சிறப்புக் கட்டுரைகள்

உடல் வளர்ச்சிக்கான வைட்டமின் சத்துக்கள் + "||" + Vitamin supplements for body development

உடல் வளர்ச்சிக்கான வைட்டமின் சத்துக்கள்

உடல் வளர்ச்சிக்கான வைட்டமின் சத்துக்கள்
குட்டி பசங்களின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. அது கிடைக்க விட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதுடன், நோய்களும் ஏற்படக்கூடும். அதனால், வைட்டமின் சத்து பற்றாக்குறையால் வரக்கூடும் பாதிப்புகளையும், எந்தெந்த உணவு வகைகளில் என்னென்ன வைட்டமின் சத்து இருக்கிறது என்ற தகவல்களையும் இங்கே காணலாம். அதன்படி உணவில் மாற்றங்களை செய்து கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.


உதாரணமாக, வைட்டமின் ‘ஏ’ சத்து குறைந்தால் கண் பார்வை மங்குவதுடன், எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். கருவில் வளரும் குழந்தைக்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் வைட்டமின் ‘ஏ’ தேவை. இந்த வைட்டமின் முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.

வைட்டமின் ‘பி’ சத்து குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். வாயில் புண்கள் உண்டாகலாம். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் ‘பி’ சத்து நிறைய உள்ளது.

வைட்டமின் ‘சி’ சத்து குறைந்து விட்டால் குழந்தைகள் மன அமைதியை இழப்பதாக தெரிய வந்துள்ளது. அதனால், அவர்கள், கோபமாகவும் காணப்படுவார்கள். எலும்புகள் பலம் குறைவதுடன், பல் ஈறுகள் பாதிக்கப்படலாம். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் ‘சி’ சத்து நிறைய உள்ளது.

குழந்தைகளின் எலும்புகள் வலுவாக வளர வைட்டமின் ‘டி’ சத்து அவசியமானது. இந்த சத்து போதிய அளவு கிடைக்காத குழந்தைகளின் கால்கள் உட்புறமாக வளைந்து விடக்கூடும். போதிய சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் வைட்டமின் ‘டி’ சத்தை உடல் தாமாகவே தயாரித்துக்கொள்ளும். உணவுப்பொருட்களில் முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘டி’ சத்து இருக்கிறது.

வைட்டமின் ‘ஈ’ சத்து குறைந்து விடும்போது குழந்தைகளின் தசைகள் பலவீனமடையலாம். மேலும், ரத்தம் உறைவது சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஈ’ சத்து இருப்பதால் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.