிகள் கொடுக்கும் கடன்களுக்கும் வட்டி வீதம் குறையும்.

4. சிறு குறு தொழில், விவசாயம் மற்றும் வீட்டு வசதி கடன் பெறுவோருக்கு உதவும் பொருட்டு, ரிசர்வ் வங்கி, நாபார்ட் எனப்படும் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி தேசிய வங்கிக்கு ரூ.25 ஆயிரம் கோடியும், ஸிட்பி எனப்படும் சிறு தொழில் மேம்பாட்டு வங்கிக்கு ரூ.15 ஆயிரம் கோடியும், தேசிய வீட்டுவசதி வங்கிக்கு ரூ.10 ஆயிரம் கோடியும் கடன்களாக வழங்கியுள்ளது. இந்த கடன்கள் வங்கிகள் மூலம் விவசாயத்துக்கும், சிறு குறு தொழில் வளர்ச்சிக்கும் மற்றும் வீட்டு வசதி கடன்களாகவும் கிடைக்கும்.

5. பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் தற்போது, நிதி நிலைமை பற்றாக்குறை காரணமாக, தங்கள் முதலீட்டு தொகைகளை திரும்பப்பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா தாக்கத்தால் பங்கு சந்தையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே பரஸ்பர நிதி அமைப்புகள் முதலீட்டாளர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை உள்ளது. பிராங்க்ளின் டெம்பிள்டன் என்ற பரஸ்பர நிதி, தனது ஆறு திட்டங்களை ரத்து செய்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலைமையை சரி செய்ய, ரிசர்வ் வங்கி, ரூ. 50 ஆயிரம் கோடியை வங்கிகளுக்கு கடனாக அளித்து அதை பரஸ்பர நிதி அமைப்புகளுக்கு கடன்களாகவோ அல்லது முதலீடுகளாகவோ அளிக்க வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் பரஸ்பர நிதி அமைப்புகள் முதலீட்டாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

6. கடன் தவணைகள் தள்ளி வைப்பு: வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கட்ட வேண்டிய கடன் தவணைகளை தள்ளி வைக்க, ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 22-ம் தேதி அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பித்த வாடிக்கையாளர்களின் கடன் தவணைகள் மட்டுமே இந்த மூன்று மாதங்களில் வசூலிக்கப்படமாட்டாது. அவர்களின் கடன் தவணை காலம் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும். தொழிலுக்கான அன்றாட தேவைக்கான ஓவர்ட்ராப்ட் போன்ற கடன்கள் பெற்றிருந்தால், அதற்கான வட்டியும் இந்த மூன்று மாத காலத்துக்கு வசூலிக்கப்படாது. ஆனால் 2020 ஜூன் மாதம் இந்த நிலுவையில் உள்ள வட்டி முழுவதும் வசூலிக்கப்படும்.

மேற்சொல்லப்பட்ட ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால், வங்கிகள் தற்போது தொழில் முனைவோர்களுக்கு தேவையான கடன்களை சுலபமாக வழங்கமுடியும். வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில், குறைந்த வட்டியில் கடன்கள் பெற முடியும்.

தொழில் முனைவோர்களும், தொழில் நிறுவனங்களும் தங்கள் நிதி சார்ந்த திட்டமிடலை இப்போதே செய்ய வேண்டும். நிதி பற்றாக்குறையை சரி செய்ய வங்கிகளை அணுக வேண்டும். சீனாவிடம் தொழில் தொடர்புள்ள நாடுகள் தற்போது தங்கள் திசையை இந்தியாவை நோக்கி திருப்பும் என்ற எதிர்பார்ப்பும் நம் தொழில்களுக்கு ஒரு ஊக்கமாக அமையும். எனவே கொரோனா ஏற்படுத்தியுள்ள தொழில் தாக்கத்தை முறியடிக்கும் வாய்ப்பு தொழில்களுக்கான புதிய கடன்கள் மூலமாகவும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமாகவும் தீரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இருந்து வந்த கொடுமுடியை சேர்ந்தவருக்கு கொரோனா
மராட்டியத்தில் இருந்து வந்த கொடுமுடியை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
2. சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்
புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
4. கொரோனாவை வைத்து ஆளும் அரசு அரசியல் செய்கிறது - டி.கே.எஸ். இளங்கோவன்
கொரோனாவை வைத்து ஆளும் அரசு அரசியல் செய்கிறது என்று டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
5. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.