சிறப்புக் கட்டுரைகள்

75 வருடங்களில் 175 படங்கள் தயாரித்து சாதனை: “திரையுலகில் மாற்றங்கள் ஏற்பட்ட பின் மீண்டும் படம் தயாரிப்போம்” - ஏவி.எம். சரவணன் பேட்டி + "||" + "We will make a film again after the changes in the screen" - Interview with AVM Saravanan

75 வருடங்களில் 175 படங்கள் தயாரித்து சாதனை: “திரையுலகில் மாற்றங்கள் ஏற்பட்ட பின் மீண்டும் படம் தயாரிப்போம்” - ஏவி.எம். சரவணன் பேட்டி

75 வருடங்களில் 175 படங்கள் தயாரித்து சாதனை: “திரையுலகில் மாற்றங்கள் ஏற்பட்ட பின் மீண்டும் படம் தயாரிப்போம்” - ஏவி.எம். சரவணன் பேட்டி
திரையுலகில் மாற்றங்கள் ஏற்பட்ட பின் மீண்டும் படம் தயாரிப்போம் என்று ஏவி.எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் ஓர் சகாப்தமாக விளங்கியவர் ஏவி.எம். என சுருக்கமாக அழைக்கப்படும்ஏவி.மெய்யப்ப செட்டியார்.

சினிமாவில் கருப்பு-வெள்ளை காலம் முதல் தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பம் வரை பல பிரமிப்பை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அளித்துக்கொண்டிக்கிறது, அவர் உருவாக்கிய ஏவி.எம். படநிறுவனம்.இன்று (ஜூலை 28-ந்தேதி) ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் 113-வது பிறந்தநாள்.

இந்தநிலையில் அவருடைய மகனும், சினிமா தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

தமிழ் திரையுலகில் பாரம்பரியம் மிகுந்த, ஏவி.எம். பட நிறுவனம், 75 வருடங்களில் 175 படங்கள் தயாரித்து சாதனை புரிந்திருக்கிறது. அதன் வெற்றி ரகசியம் பற்றியும் அவர் இங்கே கூறுகிறார்:-

உலகமெல்லாம் பரவியுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஏவி.எம். என்ற மூன்றெழுத்தை இசையுடன் பார்த்ததும், எங்கள் அப்பச்சி ஏவி.எம்.மையும், அவர் எடுத்த படங்களையும் நினைப்பார்கள். செட்டிநாட்டில் தந்தையை ‘அப்பச்சி’ என்று அழைப்பார்கள். அப்பச்சியைப் பற்றி நினைத்தாலே மெய் சிலிர்க்கும். அவர் எங்களுக்கு பொருளையும் புகழையும் கொடுத்தார் என்பதற்காக மட்டும் அல்ல, அவர் வாழ்வு பலரும் பின்பற்றத்தக்கது என்பதற்காக.

தமிழ்நாட்டில் செட்டிநாட்டுப்பகுதியில் காரைக்குடியில் பிறந்தவர், ஏவி.எம்., அவர் தந்தை ஆவிச்சி செட்டியார் அந்த காலத்திலேயே காரைக்குடியில் ஏவி. அண்ட் சன்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் வைத்திருந்தார். அந்த கடையில் ஊசி முதல் கார் வரை கிடைக்கும். அப்பச்சி அந்த கடைக்கு ஓய்வு நேரத்தில் வந்து தொழில் பழகினார். ஆவிச்சி செட்டியாருக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவரே கடையை கவனித்துக் கொண்டார்.

1934-ல் கொல்கத்தா நியூ தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் “அல்லி அர்ஜுனா” என்ற படம் எடுத்தார். அடுத்து “ரத்னாவளி” என்ற படத்தை கொல்கத்தாவில் எடுத்தார். மூன்றாவதாக “நந்தகுமார்” படத்தை பூனாவில் எடுத்தார். மூன்று படங்களும் தோல்வி.

இந்த தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் இந்த தோல்விக்கு என்ன காரணம்? என்று யோசித்தார். “நம்மிடம் ஸ்டூடியோ இல்லாததால் நம் விருப்பப்படி படம் எடுக்க முடியவில்லை. நாமே சென்னையில் ஸ்டூடியோ ஆரம்பித்து படம் எடுக்கலாம்” என்று முடிவு செய்தார். வேறு சில பாகஸ்தர்களைச் சேர்த்துக்கொண்டு சென்னை அடையாரில் உள்ள அட்மிராலிடி ஹவுசில் 1940-ம் ஆண்டு பிரகதி ஸ்டூடியோவை நிர்மாணித்தார்.

முதலில் ‘பூகைலாஸ்’, ‘வசந்தசேனா’, ‘வாயாடி’, ‘போலி பாஞ்சாலி’, ‘என் மனைவி’ போன்ற படங்களை எடுத்தார். 1942-ல் ‘சபாபதி’ படத்தை எடுத்தார். அந்தப் படத்தை இயக்கியது ஏவி.எம்.

அந்தப் படத்தை பார்த்த ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, தன் ‘கல்கி’ இதழின் அட்டையில் ஏவி.எம். படத்தைப்போட்டு ‘ஏவி.எம். இயக்கிய சபாபதி படம் மிகச் சிறந்த படம்’ என்று பாராட்டினார். ஏவி.எம். தயாரித்த கன்னடப் படம் ‘ஹரிச்சந்திரா’வை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். இந்தியாவில் முதல் டப்பிங் படம் இதுதான்.

டப்பிங் கலையை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஏவி.எம். 1945-ல் வெளியான டி.ஆர். மகாலிங்கம், குமாரி ருக்மணி நடித்த ‘ஸ்ரீ வள்ளி’ மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது.

