டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கொரோனா வார்டு சொல்லாத கதை!


டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கொரோனா வார்டு சொல்லாத கதை!
x
தினத்தந்தி 23 Jun 2020 12:00 AM GMT (Updated: 22 Jun 2020 9:16 PM GMT)

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டுகளில் பணியாற்றுகிற டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும், சொல்வதற்கு ஓராயிரம் சோகங்கள் உண்டு.


கொரோனா வார்டில் டாக்டர்களும், நர்சுகளும் கவச உடைகளை அணிந்து கொண்டு வலம் வருவது அவ்வப்போது டி.வி. திரைகளில் காட்சிகளாய் விரிந்து, அதை நாம் பார்க்கிறபோது ஏதோ வேற்றுக்கிரகவாசிகளை பார்ப்பதுபோலத்தான் இருக்கிறது. உண்மையிலேயே அவர்களின் உலகமும் வேறொரு உலகமாகத்தான் இருக்கிறது.

உயிரை உறைய வைக்கும் பனியிலும், நடுங்க வைக்கும் குளிரிலும், அனல்காற்று வீசும் வெயிலிலும் நாட்டின் எல்லையை காக்க களப்பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கும் இவர்களுக்கும் பெரிதான வித்தியாசம் இல்லை.

இவர்கள், கொரோனா வைரஸ் என்ற உயிர்க்கொல்லி எதிரியிடம் இருந்து நோயாளிகளை காப்பதற்காக உயிரைப்பணயம் வைத்து முன்வரிசையில் நின்று களப்பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப்பணியாளர்கள்.

மிகக்கடினமான தருணம்...

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டுகளில் பணியாற்றுகிற டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும், சொல்வதற்கு ஓராயிரம் சோகங்கள் உண்டு. ஆனால் அத்தனையும் சொல்லாத கதைதான். அவர்கள் தங்களது மனதின் ஆழத்தில் புதைத்துக்கொண்டு, மோனோலிசா புன்னகையை முகத்தில் ஏந்திக்கொண்டு, கொரோனா வார்டுகளில் வலம் வருகிறார்கள்.

அந்த தம்பதியர், விகாஸ், ஜோதி யாதவ். கணவர், மனைவி இருவருமே இளம் நர்சிங் அதிகாரிகள். இந்த தம்பதியருக்கு 11 வயதில் அழகாய் ஒரு மகள், 9 வயதில் ஒரு மகன். டெல்லியை அடுத்த குர்கானில் வீடு. ஆனால் இவர்கள் தங்கள் ஆசைக்குழந்தைகளையும், அந்த குழந்தைகள் தங்கள் பெற்றோரையும் பல நாட்கள் பார்க்காமல் வாழும் நிலை. என்றைக்கு கொரோனா வைரஸ் வார்டில் பணியாற்றத்தொடங்கினார்களோ, அன்று முதல் இந்த தம்பதியருக்கு அவர்களது குழந்தைகள் தொட்டு விடும் தூரத்தில் இல்லை.

“குழந்தைகளிடம் இருந்து எங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதுதான் எங்கள் வாழ்வின் மிகக்கடினமான தருணம் என்பேன்” என்று தாய்மையின் அவஸ்தைகளோடு ஜோதி சொல்வதைக் கேட்கிறபோது, நமக்கும் மனசு வலிக்கிறது.

நல்ல வேளை, குழந்தைகள் யதார்த்தம் புரிந்துகொண்டு நடந்த கொள்கிறார்கள் என்பதில் ஜோதிக்கு வலியிலும் ஒரு ஆறுதல், ஒரு தேறுதல்.

குழந்தையை தொட்டு.....

விகாஸ், ஜோதி யாதவ் தம்பதியருடன் பணியாற்றும் இன்னொரு நர்சிங் அதிகாரி, கனிஷ்க் யாதவ். சுல்தான்புரியில் அறை எடுத்து தங்கிக்கொண்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறார்.

“ நான்கு வயதான எங்கள் ஆசை மகனை நான் தொட்டு மூன்று மாதங்களாகிறது” என்று சொல்லும்போதே கனிஷ்க் யாதவின் குரல் உடைந்து போகிறது. தந்தையின் கம்பீரம் தளர்ந்து போகிறது.

ஆனால் இந்த வலியும், ரணமும் அவர் விரும்பி ஏற்றுக்கொண்டதுதான். அவரே அதை ஒப்புக்கொள்கிறார்.

“கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதுமே, என்னை கொரோனா வார்டில் பணியமர்த்துமாறு நான் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி கேட்டுகொண்டேன். கொரோனா வார்டு பணி அச்சுறுத்தலானது என எல்லோராலும் கருதப்பட்டது. அதனாலே என் சக பணியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கத்தான் கொரோனா வார்டில் வேலையை கேட்டுப் பெற்றேன்” என்கிறார்.

இந்த பணியில் எதெல்லாம் கடினம்? அவரே அடுக்குகிறார்.

அவஸ்தைகள் ஆயிரம்....

கொரோனா தொற்று எப்போதுமே நம்முடன் இருக்கிற சூழல்...

6 மணி நேரம் பி.பி.இ. என்று சொல்லப்படுகிற இந்த கவச உடைகள், கருவிகள் அணிந்து கொண்டு பணியாற்றுவதே உஷ்ணத்தின் உச்சம்.... இந்த கவச உடைகளை அணிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும். அணிந்த பின்னர் தண்ணீர் குடிப்பதைக்கூட தவிர்த்து விட வேண்டும்... இயற்கை அவஸ்தைகளில் இருந்து விடுபட கழிவறைக்குகூட போகக்கூடாது... வியர்வையில் குளித்துக்கொண்டேதான் வேண்டும். அவ்வப்போது குமட்டும். கண்பார்வை மங்கும்.. இப்படி ஆயிரம் அவஸ்தைகள்.

