அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா ? - புதிய தகவலால் பீதி


அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா ? - புதிய தகவலால் பீதி
x
தினத்தந்தி 26 Jun 2020 11:00 PM GMT (Updated: 26 Jun 2020 9:46 PM GMT)

சீனாவில் தொடங்கி இன்றைக்கு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் சூறாவளி போல வீசிக்கொண்டிருக்கிறது,


வல்லரசு நாடான அமெரிக்கா, இதுவரை எந்த எதிரியையும் விட்டு வைத்தது இல்லை என்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் முன் திணறிக்கொண்டிருக்கிறதே அதுதான் ஆச்சரியம்.

சீனாவில் தொடங்கி இன்றைக்கு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் சூறாவளி போல வீசிக்கொண்டிருக்கிறது, கொரோனா வைரஸ் தொற்று அலை. ஆனால் அமெரிக்காவில் அந்த அலை, சுனாமி அலைகள்போல பேரழிவை ஏற்படுத்தி வருவதை அந்த நாட்டால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

உலகமெங்கும் 96 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் நேற்று மதியம் தெரிவித்தது. ஆனால் இதில் நான்கில் ஒரு பங்கு, அமெரிக்காவினுடையது. அமெரிக்காவில் 24 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பூமிப்பந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 4 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதிலும் நான்கில் ஒரு பங்கு ( 1 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர்), அமெரிக்காவினுடையது என்பதுதான் அமெரிக்க மக்களை மீளாத சோகத்தில், துயரத்தில், வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது. தொடர் பொது முடக்கத்தால் இந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு பொருளாதார இழப்புகளை அமெரிக்கா சந்தித்துள்ளது. வேலை இழப்புகளால் லட்சக்கணக்கானோர் அல்லாடி வருகின்றனர்.

கொரோனா வைரசால் வாழ்வா, சாவா என்ற போராட்டத்துக்கு மத்தியில், வாழ்வாதாரம் மிக முக்கியம் என்று கருதிக்கொண்டு அமெரிக்காவில் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் திறந்து விட ஜனாதிபதி டிரம்ப் ஆர்வம் காட்டினார். பல்வேறு மாகாணங்களும் இதில் மிகுந்த கவனம் செலுத்தின. ஆனால் கொஞ்சம் தணிந்து வந்த கொரோனா வைரஸ் பரவலும் சரி, உயிர்ப்பலிகளும் சரி மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டன.

தினந்தோறும் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் கரம் கோர்த்துக்கொண்டு அணிவகுக்க அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்கள் மூச்சு திணறிக்கொண்டிருக்கின்றன.

டெக்சாஸ், புளோரிடா, நியுமெக்சிகோ, அரிசோனா ஆகிய 4 மாகாணங்களும் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளன. அந்த அளவுக்கு அந்த மாகாணங்களில் கொரோனா வைரஸ் அலையானது, மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் முன்னணியில் இருந்த டெக்சாஸ் மாகாணத்தில் தினசரி ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தளர்வுகளை நிறுத்தி வைத்து அறிவித்த அந்த மாகாண கவர்னர் கிரேக் அப்போட், “இந்த தற்காலிக இடைநிறுத்தம், எங்கள் மாகாணத்தை வர்த்தகத்துக்கு திறக்கும் அடுத்த கட்டத்துக்கு பாதுகாப்பாக நுழைகிற வரையில் உதவிகரமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார். இந்த மாகாணத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 47 பேர் பலியாகியும் இருக்கிறார்கள். இங்கு 13 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுகிற கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏறுமுகம் கண்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலான எண்ணிக்கையில் படுக்கைகள் தேவைப்படுவதால், பிற உடல்நலக்கோளாறுகளுக்காக நடத்த இருந்த அறுவை சிகிச்சைகள் ஹூஸ்டன், டல்லாஸ், ஆஸ்டின், சான் ஆன்டனியோ நகரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே அலபாமா, கலிபோர்னியா, இடாஹோ மிசிசிப்பி, மிசவுரி, நெவோா, ஓக்லஹாமா, தென் கரோலினா, வயோமிங் மாகாகணங்களிலும் தினந்தோறும் தொற்று அதிகரித்து வருகின்றன.

நியுயார்க், நியுஜெர்சி, கனெக்டிகட் மாகாணங்கள், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில், தங்கள் மக்கள் அலபாமா, ஆர்கன்சாஸ், அரிசோனா, புளோரிடா, வடகரோலினா, தென்கரோலினா, டெக்சாஸ், உட்டா மாகாணங்களுக்கு சென்று வந்தால் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன. கலிபோர்னியா மாகாணத்தில் புதன்கிழமையன்று 7,149 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.

டிஸ்லிலேண்ட் பார்க், டிஸ்னி கலிபோர்னியா அட்வென்சர் பார்க் ஆகிய பொழுதுபோக்கு பூங்காக்கள் அடுத்த மாதம் 17-ந் தேதி மீண்டும் திறக்க இருந்தது தள்ளிப்போகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் சி.டி.சி. என்று அழைக்கப்படுகிற நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையங்கள் வெளியிட்டுள்ள தகவல், ஒட்டுமொத்த அமெரிக்காவை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

அது, அங்கு 2 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று இந்த நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையங்கள் கணித்து கூறி இருப்பதுதான்.

இதுபற்றி அது கூறுகையில், “அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்களைக் காட்டிலும் உண்மையான பாதிப்பு என்பது 10 மடங்கு அதிகமாக இருக்கும்” என்று தெரிவித்து இருக்கிறது.

1:10 என்ற விகிதத்தில் பரவல்

நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையங்கள் அமைப்பின் இயக்குனர் டாக்டர் ராபர்ட் ரெட்பீல்டு இது தொடர்பாக நிருபர்கள் மத்தியில் பேசும்போது, “தற்போது எங்களது சிறப்பான மதிப்பீடு என்பது கொரோனா பாதிப்புக்குள்ளான ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 10 பேருக்கு தொற்றை வழங்கி இருப்பார்கள் என்பதுதான்” என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “ இங்கே குறிப்பிட்ட அளவில்தான் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் சரி, அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் சரி பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. அமெரிக்காவில் 5 முதல் 8 சதவீத மக்கள் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும், அடிக்கடி கை கழுவி கைச்சுத்தம் பராமரிப்பது அவசியம்” என்கிறார்.

அது மட்டுமல்ல, இலையுதிர் காலம், குளிர்கால என இனி வரக்கூடிய காலங்களில் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றுவது அத்தியாவசியமானது எனவும் அவர் வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மத்தியில் வாஷிங்டன் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் அக்டோபர் மாதம் கொரோனாவால் ஏற்படப்போகிற உயிர்ப்பலியின் அளவு 1 லட்சத்து 80 ஆயிரத்தை எட்டும் என்று கணித்துள்ளது. 95 சதவீத அமெரிக்க மக்கள் முக கவசங்களை அணிந்தால் இந்தப் பலியை 1 லட்சத்து 46 ஆயிரம் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகம் சொல்கிறது.

பாவம், அமெரிக்கா கொரோனாவின் நெருக்குதல்களால் மூச்சு திணறி வருகிறது. இதில் இருந்து மீள்வதற்கு ஒரு வழியை இன்னும் கண்டறிய முடியாமல் அந்த வல்லரசு நாடு தவிப்பது, உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்.


Next Story