ஏவி.எம். புரொடக்சன்ஸ் நிறுவனத்தை 1945-ம் ஆண்டு அக்டோபர் 14-ந்தேதி சென்னையில் ஆரம்பித்தார். சென்னையில் புதிய மின்சார இணைப்புகள் கிடைக்காததால் தன் சொந்த ஊரான காரைக்குடிக்கு அருகேயுள்ள தேவகோட்டை ரஸ்தாவில் ஏவி.எம். ஸ்டூடியோவை நிர்மாணித்தார். ஏவி.எம். 1947-ல் ‘நாம் இருவர்’ படத்தை எடுத்தார். பாரதியின் பாடல் உரிமைகளை ஜேசிங்லால் மேத்தா என்பவரிடமிருந்து வாங்கி ‘நாம் இருவர்’ படத்தில் சேர்த்தார்.

பாரதியார் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவியது. பிற்காலத்தில் பாரதியார் பாடல்களை எந்த பணமும் வாங்கிக் கொள்ளாமல் தேசிய உடமையாக்கினார். தேவகோட்டை ரஸ்தாவில் இருந்த ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்றினார். அந்த ஸ்டூடியோவில் படப்பிடிப்புக்கு ஏற்ற எல்லா வசதிகளையும் செய்தார். அங்கு எடுக்கப்பட்ட முதல் படம் ஏவி.எம்.-ன் ‘வாழ்க்கை’. அந்தப் படம் 22.12.1949-ல் வெளியிடப்பட்டது. வெள்ளி விழா கொண்டாடியது. இதில்தான் வைஜெயந்திமாலாவை அறிமுகப்படுத்தினார்.

எங்கள் அம்மா ஏவி.எம். ராஜேஸ்வரி அம்மையார், அப்பச்சியின் எல்லா வெற்றிக்கும் துணையாக இருந்தவர். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கல்யாண மண்டபத்திற்கு ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் என்று பெயர் வைத்தார். சிலம்புச் செல்வர் மா.பொ.சி., “ஏ.வி.எம். தன் மனைவி ராஜேஸ்வரி அம்மையார் பெயரில் கல்யாண மண்டபம் கட்டியிருக்கிறார். இது ஏவி.எம்.மனைவிக்கு கட்டிய தாஜ்மஹால்” என்று குறிப்பிட்டார்.

ஏவி.எம். ஒரு பல்கலைக்கழகம். அதில் அப்பச்சிதான் வேந்தர். “நான் தமிழில் சரியான உச்சரிப்பில் பாடுகிறேன் என்றால் அதற்கு ஏவி.எம்.-ல் எனக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிதான் காரணம்”, என பலமுறை பி.சுசீலா கூறியுள்ளார்.

ஏவி.எம். பல்கலைக்கழகத்தில் இருந்து தயாராகி பிரபலமானவர்கள் பலர். நடிகர்களில் டி.ஆர்.மகாலிங்கம், சிவாஜி கணேசன், கன்னட ராஜ்குமார், எஸ்.எஸ்.ஆர்., கமல்ஹாசன், வி.கே.ராமசாமி, சிவகுமார். நடிகைகளில் வைஜெயந்திமாலா, குமாரி ருக்மணி, விஜயகுமாரி, குட்டி பத்மினி.

ஏவி.எம். நிறுவனத்தில் 5 முதல்-அமைச்சர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அறிஞர் அண்ணா ‘ஓர் இரவு’ (கதை, வசனம்),மு.கருணாநிதி ‘பராசக்தி’ (வசனம்), எம்.ஜி.ஆர். ‘அன்பே வா’, தெலுங்கில் என்.டி.ராமாராவ் ‘பூ கைலாஷ்’, ‘நாதி ஆட ஜென்மே’, ‘ராமு’, ‘சிட்டி செல்லலு’. ஜெயலலிதா ‘அனாதை ஆனந்தன்’, ‘எங்க மாமா’, ‘மேஜர் சந்திரகாந்த்’.

அப்பச்சி உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் படுத்திருந்தார். எல்லோரும் வந்து பார்த்துவிட்டு போனார்கள். அப்பச்சி என்னை அழைத்து ‘சரவணா பாத்ரூமில் வீணாக எரியும் விளக்கை அணைத்துவிடு’ என்றார், நான் அணைத்தேன். அவர் உயிரும் அணைந்தது. எப்போதும் வீணாக எதையும் செய்யக்கூடாது என்பது அவர் கொள்கை. அவரின் இறுதிச் சொல்லும் அதுதான். அப்பச்சி என்னிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, ஏவி.எம். மோனோகிராமைச் சுட்டிக்காட்டி, ‘இது வெறும் மூன்று எழுத்து அல்ல. என் 50 வருட உழைப்பின் அடையாளம். இதை எந்த அளவுக்கு உயரக் கொண்டு போகிறீர்களோ, அந்த அளவுக்கு வளருவீர்கள்’ என்றார்.

அப்பச்சி உருவாக்கிய ஏவி.எம். ஸ்டூடியோவை, தொடர்ந்து 75 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி, 175 படங்களுக்கு மேல் தயாரித்திருக்கிறோம் என்பது எங்களுக்குப் பெருமை. ‘அயன்’, ‘சிவாஜி’ திரைப்படங்களுக்குப் பிறகு ஒரு இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. தயாரிப்பு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த மாற்றங்கள் வரும்போது மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட்டு, எங்கள் அப்பச்சியின் எண்ணத்தை செயலாக்குவோம். இந்த உலகத்தில் எனக்கு இருக்கும் ஒரே ஆசை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும், அப்பச்சி எங்கு பிறந்திருக்கிறாரோ அங்கு அவருக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்பதுதான்.

இவ்வாறு பட அதிபர் ஏவி.எம். சரவணன் கூறினார்.