இயற்கை விவசாயத்தில் அசத்தும் பள்ளி மாணவன்


குடும்பத்தினருடன் விவசாய பணியில்
x
குடும்பத்தினருடன் விவசாய பணியில்
தினத்தந்தி 30 May 2020 6:13 AM GMT (Updated: 30 May 2020 6:13 AM GMT)

பள்ளிப்பருவ மாணவர்கள் கூட்டத்தில் இருந்து, 9-ம் வகுப்பு மாணவன் கவிநந்தன் மட்டும் தனித்துவமாக தெரிகிறான். ஏனெனில் இவன் பள்ளிப்படிப்புடன், விவசாயப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறான். அதுபற்றி விளக்கமாக பேச, அவனது தோட்டத்தில் ஒரு சந்திப்பு.

ங்களைப் பற்றி சுருக்கமாக கூறுங்கள்?

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் மணவாளண்கரைதான் என் சொந்த ஊர். அருகில் இருக்கும் பள்ளியில்தான் படிக்கிறேன். தந்தை பன்னீர் செல்வம், தாய் தனலட்சுமி ஆகியோருடன் விவசாயமும் செய்கிறேன்.

விவசாய குடும்பத்தில் பிறந்த எல்லா குழந்தைகளும் பெற்றோரின் விவசாயப் பணிகளில் உதவியாக இருப்பது இயல்புதான். அதிலிருந்து நீங்கள் எப்படி வித்தியாசப்படுகிறீர்கள்?

விவசாய வேலைக்கு உதவியாக இருப்பதற்கும், தனித்து விவசாயம் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அந்தவகையில் நான் விவசாய உதவி செய்வதில்லை. தந்தையின் தோட்டத்தில் தனியாக விவசாயம் செய்கிறேன்.

அது எப்படி சாத்தியம்?

என்னுடைய தந்தை 20 ஏக்கர் நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தோட்டத்தின் முதன்மை பயிர் தென்னை. அது சம்பந்தமான வேலைகளை அப்பா கவனித்துக்கொள்வார். ஆனால் தென்னந்தோப்பில், ஊடுபயிராக வாழை வளர்ப்பது என்னுடைய வேலை. சில சமயங்களில் வாழை, சில சமயங்களில் உளுந்து... இப்படியாக தந்தையின் தோட்டத்தில் என்னுடைய பயிர்களையும் விளைவிக்கிறேன். ஊடுபயிர் சார்ந்த அத்தனை வேலைகளும் என்னுடையதே.



விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

நான் பாரம்பரிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். சிறுவயது முதலே தந்தையின் விவசாயப் பணிகளை பார்த்தே வளர்ந்ததால், தந்தைக்கு உதவியாக இருப்பேன். பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் விவசாய தோட்டத்திற்கு சென்று விடுவேன். அங்கு வரப்பு வெட்டுவது, களை எடுப்பது தொடங்கி, ஊடு பயிர் விவரங்களை சேகரித்து அதை நடைமுறைப்படுத்துவது, இயற்கை உரம் தயாரிப்பது... என எனக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறேன்.

குடும்ப விவசாயத்தில் உங்களுடைய பணி என்ன?

விவசாய தோட்டத்தில் என்னென்ன பயிர்களை விளைவிக்கலாம் என்ற விவாதத்தில் தொடங்கி, அதை எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது, செயற்கை உரங்களை எப்படி தவிர்ப்பது, இயற்கை உரம் தயாரிப்பது, தென்னை மரத்தில் மிளகு கொடியை வளர்ப்பது, விளைப் பொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்துவது வரை அலசி ஆராய்ந்து, தந்தைக்கு உறுதுணையாக இருக்கிறேன். குறிப்பாக ஊடுபயிர் விவரமும், இயற்கை உர தயாரிப்பும் என்னுடைய முதன்மை பணிகள்.

இயற்கை உர தயாரிப்பை எப்படி கற்றுக்கொண்டீர்கள்?

யூ-டியூப், இணையதளம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. மேலும் நன்கு பழக்க மான மூத்த விவசாயிகளின் மூலமும் தெரிந்து கொள்கிறேன். பஞ்சகவ்யம், இலை மட்கு உரம், நாட்டு மாடு சாணம்... போன்றவற்றை பயனுள்ள முறையில் கையாள்வது, உளுந்து பயிரை தென்னை தோப்புகளுக்கு சத்தாக மாற்றும் முறைகள் ஆகியவற்றை விவசாய முதியவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். அதை என் வீட்டு தோட்டத்தில் முயன்று பார்க்கிறேன். கேட்பதை, பார்ப்பதை பயின்று பார்க்கும் சோதனைக்கூடமாக, எங்கள் தோட்டம் மாறியிருக்கிறது.

உங்களுடைய எதிர்கால லட்சியம்?

என்ஜினீயர் என்பதை மனதில் நிறுத்தி படித்து வருகிறேன். என்ஜினீயராக வளர்ந்தாலும், விவசாயத்திற்கு ஏற்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதுதான் என்னுடைய ஆசை.

விவசாயத்தின் அன்றைய, இன்றைய, நாளைய நிலை என்ன...?


தாத்தா காலத்து விவசாயம் சிறப்பாக இருந்தது. ஆனால் என் தந்தை காலத்து விவசாயம் சற்று தடுமாறியது. ஆனால் எதிர்கால விவசாயம் சிறப்பாக இருக்கும். என்னை போன்ற இளைஞர்கள் விவசாயத்தை சிறப்பான தொழிலாகவும், லாபம் தரும் தொழிலாகவும் மாற்றுவார்கள்.


Next Story