கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியிலும் திருப்பூருக்கு மறுவாழ்வு தர பாதுகாப்பு கவச உடைகள் ஏற்றுமதிக்கு அனுமதி?


கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியிலும் திருப்பூருக்கு மறுவாழ்வு தர பாதுகாப்பு கவச உடைகள் ஏற்றுமதிக்கு அனுமதி?
x
தினத்தந்தி 26 Jun 2020 12:00 AM GMT (Updated: 25 Jun 2020 9:54 PM GMT)

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்ற சிறப்புக்குரிய பிரிக்கப்படாத கோவை மாவட்டத்தின் அங்கமாக திகழ்ந்ததுதான் திருப்பூர். இன்றைக்கு திருப்பூர் தனி மாவட்டமாக மாறி இருக்கிறது.


கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியிலும்
திருப்பூருக்கு மறுவாழ்வு தர பாதுகாப்பு கவச உடைகள் ஏற்றுமதிக்கு அனுமதி?

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்ற சிறப்புக்குரிய பிரிக்கப்படாத கோவை மாவட்டத்தின் அங்கமாக திகழ்ந்ததுதான் திருப்பூர். இன்றைக்கு திருப்பூர் தனி மாவட்டமாக மாறி இருக்கிறது.

நமது தமிழ்நாட்டில் ஆடைகள் தயாரிப்பில் தன்னிகரற்ற தனிப்பெரும் நகரமாக இந்த திருப்பூர் திகழ்ந்து வந்தது. இந்த நகரத்தில் ஆயிரக்கணக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன. இவற்றின் மூலம் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வந்தனர். 

பாழாய்ப்போன கொரோனா தொற்றைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களும் மூடப்பட்டன. லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து கண்ணீரும், கம்பலையுமாக ஆயினர். இப்போது கட்டுப்பாடுகளுடன் இந்த ஆடை நிறுவனங்கள் மீண்டும் இயங்கத்தொடங்கி உள்ளன. இது தொழிலாளர்கள் முகங்களில் நம்பிக்கை ரேகையை படரச்செய்துள்ளது.

இந்த நிலையில்தான் கொரோனா தொற்று வேறு வடிவத்தில் திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களை யோசிக்க வைத்தது. அந்த நிறுவனங்கள் ஆடைகள் உற்பத்தியில் இருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக முன் வரிசையில் நின்று பணியாற்றுகிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் அணிகிற முழு பாதுகாப்பு கவச உடைகள் தயாரிப்பிலும், முக கவச தயாரிப்பிலும் திரும்பி உள்ளன. இந்த மாற்றம், திருப்பூருக்கு மீண்டும் வாழ்வு தரும் என்ற நம்பிக்கையை ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தந்துள்ளது.

இந்த தருணத்தில் பி.பி.இ. என்னும் பாதுகாப்பு கவச உடைகள் ஏற்றுமதி வசதி குறித்த குழு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை மத்திய ஜவுளி அமைச்சகமும், ஏ.இ.பி.சி. என்று அழைக்கப்படுகிற ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலும் செய்திருந்தன. இதில் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் பேசும்போது எடுத்து வைத்த முக்கிய அம்சங்கள்:-

* என்-95 முக கவசங்கள், முழு அளவிலான பாதுகாப்பு கவச உடைகள், பிற கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான தடையை அகற்ற வேண்டும்.

* ஒரு முக கவச தயாரிப்பு எந்திரம், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முக கவசங்களை தயாரித்து அளிக்க முடியும். எங்களிடம் 200 எந்திரங்கள் இருக்கின்றன. எனவே என்-95 முக கவசங்கள் ஏற்றுமதியை எந்தவித கட்டுப்பாடும் இன்றி திறந்து விட வேண்டும்.

* முதலில், வெளிநாட்டில் இருந்து வாங்குபவர்கள் மாதிரிக்காக 10 பாதுகாப்பு கவச உடைகள், என்-95 முக கவசங்கள் 50 வாங்குவதற்கு அனுமதிக்கலாம்.

* சர்வதேச சான்றிதழ் அளிப்பு தரத்துக்கு ஏற்ப ஜவுளி ஆய்வுக்கூடங்களை தரம் உயர்த்தலாம். ஏற்றுமதியாளர்கள் தேவையான சான்றிதழ்களுடன், மாதிரிகளுடன் தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இந்த விவாதத்தில் வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குனர் விஜய்குமார் பேசும்போது, “தற்போது மருத்துவ ரீதியிலான பாதுகாப்பு கவச உடைகள்தான் தடை பட்டியலில் உள்ளன. ஸ்பாக்கள் மற்றும் சலூன்களில் பயன்படுத்தக்கூடிய மருத்துவம் சாராத பாதுகாப்பு கவச உடைகளை ஏற்றுமதி செய்யலாம். மருத்துவம் சாராத, அறுவைசிகிச்சையின்போது பயன்படுத்தாத முக கவசங்களையும் தாராளமாக ஏற்றுமதி செய்யலாம்” என குறிப்பிட்டார்.

மேலும், முக கவசங்கள், பாதுகாப்பு கவச உடைகள் ஏற்றுமதி கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து சுகாதார துறையும், ஜவுளித்துறையும் கலந்துரையாடி வருகின்றன. ஏற்றுமதி கொள்கையில் இந்த அமைச்சகங்கள் வழங்குகிற அறிவுரையின்படி, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் செயல்படும் என்றும் உறுதி அளித்தார். இறுதியில் ஜவுளித்துறை இணைச்செயலாளர் நிஹர் ரஞ்சன் தேஷ் பேசும்போது, “உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதை உறுதி செய்தபின்பு முழு பாதுகாப்பு கவச உடைகள், பிற மருத்துவ ஜவுளி பொருட்கள் ஏற்றுமதிக்கு அரசு வசதி ஏற்படுத்தி தரும்” என்று குறிப்பிட்டார்.


Next Story