சிறப்புக் கட்டுரைகள்

33 குடிமக்களை கொண்ட குட்டி குடியரசு + "||" + Petty republic with 33 citizens

33 குடிமக்களை கொண்ட குட்டி குடியரசு

33 குடிமக்களை கொண்ட குட்டி குடியரசு
மொத்தம் 33 குடிமக்களை மட்டுமே கொண்ட, உலகின் குட்டி குடியரசாகத் திகழ்கிறது, ‘மொலோசியா’. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து 400 மைல் தொலைவில் அமைந்திருக்கிறது இந்தக் குடியரசு. இந்நாட்டின் குடிமக்கள் அனைவரும், இதன் ஜனாதிபதியாக கூறிக்கொள்ளும் கெவின் பாக்கின் உறவினர்கள்தான்.
குட்டி நாடாக இருந்தாலும் தமது குடிமக்கள் அனை வரும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார், 57 வயதான கெவின் பாக். இந்தக் குட்டி நாட்டுக்குச் செல்ல விசா தேவையில்லை என்றாலும், பாஸ்போர்ட் அவசியமாம். வெறும் 13 ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட இந்த நாட்டில், 11 கட்டிடங்களே அமைந்துள்ளன. 

கெளுத்தி மீன், வெங்காயம், கீரை ஆகியவற்றைச் சாப்பிடுவதற்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புகை பிடிப்பதும் சட்ட விரோதம். இது போன்ற சட்டங்கள் இருந்தாலும், 33 குடிமக்களுக்கும் அது குறித்த எந்தப் புகாரும் இல்லையாம். இந்தக் குட்டி நாட்டுக்கு என்று தனியாக ஒரு தேசிய வங்கி, தபால் அலுவலகமும், சிறையும் செயல்படுகின்றன. 

ஒரே ஒரு மதுபான விடுதியும் உண்டு. ஆனால் போதை மருந்துக்கு அனுமதி இல்லை. 1977-ம் ஆண்டு காலகட்டத்தில் தான் பார்த்த ஒரு திரைப்படத்தின் தாக்கத்தில் கெவின் பாக் 1990 வாக்கில் அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் சொந்தமாக நிலம் வாங்கினார். அங்கு ஒரு தனி தேசத்துக்கான வேலைகளைத் தொடங்கினார். 

தற்போது மொலோசியாவுக்கு என்று தனி தேசிய கீதமும், கொடியும் உள்ளன. தன்னைவிட 16 வயது குறைந்த தனது மனைவிதான் தம் நாட்டின் அடுத்த ஜனாதிபதி என்று கூறும் கெவின் பாக், இந்த நாட்டின் குடியுரிமைக்காக வெளிநாடுகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவற்றை நிராகரித்துவிட்டதாகவும் சொல்கிறார். 

தமது ரத்த உறவுகளான மொலோசிய மக்கள், தம்முடைய மறைவுக்குப் பின் அங்கேயே குடியிருக்கலாம் அல்லது மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லலாம் என்கிறார் கெவின் பாக். 

பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது ஒவ்வோர் ஆண்டும் தமக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்பிவைப்பார் என்றும், ஆனால் இப்போது வெள்ளை மாளிகை தம்மைக் கண்டுகொள்வதில்லை என்றும் கெவின் சொல்கிறார். அதேநேரம், தாம் இங்கு ஆட்சியில் இருப்பது அவர்களுக்குத் தெரியும் என்கிறார், இந்த குட்டி நாட்டின் கெட்டிக்கார ஜனாதிபதி.