சிறப்புக் கட்டுரைகள்

அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் அமோனியம் நைட்ரேட் + "||" + Ammonium nitrate everywhere

அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் அமோனியம் நைட்ரேட்

அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் அமோனியம் நைட்ரேட்
அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் அமோனியம் நைட்ரேட் நிறைந்து காணப்படுகிறது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தின் குடோனில் அமோனியம் நைட்ரேட் வெடித்ததையடுத்து தான் இந்த அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன? என்ற ஆர்வம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பெய்ரூட்டில் வெறும் 2,750 டன் அமோனியம் வெடித்ததற்கே இவ்வளவு பெரிய பேரழிவை அந்த நாடு பார்க்க வேண்டியதாகி விட்டது.

வெடித்த இடத்தில் இருந்து சுமார் 15 கி.மீ சுற்றளவுள்ள பகுதிகள் வரையில் உள்ள அனைத்து கட்டிடங்களும், அதில் வாழும் மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த அமோனியம் நைட்ரேட் தான் நமது இந்தியாவில் மிக அதிக பயன்பாடுள்ள ரசாயனமாகும். ஆண்டுக்கு இந்தியாவில் 10 லட்சம் டன்களுக்கும் அதிகமான அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது! அதுவும் அமோனியம் நைட்ரேட் இல்லையென்றால் இன்றைக்கு இந்தியாவில் விவசாயமே இல்லை என்ற அளவுக்கு நாம் அதை சார்ந்திருக்கிறோம்.

இது வெள்ளை படிகம் போல இருக்கும்! இது நீரில் நன்கு கரையும்! இதை அடர்த்தியான அமிலமாகவும், ‘ஜெல்’ போலவும் மாற்றலாம்! இதற்குள் நைட்ரஜன் 3 சதவீதம் இருக்கும். தனிப்பட்ட முறையில் இது எரியத்தக்க வேதிப் பொருளல்ல. ஆனால், இது 169 டிகிரி சென்டிகிரேட் தன்னகத்தே கொண்டது என்பதால் இதில் சிறிதளவு மற்றொரு ரசாயனத்தின் சேர்மானம் சேர்ந்தால் கூட இது அதிவேகமாக வெப்பத்தை வெளிப்படுத்தவல்லது. பொதுவாக இது எளிதில் மங்கிவிடுவதால் இதில் எரியத்தக்க மற்றொரு பொருளை சேர்த்து பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. 1659-ம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு முதல் மற்றும் இரண்டாம் உலகப்போருக்கு வெடிகுண்டு தயாரிக்க மிகவும் பயன்பட்டது.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தவுடன் பல லட்சம் டன் தேங்கிவிட்டன. ஆகவே, தேங்கியவற்றை என்ன செய்வது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது தான் எதிர்பாராதவிதமாக இது சிதறியிருந்த நிலத்தில் தாவரங்கள் பசுமையாக முளைத்து வருவது கண்டறியப்பட்டது. ஆக, வளரும் நாடுகளின் விவசாயத்திற்கு விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பார்க்க முடியும் என் கண்டறியப்பட்டது. அப்படித்தான் 1960களில் இந்தியாவிற்குள் விவசாயப் பயன்பாட்டிற்காக நுழைக்கப்பட்டது.

விவசாய பயிர்களுக்கு தழைச்சத்து மிகவும் இன்றியமையாததாகும். முன்பெல்லாம் இழை, தழைகளை மக்கவைத்து இயற்கை உரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இதை நீரில் கலந்து தெளித்தால் போதும் பயிர்கள் மளமளவென்று வளர்ந்து மகசூல் தரும் என வற்புறுத்தி தரப்பட்டது. பொதுவாக தழைச்சத்து உரங்களை தான் பயிர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளும். இது ஈரப்பதத்திற்கு முக்கியமானதாகவும் பார்க்கப்பட்டது.

மேலும், இது பூச்சி மருந்து, களைக்கொல்லி ஆகியவற்றிலும் பயன்படுகிறது. ஆகவே, ஆண்டுக்காண்டு இதன் தேவை விவசாயத்தில் அதிகரித்துக்கொண்டே போனது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஆண்டுக்கு 6 லட்சம் டன் அமோனியம் நைட்ரேட் உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் அமோனியம் நைட்ரேட் கலந்துள்ளது! இதனால் நிலமும், பயிர்களும் நச்சுத்தன்மை கொண்டதாகி விடுகின்றன என்ற பலமான குற்றச்சாட்டுகளும் உள்ளன. அமோனியம் நைட்ரேட் பயன்பாடு விவசாயத்தில் அதிகரித்தது முதல் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பும் அதிகரித்தது.

