வானவில் : மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் வெர்னா


வானவில் : மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் வெர்னா
x
தினத்தந்தி 27 May 2020 12:54 AM GMT (Updated: 27 May 2020 12:54 AM GMT)

கார் உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல மாடலான வெர்னா காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.9.30 லட்சத்தில் தொடங்குகிறது.

இதில் பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.13.99 லட்சம். இதில் எஸ், எஸ் பிளஸ், எஸ்.எக்ஸ்., எஸ்.எக்ஸ் (ஓ) மற்றும் எஸ்.எக்ஸ் (ஓ) டர்போ வேரியன்ட்கள் வந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால் வாடிக்கையாளர்கள் இந்தக் காருக்கான முன்பதிவை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். அதேபோல வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள ஹூண்டாய் விற்பனையகத்துக்குச் சென்றும் இதை வாங்க முடியும்.

ஹூண்டாய் புளூ லிங்க் இணைப்பு தொழில்நுட்பம் கொண்டது. இதன் மூலம் சவுகரியமான, பாதுகாப்பான பயணம் மற்றும் தொலை தூரத்திலிருந்து காரை இயக்கும் வசதி, வாகனம் இருக்குமிடம் அறிவது உள்ளிட்ட 45 வகையான காரை இயக்கும் வசதிகளைப் பெற முடியும்.

இதில் புது வகையான முன்புற குரோம் கிரில், எல்.இ.டி. முகப்பு விளக்கு, ஒருங்கிணைந்த பகலில் ஒளிரும் எல்.இ.டி. டி.ஆர்.எல். அழகிய தோற்றத்தில் முன்புற பம்பர், டயமண்ட் கட் அலாய் சக்கரம் உள்ளிட்டவை இதில் மேற்கொள்ளப்பட்ட வெளிப்புற மாற்றங்களாகும்.

இது 4,440 மி.மீ. நீளம், 1,729 மி.மீ. அகலம், 1,475 மி.மீ. உயரம் கொண்டதாகவும் 2,600 மி.மீ விட்டம் உடைய சக்கரங்களைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்புறத்தில் இரட்டை வண்ணங்களைக் கொண்டதாக கேபின் அமைந்துள்ளது.

இது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினைக் கொண்டது. டர்போ மாடலில் மட்டும் உள்புறம் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 அங்குல தொடுதிரை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஏர் கண்டிஷன் வென்ட் உள்ளதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

அவசர கால வாகன நிறுத்தும் சிக்னல், பின்புற பயணிகள் மொபைல் சார்ஜ் செய்ய யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி, கைகளை வசதியாக வைத்துக் கொள்ள ஆர்ம் ரெஸ்ட் பகுதி ஆகியவற்றுடன் இனிய இசையை வழங்க ஆர்கமிஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது 113 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக்கூடியது. 6 கியர்களுடன் மானுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதியுடன் வந்துள்ளது.

இதில் டர்போ மாடல் 1 லிட்டர், 3 சிலிண்டர் என்ஜினைக் கொண்டதாக பெட்ரோல் மாடலில் வந்துள்ளது. இது 118 பி.ஹெச்.பி. திறனையும், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இது மட்டும் 7 கியர்களைக் கொண்டதாக டியூயல் கிளட்ச் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Next Story