இன்று உலக இயற்கை பாதுகாப்பு தினம்: கொரோனா தொற்றால் பாதுகாக்கபட்ட இயற்கை


இன்று உலக இயற்கை பாதுகாப்பு தினம்: கொரோனா தொற்றால் பாதுகாக்கபட்ட இயற்கை
x
தினத்தந்தி 28 July 2020 8:05 AM GMT (Updated: 28 July 2020 8:05 AM GMT)

இன்று உலக இயற்கை பாதுகாப்பு தினம்: கொரோனா அச்சத்திற்கு இடையே, ஊரடங்கால் நன்மையும் ஏற்படத்தான் செய்திருக்கிறது. உலகளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் சற்று குறைந்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.


புதுடெல்லி: 

உலகம் மனிதர்களின் மாசுகளால் கடும் சேதம் அடைந்து இருந்தது. மனிதர்களால் கடுமையாக சேதமடைந்த சூழலை ஒரு தொற்றுநோயால் சரியாக்க முடியும்  என்று யாரும் நினைத்ததில்லை.

கொரோனா அச்சத்திற்கு இடையே, ஊரடங்கால் நன்மையும் ஏற்படத்தான் செய்திருக்கிறது. உலகளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் சற்று குறைந்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றுநோயால் போடப்பட்ட ஊரடங்கால் தொழிற் சாலைகள் மூடப்பட்டதும் போக்குவரத்து குறைந்து வாகங்களில் இருந்து வெளியேறும் புகை குறைந்ததால். காற்றில் மாசு குறைந்து உள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஊரடங்கால் தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் ஒரு பொற்காலம் என்பதை நிரூபித்தது.

ஊரடங்கை கடுமையாக அமுல்படுத்திய நாடுகளில் ஏப்ரல் மாதத்தில் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 26 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. பிரிட்டனில் 31 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 28 சதவீதமும் குறைந்துள்ளது.

தினசரி கார்பன் வெளியேற்றத்தை பொறுத்தவரை, அதிகபட்சமாக அமெரிக்காவில் 4 சதவீதம் குறைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய யூனியனில் 2.1 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்தியாவில் தினசரி கார்பன் வெளியேற்றம் 1.7 சதவிதம் நிறுத்தப்பட்டிருக்கிறது. சீனாவில், மிகக்குறைவாக அதாவது 0.2 சதவிதம் மட்டுமே தணிந்திருக்கிறது. இவை தவிர்த்து பிற உலக நாடுகளில் 5.5 சதவீதமும், உலக அளவில் தினசரி சராசரி 13.6 சதவீதமும் குறைந்துள்ளது.

விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதால் அதன் மூலம் 60 சதவீதம் கார்பன் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்கள் இயங்காததால் 36 சதவிதமும், மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகள் இயங்காததால் 86 சதவீதம் கார்பன் வெளியேற்றமும் கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

காற்று மற்றும் பிற மாசுபாடு வெகுவாகக் குறைந்தது மட்டுமல்லாமல், வனவிலங்குகளும் தங்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து நகரங்கள் முழுவதும் சுற்றித் திரிந்தன.

டெல்லியில் யமுனா சுத்தமான தண்ணீராக மாறி உள்ளது ஊரடங்கு காரணமாக இயற்கையை குணப்படுத்துவதற்கான சிறந்த எடுத்துக்காட்டுஇது  காணப்படுகிறது

டெல்லி மாசு கட்டுப்பாட்டுக் குழுவின் கண்டுபிடிப்பின்படி, ஊரடங்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது யமுனா சுமார் 33 சதவீதம் தூய்மையாக உள்ளது.

ஊரடங்கு காலத்திற்கு முன்பு, யமுனா வழக்கமாக நதியில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நச்சுத்தன்மையுடன் நச்சு நீரைக் கொண்டிருந்தது.

ஊரடங்கு காற்றின் தரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஊரடங்கிற்கு முன்பு, டெல்லி-என்.சி.ஆரில் காற்றின் தரம் சில நேரங்களில் 300 க்கு மேல் இருந்தது, இதனால் சுவாசிப்பது கடினம். இருப்பினும், ஊரடங்கிற்கு பிறகு நிலைமை மாறி உள்ளது.

மார்ச் 25 அன்று ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து, டெல்லியில் உள்ள காற்றில் மாசின் அளவு 130 ஐ தாண்டவில்லை என்பதை தெளிவாகக் குறிக்கிறது.

குளிர்காலத்தில் டெல்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தில் கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு இதுபோன்ற ஊரடங்கை  சாத்தியமான நடவடிக்கையாக பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் வாழ்வில் இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நாம் இந்த நாளில் மட்டுமல்லாமல் தினமும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் இந்த நாள் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

நமது பூமியில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் இருப்பதால், இயற்கை வளங்களை (Natural Resources) பாதுகாப்பதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நம் அனைவரிடமும் இருக்க வேண்டும். இயற்கையையும் அதன் வளங்களையும் பாதுகாப்பதில் மக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டியது மிக அவசியமாகும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளிற்கான சிறப்பு தீம் ஒன்று முன்னரே முடிவெடுக்கப்படும். இருப்பினும், இந்த ஆண்டு தொற்றுநோய் காரணமாக உலகளாவிய தீம் முடிவு செய்யப்படவில்லை.

இயற்கை வளங்கள் மிக விரைவான விகிதத்தில் குறைந்து வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மக்கள்தொகை அதிகரிப்பு. தொழில்நுட்ப முன்னேற்றமும் ஆடம்பரமான வாழ்க்கை முறையும், புவி வெப்பமடைதல், ஓசோன் லேயரில் சேதம் காட்டுத் தீ, போன்ற பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எழுப்பியுள்ளன.

இயற்கையில் சமநிலையை நிலைநிறுத்துவதற்கு பொது மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும். நம் தினசரி வாழ்வில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலே இயற்கையை பாதுகாக்க நம்மாலான பணியை செய்த திருப்தியை நாம் பெறலாம். அவை என்னவென்று கீழே காணலாம்:

முடிந்தவரை, உணவு, நீர் மற்றும் வழக்கமான பயன்பாட்டின் பொருட்களை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். தேவைக்கேற்ற உபயோகத்தை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பயன்பாட்டில் இல்லாதபோது விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களை அணைப்பதன் மூலம் மின் ஆற்றலைச் சேமிக்கலாம்.

தண்ணீரை வீணாக்குவதைத் தவிர்க்க, கை கால் துலக்கிய பறகும், மற்ற பயன்பாடுகளுக்குப் பிறகும் குழாயை நன்றாக மூட வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் இந்த சிறிய செயல்களை செய்து நாம் வளங்களைப் பாதுகாப்பதில் நமது பங்களிப்பை அளிக்கலாம்.

கொரோனாவில் இருந்து நாம் விடுபட்டாலும் வாரம் ஒருமுறை வாகன நடமட்டத்தை குறைக்கலாம். தொழிற்சாலைகள் இயங்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.

Next Story