சிறப்புக் கட்டுரைகள்

கொரோனாவால் 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திய பரிதாபம் சர்வேயில் பரபரப்பு தகவல்கள் + "||" + It is a pity that 62 percent of children drop out of school by Corona

கொரோனாவால் 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திய பரிதாபம் சர்வேயில் பரபரப்பு தகவல்கள்

கொரோனாவால் 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திய பரிதாபம் சர்வேயில் பரபரப்பு தகவல்கள்
கொரோனா தொற்றால் 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ள பரிதாபம் நேர்ந்திருப்பது ஒரு சர்வேயில் அம்பலத்துக்கு வந்துள்ளது.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தாக்கம், அதனால் எழுந்துள்ள சவால்கள், மக்களின் முன்னுரிமைகள் குறித்து அறிவதற்காக குழந்தைகள் உரிமைகளுக்காக இயங்குகிற ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, நாடு முழுவதும் ஒரு சர்வே நடத்தி உள்ளது.


கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரையில், இந்தியா முழுவதும் 7,235 குடும்பங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. வட பிராந்தியத்தில் 3,827 குடும்பங்களும், தென் பிராந்தியத்தில் 556 குடும்பங்களும், கிழக்கு பிராந்தியத்தில் 1,722 குடும்பங்களும், மேற்கு பிராந்தியத்தில் 1,130 குடும்பங்களும் இதில் பங்கேற்றன.

இந்த சர்வேயின் முடிவில் வெளியாகி உள்ள முக்கிய தகவல்கள் இவை:-

* கொரோனா வைரஸ் தொற்று பரவலால் 62 சதவீத வீடுகளில் உள்ள குழந்தைகள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி உள்ளனர். இது சர்வேயில் பங்கேற்ற மொத்த குடும்பங்களில் ஐந்தில் மூன்று பங்கு ஆகும்.

* ஐந்தில் இரு பங்கு குடும்பத்தினரின் குழந்தைகள் பள்ளிகளில் மதிய உணவு பெறவில்லை. மேற்கில் 52 சதவீதத்தினரும், வடக்கில் 39 சதவீதத்தினரும், தெற்கில் 38 சதவீதத்தினரும், கிழக்கில் 28 சதவீதத்தினரும் மதிய உணவு பெறவில்லை. நகர்ப்புறம், கிராமப்புறம் என பார்க்கிறபோது, நகர்ப்புறங்களில் 40 சதவீதத்தினரும், கிராமப்புறங்களில் 38 சதவீதத்தினரும் மதிய உணவு பெறவில்லை.

* சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 40 சதவீதத்தினரால் குடும்பத்தினருக்கு போதுமான உணவு வழங்க முடியவில்லை, 10 பேரில் 8 பேர் தங்களது குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

* 14 சதவீத குடும்பங்களில் ஸ்மார்ட் போன் இல்லை அல்லது ஆன்லைன் கல்விக்கு துணை நிற்கும் வகையில் இணையதள வசதி இல்லை.

* 10 குழந்தைகளில் 4 குழந்தைகள் வீடுகளில் படித்துக்கொண்டே விளையாடுவதாகவும், பள்ளிகள் மூடலால் நான்கில் ஒரு குழந்தை வேலை பார்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

* ஐந்தில் இரு பங்கு குடும்பத்தினர், குழந்தைகளின் கல்விக்காக எந்தவிதமான கல்வி உதவியை பள்ளிக்கூடத்திலோ, கல்வித்துறையிலோ பெறவில்லை என தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் 42 சதவீத குடும்பங்களிலும், நகர்ப்புறங்களில் 40 சதவீத வீடுகளிலும் எந்த கல்வி உதவியையும் பெறவில்லை.

* சர்வேயில் பங்கேற்ற குடும்பங்களில் நான்கில் மூன்று பங்கு குடும்பங்களில் வாழ்வாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 80 சதவீதத்தினர் பண நெருக்கடியில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

* 45 சதவீத குடும்பங்களில் கடன், அடமானம் போன்றவற்றின் மூலம் பணம் பெறத் தொடங்கி உள்ளனர். பத்தில் ஒரு குடும்பத்தினர் வீட்டு பொருட்களை, சொத்துக்களை விற்க தொடங்கி இருக்கின்றனர்.

* ஐந்தில் ஒரு குடும்பத்தினர் பொது வினியோகத்திட்டத்தின்கீழ் தாங்கள் ரே ஷன் பொருட்கள் பெறவில்லை என்று கூறி உள்ளனர்.

இந்த சர்வே முடிவுகள் குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை எந்த கருத்தும் உடனடியாக வெளியிடவில்லை.