சிறப்புக் கட்டுரைகள்

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை உண்டு; டாக்டர்கள் இல்லை! - தத்தளிக்கிறது, தலைநகரம் டெல்லி + "||" + Covid-19: Why can't people get beds in Delhi?

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை உண்டு; டாக்டர்கள் இல்லை! - தத்தளிக்கிறது, தலைநகரம் டெல்லி

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை உண்டு; டாக்டர்கள் இல்லை! - தத்தளிக்கிறது, தலைநகரம் டெல்லி
என்னதான் ஊரடங்குகள், கட்டுப்பாடுகள் விதித்தாலும் கொரோனா தொற்று பரவல் அங்கு அதிகரித்துக்கொண்டே போகிறது.

டெல்லிக்கு இப்படி ஒரு நிலை வரும் என மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மட்டுமின்றி மக்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

என்னதான் ஊரடங்குகள், கட்டுப்பாடுகள் விதித்தாலும் கொரோனா தொற்று பரவல் அங்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று பதிவான வண்ணமாக இருக்கிறது. அடுத்த மாதம் இறுதியில் 5½ லட்சம் படுக்கைகள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருகி வரும் நோயாளிகளை சமாளிக்க மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மத்திய மாநில அரசுகள் கூட்டிக்கொண்டே போகின்றன. தலைநகரத்தை கொரோனாவின் பிடியில் இருந்து மீட்டு விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டி அவை செயல்படுகின்றன.

போர்க்காலம்போல ஒவ்வொரு நடவடிக்கையும் முடக்கி விடப்படுகிறது. ஆனால் தேவையான மனித சக்திக்கு எங்கே போவது என்பதுதான் இப்போது டெல்லியில் மில்லியன் டாலர் கேள்வி.

டெல்லியில் மட்டுமே கொரோனா பாதிப்பு என்றால் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து டாக்டர்களை கொண்டு சென்று விட முடியும். நாடு முழுக்க பாதிப்பு என்கிறபோது, எங்கிருந்து டெல்லிக்கு டாக்டர்களையும், நர்சுகளையும், சார்பு மருத்துவ பணியாளர்களையும் கொண்டு சென்று, கொரோனா வார்டுகளில் பணி புரிய வைப்பது என்பதுதான் அரசுக்கு சமீபத்திய தலைவலி.

இப்போது டெல்லியில் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் தட்டுப்பாட்டுக்கு காரணம், பெருகி வரும் நோயாளிகளின் எண்ணிக்கையோ, உயர்ந்து கொண்டே போகும் படுக்கைகளின் எண்ணிக்கையோ அல்ல என்பதுதான் அதிர வைப்பதாக அமைந்துள்ளது.

தனியார் துறையில் பணியாற்றி வருகிற டாக்டர்களும், நர்சுகளும், சுகாதார பணியாளர்களும் அணி அணியாக பணியில் இருந்து விலகிகொண்டிருப்பதுதான் இப்போதைய தலைவலிக்கு காரணம் என தலைநகர தகவல் கூறுகிறது.

சுகாதார பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதுவும் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களின் பற்றாக்குறைக்கு ஒரு காரணமாம்.

போர்க்காலத்தில் ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் போருக்கு பயந்தால் என்ன ஆகும்? அதுபோன்றதொரு நிலைமையைத்தான் இந்த பாழாய்ப்போன கொரோனா கொண்டு வந்து விட்டிருக்கிறது.

கொரோனா வார்டில் தொடர்ந்து பணியாற்றினால், நமக்கே தொற்று வந்து விட்டால் என்னாவது என்ற பதற்றம் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் மத்தியில் நிலவுவது ஒரு புறம். அவர்களை கொரோனா வார்டுகளில் பணியாற்ற வேண்டாம் என அவர்களது குடும்பங்களில் இருந்து வருகிற நெருக்கடி இன்னொருபுறம்.

எப்படி இந்த சூழலில் கொரோனா வார்டுகளில் வேலை செய்வது என அவர்களும் தவித்துத்தான்போகிறார்கள்.


டெல்லி இதயம் மற்றும் நுரையீரல் ஆஸ்பத்திரியை, கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியாக மாற்றுவதற்கு முன்பாகவே அங்கு பணியில் இருந்த நர்சுகளில் நான்கில் ஒரு பங்கினர் வேலையை விட்டு சென்று விட்டார்களாம்.