முகத்தில் வடுக்கள்...

இன்னொரு நர்சிங் அதிகாரியான ஆசிஷ் ஜாகல் அனுபவமும் அதைத்தான் சொல்கிறது.

“ஒரு விதமான மயக்க நிலையிலேயேதான் எங்கள் பணி நேரம் அமைகிறது. சில நேரங்களில் மருந்து சீட்டில் உள்ள மருந்துகளின் பெயர்களைகூட எங்களால் வாசிக்க முடியாமல் போய் விடுகிறது. மற்றவர்களிடம் போய் வாசிக்க கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இதோ என் முகத்தை பாருங்கள். முக கவசமும், கண்களை பாதுகாக்கும் கண்ணாடியும் அணிந்ததால் முகத்தில் வடுக்களை பார்க்கலாம்” என்கிறார்.

சவால்கள்...

நர்சிங் அதிகாரிகளின் நிலை இப்படியென்றால் கொரோனா வார்டில் பணியாற்றும் டாக்டர்களின் நிலை? “ பொதுவாக டாக்டர்கள் என்ற நிலையில், இது எங்களுக்கு புதிய அனுபவம் அல்ல. நாங்கள் எப்போதுமே கொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்தில்தான் இருக்கிறோம்” என்கிறார் உறைவிட மருத்துவரான டாக்டர் இர்பான்.

அவரோடு பணியில் இருக்கும் நர்சிங் அதிகாரி மோனிகா சர்மா. கொரோனா வார்டில் ஆரம்பத்தில் இருந்து வேலை பார்த்தாலும், இன்னும் இவர்களின் உறுதி கொஞ்சம்கூட அசையவில்லை. சவால்களை சந்திப்பதுதானே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்கிறார்கள் இவர்கள்.

பொறுமையை சோதிக்கும் நாட்கள்...

நர்சிங் அதிகாரி மோனிகா மவுனம் கலைக்கிறார். “ இந்த நாட்கள் எல்லாமே என் பொறுமையை சோதிக்கும் நாட்கள். அதே நேரத்தில் என்னிடம் வலிமை இருக்கிறது. எங்கள் நோயாளிகளை உத்வேகப்படுத்தி, கொரோனாவில் இருந்து மீள வைக்க உதவ வேண்டும் என்ற வெறி இருக்கிறது”. உண்மைதான். இந்த உறுதிதான் இன்னும் கொரோனா வார்டில் வளைய வந்து அவர்களை அர்ப்பணிப்பு உணர்வுடன் களப்பணி ஆற்ற வைக்கிறது.

கொரோனா வார்டில் பணியாற்றும் இன்னொரு தம்பதியர், மினரே, ரஞ்சனா. மிக கவனமாக பணியாற்ற வேண்டும் என்று ஆரம்பத்திலேயே தெளிவாய் புரிந்து கொண்ட தம்பதியர் இவர்கள். மினரே மயக்க மருந்து துறையில் வேலை செய்கிறார். ரஞ்சனா, மகளிர் மருத்துவ பிரிவில் வேலை செய்கிறார்.

சில தினங்களுக்கு முன்னர் இந்த தம்பதியரின் 10 மாத குழந்தைக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

“எங்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியானபோது, எங்கள் வேலையால் நாங்களே எங்கள் குழந்தைக்கு தொற்று வர வைத்து விட்டோம் என்பதுபோலத்தான் நான் உணர்ந்தேன்” என்று வேதனையோடு சொல்கிறார் மினரே.

அப்பாவின் ஆசை....

இதே வார்டில் உள்ள இளம் டாக்டரான பிரித்தம் யாதவின் அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது.

“எனக்கு சொந்த ஊர் ராஜஸ்தானில் உள்ள கோத்புட்லி கிராமம். நான் டாக்டராக வேண்டும் என்பது என் அப்பாவின் கனவு. நானும் அதை நிறைவேற்றி இருக்கிறேன். எங்கள் கிராமத்தில் உருவாகி உள்ள முதல் டாக்டர் நான்தான். எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றதுதான் என் வாழ்வின் மகிழ்ச்சிகரமான தருணம்.. இப்போதும் நான் தளர்த்து போகிற தருணமெல்லாம் என் அப்பாதான் எனக்கு உத்வேகம் தருகிறார்” என்கிறார் டாக்டர் பிரித்தம்.

இந்த வார்டில் ஒரு குழந்தையும், அதன் பெற்றோரும் கொரோனா நோயாளிகளாக இருக்கிறார்கள். பெற்றோர் குணம் அடைந்து வருகிறார்கள். ஆனால் குழந்தைக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது என்பதுதான் டாக்டர் பிரித்தமுக்கு இப்போதைய சோகம்.

கொரோனா வார்டுக்குள் வந்த சில நாட்களிலே நோயாளிகளுக்கும், டாக்டர்களுக்கும், நர்சிங் அதிகாரிகளுக்கும் இடையே ஒரு பாச பந்தம் வந்து விடுகிறது என்பதை பார்க்க முடிகிறது.

ஆமாம். அதுதானே அவர்களது உலகமாகி விடுகிறது. கொரோனா என்ற எதிரியை வீழ்த்துகிற நாள்தான், இவர்கள் மட்டுமல்ல நாட்டில் முன் வரிசையில் நின்று களப்பணியாற்று அனைவரும் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நாளாக அமையும்!

- சொல்கிறார்கள் டாக்டர்களும், நர்சிங் அதிகாரிகளும்

Next Story