சிறப்புக் கட்டுரைகள்

இலங்கை தேர்தலும், எதிர்கால சவால்களும்! + "||" + Sri Lanka election: Rajapaksa brothers tighten grip on power

இலங்கை தேர்தலும், எதிர்கால சவால்களும்!

இலங்கை தேர்தலும், எதிர்கால சவால்களும்!
இலங்கையில் தேர்தல் இரண்டுவிதமான முறையில் நடத்தப்படுகிறது! ஒன்று நேரடியாக ஓட்டு போட்டு உறுப்பினரை தேர்வு செய்வது! மற்றொன்று கட்சிக்கு போடுவதன் மூலம் விகிதாசார முறையில் உறுப்பினர் தேர்வு செய்யப்படுவது!

இலங்கை தேர்தல் முடிவுகள் ராஜபக்சே சகோதரர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளன. கூட்டணி கட்சிகளையும் சேர்த்து மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை இடங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி பெற்றுள்ளது. இந்த வெற்றியை ஈட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சிகளையும், சிறிய அமைப்புகள் பலவற்றையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா அரவணைத்து தேர்தலை எதிர்கொண்டது என்பது தான் முக்கியம்! மறுபக்கம் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்றி, அவிழ்த்து கொட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டை போல சிதறி தேர்தலை எதிர் கொண்டன என்பதும் கவனத்திற்குரியது.

2 கோடியே 17 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள சிறிய நாடான இலங்கை, பூகோள ரீதியில் தெற்காசிய பசிபிக் பிராந்தியத்தில் ஒரு முக்கியத்துவமான நாடாகும். சிங்களர்கள் 74.9 சதவீதமும், இலங்கை தமிழர்கள் 11.2 சதவீதமும், இஸ்லாமியர்கள் 9.7 சதவீதமும், இந்திய வம்சாவளித்தமிழர்கள் 4.2 சதவீதமும் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் வெறும் 1,62,63,885 தான்! இதில் 71 சதவீதமானோர் கொரோனா அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் வாக்களித்தனர் என்பது தான் ஆச்சரியம்!

மொத்தமே 225 தொகுதிகள் கொண்ட இவ்வளவு சிறிய நாட்டில் 46 அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 பேர் போட்டியிட்டனர் என்பது மட்டுமல்ல, சுயேச்சை குழுக்களாக மேலும் 3,800 பேரையும் சேர்த்து 7,452 பேர் களம் கண்டனர் என்பது தான் சுவாரசியம்! இதில், ராஜபக்சே சகோதரர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா, சுஜித் பிரேமதாசாவின் ஐக்கிய தேசிய முன்னணி, அனுர குமார நாயகாவின் தேசிய மக்கள் கட்சி, தமிழரசு கட்சி தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு, ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவையே முக்கியத்துவமானதாகும்!


இது வரையிலான தேர்தல்களில் இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியும் முக்கிய சிங்கள கட்சியாகவும், தமிழரசு கட்சி உள்ளிட்ட ஓரிரு கட்சிகள் மட்டுமே தமிழர் கட்சியாகவும் அறியப்பட்டு வந்தன! ஆனால், முற்றிலும் புதிய கட்சிகளான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவும், ஐக்கிய மக்கள் கட்சியும் இந்த தேர்தலில் முதல் 2 இடங்களை பெற்றது மட்டுமல்ல, பழைய பெரிய கட்சிகள் ஒரே ஒரு இடத்தை தக்கவைப்பதே அவற்றுக்கு பெரும்பாடாகி விட்டது. காரணம் தாங்கள் உருவான ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியை பிளந்து தான் ராஜபக்சே சகோதரர்கள் புதிய கட்சியை தோற்றுவித்தனர்! தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து ஒரு சிங்களர் கூட ஜெயிக்க முடியவில்லை. அக்கட்சியின் சார்பில் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்று இருப்பது தமிழரான அங்கஜன் ராமநாதன் என்பவர் தான்! அதே போல ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய சுஜித்பிரேம தேசா தான் இன்று பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சியை கட்டிஎழுப்பியுள்ளார்! அதே சமயம் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. எனினும் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒரு இடம் வழங்கப்படுகிறது! தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரசு கட்சியும் பலவாறாக உடைந்து போனது. இதனால், சென்ற தேர்தலில் 16 இடங்களை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் 9 இடங்களை மட்டுமே பெறமுடிந்தது. ஆயினும் கூடுதலாக ஒரு இடம் பெற்றுள்ள வாக்குகள் அடிப்படையில் கிடைத்துள்ளது!

இலங்கையில் தேர்தல் இரண்டுவிதமான முறையில் நடத்தப்படுகிறது! ஒன்று நேரடியாக ஓட்டு போட்டு உறுப்பினரை தேர்வு செய்வது! மற்றொன்று கட்சிக்கு போடுவதன் மூலம் விகிதாசார முறையில் உறுப்பினர் தேர்வு செய்யப்படுவது! நேரடி தேர்வு முறையில் 196 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். விகிதாசார முறையில் 29 பேர் தேர்வாகின்றனர். ஓட்டுபோடும் மக்களுக்கு 3 ஓட்டு போடும் உரிமை வழங்கப்படுகிறது. ஒன்று வேட்பாளருக்கு! மற்றொன்று கட்சிக்கு! மூன்றாவது விருப்ப வேட்பாளராக ஒருவரை குறிப்பிட முடியும்! இந்த வகையில் தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா நேரடியாக 128 இடங்களிலும், விகிதாசார அடிப்படையில் 17 இடங்களிலும் வந்துள்ளது. அதேபோல ஐக்கிய மக்கள் கட்சியும் நேரடியாக 47 இடங்களிலும், விகிதாசார முறையில் 7 இடங்களிலும் வந்துள்ளது. அதே போல விருப்ப வேட்பாளர் என்ற வகையில் ராஜபக்சே 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் பெற்று இலங்கையின் வரலாறு காணாத தேர்தல் வெற்றியை ஏற்படுத்தியுள்ளார்!


