தேனீ பண்ணையில் விசித்திர தொழிலாளி


கழுதையுடன் ஜூராசி வியரா
x
கழுதையுடன் ஜூராசி வியரா
தினத்தந்தி 30 May 2020 6:22 AM GMT (Updated: 30 May 2020 6:22 AM GMT)

மானுவல் ஜூராசி வியரா என்பவர், பிரேசில் நாட்டில் உள்ள இடதிரா என்கிற ஊரில் வசித்து வருகிறார். அங்கிருக்கிற மக்களின் முக்கியத் தொழிலாக தேனீ வளர்ப்பு இருந்துவருகிறது.

தேனீ வளர்ப்பின் மூலம் கிடைக்கும் தேனை தள்ளுவண்டியில் விற்பனை செய்வது வியராவின் முக்கிய வேலை. இருபது பேர் அவருடைய தேனீ பண்ணையில் பணிபுரிந்துவருகின்றனர்.

ஜூராசி வியரா தன்னுடைய வீட்டில் ‘போனிகோ’எனப் பெயரிட்ட ஒரு கழுதையை வளர்த்துவருகிறார். அவருடைய பண்ணையில் பணிபுரிகிற ஒரு சிலர் ‘இந்தக் கழுதையை தேன் சார்ந்த ஏதாவது ஒரு வேலையில் பயன்படுத்தலாமே’ என யோசனை கூறுகிறார்கள். பத்து நாட்கள் இடைவெளியில் தேனீ இருக்கிற பண்ணைப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒரு வினோதமான விலங்கு வருவதைத் தோட்டத்தில் இருக்கிறவர்கள் பார்க்கிறார்கள். உடன் ஜூராசி வியரா வருவதையும் பார்க்கிறார்கள். சற்று கூர்ந்து கவனித்ததில் ஜூராசி வியராவுடன் வருவது அவரு டைய கழுதை போனிகோ என்பதை உணர்கிறார்கள். ‘கழுதையைப் பார்த்ததும் கண்டுபிடிக்க முடியாதா?’ என்கிற ஒரு கேள்வி எழலாம். ஆனால் அவர்கள் குழம்பிப் போவதற்கும் ஒரு காரணம் இருந்தது.

ஏனெனில் கழுதையின் உடல் முழுமைக்கும் பிரத்யேக உடை தயாரித்து அதைக் கழுதைக்கு அணிவித்திருந்தார். தலையிலிருந்து வால் பகுதி வரைக்கும் கழுதையின் உடல் மறைக்கப்பட்டி ருந்தது. கழுதையின் முகப்பகுதிக்கு வலை போன்ற ஒரு துணியைப் பயன்படுத்தியிருந்தார். கழுதையின் எந்த உடல் பாகத்தையும் தேனீக்கள் தீண்டாத வண்ணம் அந்த உடை தயாரிக்கப்பட்டிருந்தது.

உடையைத் தயாரிக்க 9 நாட்கள் ஆனது எனக் கூறும் ஜூராசி வியரா, 2014-ம் ஆண்டிலிருந்து தேன் சேகரிக்கக் கழுதையைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கிறார்.

“முதல்முறை அந்த உடையை போனி கோவுக்கு அணிவிக்கும்பொழுது அந்த உடை அதற்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. அந்த உடை அணிவித்ததற்காக அது எதிர்பு ஆட்சேபனை எதுவும் வெளிப் படுத்தவில்லை” என்கிறார்.

6 வருடங்களாகத் தேனீ சேகரிப்பில் இருக்கிற போனிகோ உலகின் முதல் தேன் சேகரிக்கும் விலங்கினம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது. தேனீ பண்ணையில், போனிகோ சீருடை அணிந்து ஜூராசி வியராவுடன் ஒய்யாராமாய் நடந்துவருவதைப் பார்க்கும்போது, நிலவில் விண்வெளி வீரர்கள் நடப்பதைப் போலவே இருக்கிறது அந்த அழகிலும், மிடுக்கிலும். 

Next Story