கொரோனா ஆஸ்பத்திரியாக மாற்றிய பிறகு 15 சதவீத நர்சுகள் வேலையை உதறிவிட்டு சென்று இருக்கிறார்கள். அவர்கள் பணி விலகலுக்கு சொன்ன காரணம், குடும்பத்தினர் தரும் அழுத்தமும், தனிப்பட்ட பயமும், கவலையும்தான்.

இந்த ஆஸ்பத்திரியின் தவைவர் டாக்டர் கே.கே.சேத்தி இதுபற்றி குறிப்பிடுகையில், “எங்கள் ஆஸ்பத்திரியில் இதய சிறப்பு சிகிச்சை பிரிவு இருக்கிறது. எங்கள் டாக்டர்கள், இதய நோயாளிகளை கவனிப்பதற்கென்று சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். ஆனால் இதுவரை அறியப்படாத ஒரு நோயால் (கொரோனா தொற்று) பல வகையான சிறப்பு மருத்துவ நிபுணர்கள், குறிப்பாக உள்மருத்துவம், சுவாச மருத்துவம் என பல பிரிவுகளில் பணியாற்ற டாக்டர்கள் கிடைக்கவில்லை. நெருக்கடி பிரிவில் வேலை செய்கிற டாக்டர்களோ வேலை செய்ய மறுக்கிறார்கள். கொரோனா வார்டில் வேலை செய்ய வேண்டுமென்றால் யாருமே வேலைக்கு வர முன்வருவதில்லை. அப்படி வேலைக்கு வர சம்மதித்தால், அதிகப்படியாக சம்பளம் கேட்கிறார்கள். அதுவும் அவர்கள் வழக்கமாக பெறுகிற சம்பளத்தில் இருந்து 4 மடங்கு வரை அதிகமாக கேட்கிறார்கள்” என்று வேதனைப்படுகிறார்.

மனச்சோர்வு

ரோகிணி பகுதியில் அமைந்துள்ள சரோஜ் பல்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியில், போக்குவரத்து பிரச்சினை, கொரோனா வார்டில் வேலை செய்ய குடும்பத்தினர் அனுமதி மறுப்பு போன்ற காரணங்களர்ல 40 முதல் 50 சதவீத நர்சுகள் பணிக்கு வரவில்லை என்று மற்றொரு தகவல் சொல்கிறது.

பத்ரா ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை, நுரையீரல் சிறப்பு மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கே.மணி சொல்லும்போது, “நோயாளிகள், டாக்டர்கள், நர்சுகள் விகிதாசாரத்தை பராமரிப்பது ரொம்பவும் முக்கியம். மனித வளத்தை மேம்படுத்தாமல், படுக்கைகளின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரிப்பது என்பது சரியானது அல்ல. சுகாதார பணியாளர்களுக்கு தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் மன உறுதியை சுகாதார பணியாளர்கள் இழக்கிறார்கள். சோர்வு ஏற்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் வேலையை விடும் முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்” என்று யதார்த்தத்தை அப்பட்டமாக போட்டுடைக்கிறார். தொடர்ந்து அவர் பேசும்போது, “ தீவிர சிகிச்சை பிரிவில் 3 நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் இருக்க வேண்டும். மற்ற வார்டுகளில் வேண்டுமானால் 6-8 நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் இருக்கலாம். தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு டாக்டர், 8 நோயாளிகளுக்கு மேல் கவனிக்க முடியாது” என்கிறார்.

பொதுவாக கொரோனா நோயாளிகள் பலரும் அரசு ஆஸ்பத்திரிகளை விட தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதால், இந்த துறை பணிச்சுமையை சந்திக்க நேர்கிறது என்கிறார்கள் தொடர்புடையவர்கள்.

டெல்லி தன்னார்வ ஆஸ்பத்திரி அமைப்பின் தலைவர் டாக்டர் சந்தர்பிரகாஷ் கூறுகையில், “அரசு ஆஸ்பத்திரிகளில் 60 சதவீத படுக்கைகள் காலி. தனியார் ஆஸ்பத்திரிகளில் விடுமுறை, வாகன வசதி, அலவன்ஸ் போன்ற சலுகைகள் தரப்படுன்றன. அரசாங்கம், இப்போது கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. அப்படி இருக்கிறபோது, பணியாளர்களுக்கு எப்படி சலுகைகளை வழங்க முடியும்?” என கேள்வி எழுப்புகிறார்.