அமோனியம் நைட்ரேட் மலைகளை தகர்ப்பதற்காக குவாரிகள் மற்றும் சுரங்கங்களில் வெடிபொருளாக பயன்படுகிறது. இது தவிர வெடிகுண்டு தயாரிப்புக்கு அதிகமாக பயன்படுவதால் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தும் பயங்கரவாத செயல்களில் எல்லாம் இது சம்பந்தப்பட்டுள்ளது. குளிர்பதன சாதனங்களில் தண்ணீரை உறைய வைக்க பயன்படுகிறது. ராணுவ பயன்பாட்டிற்கு இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான் 2012-ம் ஆண்டில் இந்திய அரசு அமோனியம் நைட்ரேட் பயன்பாட்டிற்கு கடுமையான விதிகளை உருவாக்கியது. இந்தியாவில் அமோனியம் நைட்ரேட் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 3 முதல் 3½ லட்சம் டன் இறக்குமதியாகிறது. இதில் 45 சதவீதம் வெடிமருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இது தவறானவர்கள் கைகளுக்கு போய்விடுவதாக அரசுக்கு தகவல்கள் வந்ததையடுத்து இறக்குமதி விவகாரத்தில் மட்டுமின்றி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்வதற்கும் கூட கெடுபிடிகள் அதிகமானது.

ஒருவர் 5 கிலோ அளவுக்கு வாங்கினால் கூட விற்பனையாளர் வாங்கியவர் குறித்து அனைத்து தகவல்களும் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் 5 கிலோ அமோனியம் நைட்ரேட்டில் 5 வெடிகுண்டுகள் தயாரித்துவிடலாம்.

இந்திய துறைமுகங்கள் பெரும்பாலானவற்றில் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. உதாரணத்திற்கு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் மட்டுமே ஆண்டுக்கு சுமார் 2½ லட்சம் டன் அமோனியம் நைட்ரேட் வந்து இறங்குகின்றன. ஆகவே, பொதுவாக எப்போதும் சராசரியாக 30 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட்டாவது துறைமுகத்தின் கிடங்கில் இருக்கும்.

சென்னை துறைமுகத்திற்கு 2016-ம் ஆண்டில் கொரியாவில் இருந்து 740 டன் அமோனியம் நைட்ரேட் வந்திறங்கியது. ஆனால், அதற்கு ஆர்டர் தந்த கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இறக்குமதிக்கான உரிய அனுமதி ஆவணம் இல்லை. ஆகவே, அதை தர மறுத்துவிட்டது துறைமுக நிர்வாகம்.

இதுகுறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஆகஸ்டு 2016-ல் விசாரணைக்கு வந்தது. “இதை விவசாய காரணங்களுக்காக பயன்படுத்தப்போவதாக சொல்வதை நம்ப இடமில்லை. ஏற்கனவே சுமார் 20 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட் மாயமானதாக உளவுத்துறை சொல்கிறது. ஆகவே, இந்த ஆபத்தான ரசாயன இறக்குமதிக்கு அனுமதியில்லை. இந்த அமோனியம் நைட்ரேட்டை உடனடியாக துறைமுகத்தில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்” என்று நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தீர்ப்பு வழங்கினார். அந்த சரக்கு 37 கன்டெய்னர்களில் வட சென்னை மணலி பகுதியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

பெய்ரூட் விபத்தின் எதிரொலியாக மணலியில் அமோனியம் நைட்ரேட் இருந்த தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்புத்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தீயணைப்பு வீரர்களுடன் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள குடோன்களில் ஆய்வு செய்தார். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் விரிவாக நடத்தப்பட்டன.

இதற்கிடையில் சுங்க இலாகா அதிகாரிகள், “அமோனியம் நைட்ரேட் குறித்து மக்களிடம் அச்சம் தேவையில்லை. விரைவில் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் அனைத்தும் ஏலம் விடப்பட்டு அப்புறப்படுத்தப்படும்” என விளக்கம் அளித்திருந்தனர். இதனையடுத்து அமோனியம் நைட்ரேட் இருந்த கன்டெய்னர்கள் நேற்றுடன் முழுமையாக ஐதராபாத்துக்கு அப்புறப் படுத்தப்பட்டன.

மேலும் பெய்ரூட் விபத்தையடுத்து தமிழகம் முழுவதும் உரக்கடைகள், உர சேமிப்பு கிடங்குகள், குவாரிகளில், ‘அமோனியம் நைட்ரேட்’ சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்!



ஆசிரியரின் தேர்வுகள்...