சிறப்புக் கட்டுரைகள்

சமூக விலகல் சமூக புறக்கணிப்பாகிறதா..? + "||" + Social exclusion is social neglect

சமூக விலகல் சமூக புறக்கணிப்பாகிறதா..?

சமூக விலகல் சமூக புறக்கணிப்பாகிறதா..?
கொரோனாவைக் காட்டிலும் கொரோனா குறித்த அச்சங்கள் தான் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன.
சென்னை,

கொரோனாவைக் காட்டிலும் கொரோனா குறித்த அச்சங்கள் தான் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன! அந்த அதீத அச்சங்கள் மனித தன்மைகளை மறக்கடித்து, மனித உறவுகளை சிதைத்து, பல துன்பங்களை அரங்கேற்றி வருகின்றன!


மக்கள் தமக்கு நெருங்கிய ஒருவருக்கு கொரோனா வந்தால்,முற்றிலும் அவர்களிடம் இருக்கும் உறவை துண்டித்துக் கொள்கின்றனர். நண்பன், பக்கத்துவீடு,எதிர்வீடு, தாய்,மனைவி,சகோதரன் என கொரோனா தாக்கும் போது,பலர் அச்சம் மேலோங்க, பாரா முகத்துடன் முற்றிலும் ஒதுங்கிவிடும் நிலை உருவாகிவருகிறது.

உடலளவில் இடைவெளியை பேண வேண்டும் என்றுதான் மருத்துவர்கள் சொல்லி உள்ளனர். அதே சமயம் உள்ளத்தளவில் நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்பதை உணர்த்த தவறுவது நாகரிக சமூகத்திற்கு இழுக்காகும்! சமூக இடைவெளியை கடைபிடிக்க சொன்னால்,சிலர் சமூக ஒதுக்கலை நிகழ்த்திவிடுவது தான் பேரவலம்!

கொரோனா வந்து இறந்த மிக நெருக்கமான ஒருவரின் சாவுக்கு செல்ல முடியாவிட்டாலும், துக்கம் விசாரிக்க செல்வதற்கு கூட பலர் அச்சப்படும் நிலை இன்று உருவாகியுள்ளது. இதனால், நீண்டகால உறவுகூட நிலை குலைந்துவிடும் சூழல் ஏற்ப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தாயை தவிர்த்த மகன்!

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு ஈரமுள்ள யார் இதயத்தையும் ரத்தம் கசிய வைக்கும்! மதுரையில் மாரடைப்பால் தந்தை இறந்த செய்தி சென்னையில் உள்ள ஒரே மகனுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால்,அவன் ஐந்து நாட்கள் கழித்து தான் வீட்டிற்கே வந்தான். வந்தவன் தாயிடம் கேட்ட முதல் கேள்வியே “அப்பாவிற்கு கொரோனா இருந்ததா?” என்பது தான். அவருக்கு கொரோனா இல்லை என்பதையும், நெஞ்சுவலியால் தான் இறந்தார் என்றும் அந்த தாய் தன் மகனிடம் தெரிவித்தார். ஆயினும் அவனுக்கு சந்தேகமும்,அச்சமும் போகவில்லை. சற்று நேரத்தில் அவன் தாயிடம் ஆறுதலாக எதையுமே பேசாமல்,தன் மாமியார் வீட்டுக்கு போய் தங்கிக் கொண்டான்! அந்த தாயோ வயதானவர்! உடல் பலவீனமானவர்! ஆறுதலுக்கு மகனைவிட்டால் யாருமில்லை என்ற நிலையில் இருப்பவர். வீட்டில் சமைக்க சாமான்கள் ஏதுமில்லை.கடைக்கு சென்று வாங்கித் தரவும் ஆளில்லை! தாயின் அடுத்த வேளை உணவை பற்றிக் கூட யோசிக்க மறந்த நிலைக்கு அவனை கொரோனா பயம் ஆட்கொண்டுவிட்டது தான் காரணம்! இதை கேள்விபட்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்த தாய்க்கு தற்போது உதவி வருகிறார்கள்!

துக்கம் விசாரிக்கலாமா?

“கொரோனாவில் இறந்துவிட்ட நெருங்கிய உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க செல்லலாமா?” என பிரபல மருத்துவர் ரெக்ஸ் சற்குணத்திடம் கேட்டபோது, “அநியாயத்திற்கு கொரோனா பயம் மக்களை ஆட்டுவிக்கிறது. ஒருவர் கொரோனாவால் இறந்த பிறகு அவர் இருந்த இடத்தில் அல்லது பயன்படுத்திய பொருள்களில் அதிகபட்சம் நான்கு மணி நேரத்திற்கு மேலாக கொரோனா வைரசால் இருக்கமுடியாது! ஆகவே,தாரளமாக செல்லலாம்.

முககவசமும்,சமூக இடைவெளியையும் கடைபிடித்த நிலையில் சென்று பேசிவரலாம்! ஒருவர் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும் போது, நம்முடைய அன்பையும்,ஆதரவையும் வெளிப்படுத்துவது தான் நமது பண்பாடு! இன்னும் கூட சில வீடுகளில் பேப்பர் வாங்கிபடிக்க பயப்படும் நிலை உள்ளது.இதுவும் தவறு! நான் தினசரி ஐந்து தினசரிகளை வாங்கிபடிக்கிறேன்.பேப்பர் படித்த பிறகு பயமிருக்கும் பட்சத்தில் கைகளை சோப்பு போட்டு கழுவினால் போதுமானது.” என்றார்.