2009-ம் ஆண்டின் மிகப்பெரிய போர் மற்றும் உயிரிழப்புகளுக்கு பிறகு நடக்கும் மூன்றாவது தேர்தல் இது! இந்த தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தனி நாடு, ஆயுத போராட்டத்திற்கான ஆதரவு நிலை ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்தது ஒரு மிகப்பெரிய மாற்றமாகும். பிரசாரத்தின் போக்கில் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கான உரிமைகள் மற்றும் அதிகார பகிர்வு, பொருளாதார பிரச்சினைகள் ஆகியவையே முக்கியத்துவம் பெற்றன! அதேபோல முக்கிய சிங்கள கட்சிகள் பிரசாரத்திலும் தமிழர்களை ஒடுக்குவது, ஒழிப்பது தொடர்பான பேச்சுகள் இல்லை. ஏனெனில் இரு பெரிய சிங்கள கட்சிகளிலும் சிறுபான்மையின தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர் கட்சிகளும் இடம் பெற்று இருந்தன! இந்த வகையில் 25 தமிழர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளது கவனிக்கத்தக்கது. இத்துடன் ஸ்ரீலங்கா பெரமுனா கட்சியானது விகிதாசார அடிப்படையில் மேலும் ஒரு தமிழருக்கும், 3 இஸ்லாமியர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது! சிங்களர்கள் தரப்பில் இனவாத கட்சியாக வெகுகாலம் அறியப்பட்டு வந்த ஜே.வி.பி என்ற கட்சி இந்த தேர்தலில் தேசிய மக்கள் கட்சியாக உருமாற்றம் கண்டது! ஆனால், அதற்கு சென்ற முறை கிடைத்த அளவில் பாதியளவான 3 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது!

எதிர்கால சவால்கள் என்ன?

• ராஜபக்சே சகோதரர்கள் பெருவெற்றி பெற்றுள்ளதால் அவர்களின் குடும்ப ஆதிக்கம் வலுப்பெறும். ராஜபக்சே தன் மகன் நாமல் ராஜபக்சேவை வருங்கால அதிபராக முன்னிறுத்தக்கூடும். இதனால் அவரது சகோதரர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

• 19-வது அரசியல் சட்டதிருத்தப்படி ஒருவர் 2 முறைக்கு மேல் இலங்கை அதிபராக இருக்கக்கூடாது என்ற சட்டத்தை தன் பெரும்பான்மை பலத்தை கொண்டு ராஜபக்சே மாற்ற முயற்சிப்பார் என சொல்லப்படுகிறது. அரசியல் சட்டத்தில் இது போல சில மாற்றங்களை செய்ய ராஜபக்சே முயல்வார். இதற்கு அதிபரான கோத்தபய எந்தளவுக்கு ஒத்து போவார் என்பது கேள்விக்குறியாகும்!

• அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு ஆட்சியை தர வேண்டும் என்ற நிர்பந்தம் அவருக்கு பலதரப்பிலும் இருப்பதால், அவர் ஒரு சார்பு நிலையை சுலபத்தில் எடுக்க முடியாது.

• ஏற்கனவே 2009 யுத்தம் தொடர்பான மனித உரிமை மீறல்கள், உயிர்பலிகள் தொடர்பாக சர்வதேச அளவில் மகிந்தராஜபக்சே பெயர் சரிந்துள்ளதால் அதை சரி செய்வதற்கு கிடைத்த வாய்ப்பாக இந்த ஆட்சியை அவர் பயன்படுத்த கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

• ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கூட்டணியில் இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக இடது முன்னணி, முற்போக்கு தமிழ் கட்சி, இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆகிய 10-க்கும் மேற்பட்ட பலதரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஜனநாயக அமைப்புகள் உள்ளதால் தமிழர்களை பாதிக்கும் அதிகார அத்துமீறல்களுக்கு இடம் இருக்காது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

• பொருளாதார ரீதியாக இலங்கையை மேம்படுத்த வேண்டும். பெரிய வல்லரசு நாடுகளின் நிர்பந்தத்திற்கு பணியாத, இறையாண்மை கொண்ட தனித்துவமிக்க நாடாக இலங்கையை பாதுகாக்க வேண்டும். நிரந்தர அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் சாத்தியப்படுத்த வேண்டும் ஆகியவையே தற்போதைய ஆட்சியாளர்கள் முன்புள்ள சவால்களாகும்!


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் பசுவதை தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையில் பசுவதை தடை சட்டத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
2. இலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் தீ
இலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுக்குள் கொண்டு வர இந்திய-இலங்கை கடற்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
3. இலங்கை கடலில் தீப்பிடித்து எரியும் கப்பலில் தீ கட்டுக்குள் வருகிறது
தீ விபத்துக்கு உள்ளான எம் டி டைமண்ட் கப்பல் 35 நாட்டிக்கல் மைல்கள் வெற்றிகரமாக இழுத்து வரப்பட்டது.
4. இலங்கையில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல் - சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க தீவிர முயற்சி
இலங்கையில், கப்பலில் பிடித்த தீயை அணைக்க இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா என 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
5. "வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" - இலங்கை அரசு
பிராந்திய ரீதியிலான வெளியுறவு கொள்கை வகுப்பின் போது இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...