ஊரடங்கால் ஓய்வு எடுக்கும் ரெயில்கள் படுக்கைகளாக மாறிய ரெயில்வே தண்டவாளங்கள்


ஊரடங்கால் ஓய்வு எடுக்கும் ரெயில்கள் படுக்கைகளாக மாறிய ரெயில்வே தண்டவாளங்கள்
x
தினத்தந்தி 30 Jun 2020 8:03 AM GMT (Updated: 30 Jun 2020 8:03 AM GMT)

ஊரடங்கு காரணமாக ரெயில்கள் ஓய்வு எடுப்பதால், ரெயில் தண்டவாளங்கள் படுக்கைகளாக மாறிவிட்டன. வீடுகள் இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகின்றன.

சென்னை, 

ஊரடங்கு காரணமாக ரெயில்கள் ஓய்வு எடுப்பதால், ரெயில் தண்டவாளங்கள் படுக்கைகளாக மாறிவிட்டன. வீடுகள் இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகின்றன.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டின் மிகப்பெரிய பொது போக்குவரத்தான ரெயில் சேவை முற்றிலும் முடங்கி போய் கிடக்கிறது. ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் அவ்வப்போது சிறப்பு ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையை பொறுத்தமட்டில் மக்களின் வாழ்வாதாரமாக திகழும் மின்சார ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார ரெயில்கள் தற்போது பணிமணைகளில் ஓய்வு எடுத்து வருகின்றன. பணிமணைகளில் தஞ்சம் அடைந்துள்ள மின்சார ரெயில் பெட்டிகளில், ரெயில்வே ஊழியர்கள் சீரான இடைவெளியில் பராமரிப்பு பணிகளை மட்டும் செய்து வருகின்றனர்.

மின்சார ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் எப்போதும் பேரிரைச்சலை கேட்டு வந்த, ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். தண்டவாளத்தில் சீறி பாய்ந்து செல்லும் ரெயில்களின் சத்தம் இப்போது அவர்களுக்கு கேட்பது இல்லை. மாறாக பறவைகளில் ஒலிகளை மட்டும் கேட்டு மகிழ்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க கடற்கரை-வேளச்சேரி பறக்கும் வழித்தடத்தில் வேளச்சேரியை ஒட்டிய ரெயில்வே தண்டவாளம், வீடுகள் இல்லாதவர்கள் தற்காலிக ஓய்வு எடுக்கும் இடமாக தற்போது மாறிவிட்டது. ரெயில் தண்டவாளத்தில் ஒரு புறத்தில் தலையும், மற்றொரு புறத்தில் காலையும் நீட்டி அலாதியாக சிலர் தூங்குவதற்கு படுக்கைகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.

ஊரடங்கால் ஓய்வு இன்றி ஓடித்திரிந்த ரெயில் பெட்டிகள் பணிமணைகளில் அடைக்கலம் புகுந்ததுள்ளதால், தண்டவாளங்கள் புது விருந்தாளிகளை தனக்குள் ஈர்த்துக் கொண்டுள்ளன. மேம்பாலத்தின் நிழலில் கல்லும், தண்டவாளங்களும் மெத்தைகளாக பயன்படுகின்றன. ஊரடங்கு முடிந்து மின்சார ரெயில்கள் மீண்டும் பரபரப்பாக ஓடும் வரையிலும் தண்டவாளத்தில் தூங்கும் தங்களுடைய பயணம் தொடரும் என்று அதனை தற்காலிக படுக்கைகளாக மாற்றிய வீடுகள் இல்லாதவர்கள் தெரிவித்தனர்.


Next Story