சுய பாதுகாப்பு உடைகள், கருவிகள், முக கவசங்கள், சானிடைசர் என எல்லாமே விலையேற்றம் கண்டுள்ளன, பயன்படுத்தி விட்டு அப்புறப்படுத்த வேண்டிய உபகரணங்களால் ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் சுமைகளை சுமக்க வேண்டியதாகிறது என்றும் அவர் குறைகளை பட்டியலிடுகிறார்.

சுகாதார பணியாளர்களுக்கு தொற்று பாதிப்பு...

பொதுமக்களை மட்டுமல்ல, உங்களையும் விட மாட்டேன் என்று சொல்வதுபோல கொரோனா வைரஸ் தொடர்ந்து டாக்டர்கள், நர்சுகள், சார்பு சுகாதார பணியார்களையும் ஒரு கை பார்த்து வருவது சோகம்தான்.

சர் கங்காராம் ஆஸ்பத்தியில் மட்டும் 313 சுகாதார பணியாளர்களை கொரோனா தொற்று பாதித்து இருக்கிறதாம்.

சரோஜ் ஆஸ்பத்திரியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று 2 நர்சுகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி இதயம் மற்றும் நுரையீரல் ஆஸ்பத்திரியில் தொற்று பாதித்த ஊழியருடன் தொடர்பில் இருந்த ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. ஆனாலும் அவர்கள் வேலைக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதே ஆஸ்பத்திரியில் தலா 2 டாக்டர்கள், நர்சுகளுக்கும், ஒரு வரவேற்பாளருக்கும் சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் வரவேற்பாளர்களாக வேலை செய்கிறவர்கள் கதையோ பரிதாபமாகத்தான் இருக்கிறது. “ எங்களிடம் நோயாளிகள் வந்து சண்டை போடுகிறார்கள். எங்கள் முன் இருமுகிறார்கள். இது மிகவும் கடினமானதாக போய் விடுகிறது” என்பது அவர்களின் சோகம். இப்படிப்பட்ட தருணங்களில் தொற்று பரவும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.

முக்கிய பிரச்சினை...

இன்னொரு முக்கிய பிரச்சினையையும் சுகாதார துறையினர் பதிவு செய்கிறார்கள்.

“தொடர்ந்து 6 மணி நேரம் சுய பாதுகாப்பு உடைகளையும், கருவிகளையும் அணிந்திருப்பது என்பது சோர்வு அடைய வைத்து விடுகிறது. அவர்கள் கழிவறைக்கு கூட போக முடியாது. இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. திறனையும் இழக்கச்செய்கிறது” என்கிறார்கள் அவர்கள்.

இந்த பிரச்சினைகள் விசுவரூபம் எடுக்கிற நிலையில், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளும் தங்களது மூத்த உறைவிட மருத்துவர்கள், இளநிலை மருத்துவர்கள் பணிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதே போன்று நர்சு மாணவிகள், பயிற்சி மாணவிகளையும் கொரோனா வார்டுகளில் பணியில் ஈடுபடுத்தலாம் என்று டெல்லி டாக்டர்கள் சங்கம் யோசனை சொல்லி இருப்பதாக அதன் தலைவர் கிரிஷ் தியாகி கூறுகிறார். அதே போன்று கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள மாநிலங்களையும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களை தந்து உதவுமாறு கேட்கலாம் என ஒரு யோசனையையும் முன் வைத்துள்ளது.

இப்படி பலரும் யோசனைகளை சொல்கிறார்கள். அரசும் பரிசீலிக்கிறது.

எல்லாம் சரி, கொரோனாவும் கொஞ்சம் பரிசீலிக்கட்டும். தலைநகரத்தை பாதித்தது போதும் விடைபெறுவோம் என்று.


தொடர்புடைய செய்திகள்

1. 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி; குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்; பிரமாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு
தலைநகர் டெல்லி, 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது.
2. குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
72-வது குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
3. மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா - 45 பேர் பலி
மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா - 20 பேர் பலி
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலகமே கொரோனாவிடம் போராடும் நிலையில் சீனாவின் உகான் நகரில் இயல்பு நிலை திரும்பியது
உலகமே கொரோனாவிடம் போராடி வரும் நிலையில், சீனாவின் உகான் நகரிலோ இயல்பு நிலை திரும்பி விட்டது.