கொரோனா விவகாரத்தில் மக்களுக்கு தெளிவு ஏற்படாத வரை பல்வேறு வதந்திகளும்,மிகைப் படுத்தபட்ட உண்மைகளும் வலம் வந்து கொண்டே இருக்கும்! ‘எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்பதை ‘எதையும் அவ நம்பிக்கையோடு அணுகவேண்டும்’ என்பதாக சிலர் அர்த்தப்படுத்திக் கொள்வதை பரவலாக காணமுடிகிறது.

இந்த மூன்றரை மாதங்களில் கொரோனா குறித்த மிகைப்படுத்தப்பட்ட அதீத மாயைகள் ஒவ்வொன்றாக உடைபட்டு வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும்!

மூன்று மாதங்களுக்கும் மேலாக கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றி வரும் ஒரு மூத்த சுகாதார அதிகாரி சொன்னதாவது!

பயப்பட வேண்டிய வியாதியில்லை!

ஆரம்பத்தில் திகிலாகவும், எடுத்ததற்கெல்லாம் பயமாகவும் பணியாற்றினோம். ஆனால், இப்போது ஒரு தெளிவுக்கு வந்துவிட்டோம். முக்கியமாக மிக அதிக எண்ணிக்கையிலானவர்கள் சீக்கிரமாகவே குணமாகி செல்கிறார்கள்! ஆகவே, முதலில் 14 நாட்கள் ‘கொரண்டைன்’ வைத்திருந்தோம்.ஆனால்,பிறகு ஏழு நாட்கள் போதும் என்று பெருவாரியான நோயாளிகள் விஷயத்தில் தெரிய வந்தது. ஆகவே,ஏழு நாட்களில், வீட்டுக்கு செல்ல விரும்புபவர்களை அனுப்பி வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருந்து கொள்ளச் சொல்லி அனுப்பி விடுகிறோம்.ஆனால்,இப்போது என்னவென்றால், ஐந்து நாட்களே போதும் என்பது தான் பரவலான அனுபவமாகிவிட்டது.

ஆகவே, ஐந்து நாட்களில் குணமானவர்கள் விடை பெறும் போது, புதியவர்களுக்கு இடம் கிடைக்கவும் வாய்ப்பாகிறது. இன்னும் சில பேருக்கு போனிலேயே கவுன்சிலிங் கொடுத்து வீட்டில் இருந்தே சிகிச்சை எடுக்கவும் மருந்து, மாத்திரைகளை அனுப்பி வைத்து ஊக்குவிக்கிறோம்! ஆகவே,கொரோனா வந்தவர்களிடம் இருந்து மற்றவர்கள் விலகி இருத்தலே போதுமானது. குறிப்பாக அச்சப்படவோ, கலவரப்படவோ வேண்டாம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழும் உரிமை மறுக்கப்பட்டவர்களல்ல

கொரோனாவை விடவும் கொரோனாவை காரணமாக்கி, நாளும் பல பிரச்சினைகள் மக்களை வாட்டிவதைக்கின்றன. மக்கள் எங்களிடம் விதவிதமான சந்தேகங்களைக் கேட்கிறார்கள்! ஒருவர் பதற்றமாக தொலைபேசியில் கேட்டார்! எங்கள் எதிர் பிளாட்டில் இருக்கும் ஒருவருக்கு கொரோனா வந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். ஆனால்,அவரோ காலையில் பால்கனி வந்து சூரிய நமஸ்காரம் செய்கிறார்! இதனால் எங்களுக்கு தொற்று வருமா? என்றார்! கொரோனா வந்தவர்கள் வெளியில் கண்டிப்பாக நடமாடக் கூடாது.ஆனால், அவர்கள் தங்கள் பால்கனியிலோ, ஜன்னல்களிலோ காற்று வாங்குவதையோ, சூரிய கதிர்களை உள்வாங்குவதையோ பதற்றமாக பார்க்க வேண்டியதில்லை. உண்மையில் நல்ல காற்றும், சூரிய ஒளியும் அவர்கள் நலம்பெறத் தேவையானதாகும். இதனால் தான் தற்போது கொரோனா வந்தவர்கள் இருக்கும் பகுதிகளையே அடைத்து, சீல்வைக்க வேண்டியதில்லை என்றும் அரசுக்கு தெரியப்படுத்திவிட்டோம்.

கொரோனா அனைவரையும் உடனே தொற்றிவிடுவதில்லை! சில சமயங்களில் காற்றில் ஓரடி தூரம் கூட பயணிக்கமுடியாமல் அவை கீழே பொதுக்கென்று விழுந்துவிடுகின்றன! மேலும் அப்படி தொற்றினாலும், தொற்றிய அனைவரையும் கொரோனா துவம்சம் செய்துவிடுவதுமில்லை! குறிப்பாக வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களிடம் அதன் பாச்சா பலிப்பதில்லை! மக்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா வைரஸ் வந்தது கூட தெரியாமல் லேசாக சிரமப்படுத்தி, தானாகவே செயலிழந்து அவை அழிந்து விடுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

நமது மூன்றரை மாத அனுபவத்தில் 90 முதல் 95 சதமானவர்களிடமிருந்து கொரோனா பெரிய அளவில் சிகிச்சையோ, மருந்தோ தேவைப்படாமல் விட்டு விலகிவிடுகிறது!” என்றார்!