சிறப்புக் கட்டுரைகள்

ராஜஸ்தானில் நடந்தேறிய ராஜதந்திரம் என்ன? + "||" + What is the diplomacy of Rajasthan?

ராஜஸ்தானில் நடந்தேறிய ராஜதந்திரம் என்ன?

ராஜஸ்தானில் நடந்தேறிய ராஜதந்திரம் என்ன?
ராஜஸ்தானில் நடந்தேறிய ராஜதந்திரம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு மாதமாக முடிவு தெரியாமல் இழுபறியில் இருந்த ராஜஸ்தான் அரசியல் ரகளை முடிவுக்கு வந்தது. சச்சின் பைலட் பா.ஜ.க. பக்கம் போகப்போகிறார். காங்கிரஸ் அரசு கவிழப்போகிறது. இனி தொங்கு சட்டசபையா? பா.ஜ.க. ஆட்சியா? என்று பலவாறாக யூகிக்கப்பட்ட அனைத்தும் பிழையாகி சச்சின் மீண்டும் காங்கிரசுக்கே திரும்பிவிட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் முதுபெரும் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட்! இவர் 1970 முதல் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். 1970-களில் வங்கத்திலிருந்து போர் காரணமாக இந்தியா வந்த அகதிகளின் முகாமில் அசோக் கெலாட் செய்த தொண்டுகளை பார்த்து நெகிழ்ந்த இந்திராகாந்தி அவருக்கு இளைஞர் காங்கிரசில் பொறுப்பு தந்தார். பிறகு படிப்படியாக பலவேறு பொறுப்புகள் பெற்று வளர்ந்து இவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் மூன்றாவது முறையாக முதல்-மந்திரியாக உள்ளார்! மிகவும் எளிமையான தலைவர்! மக்கள் செல்வாக்குள்ளவர்! 2018-ல் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பத்தின்படி இவரை கட்சி மேலிடம் முதல்-மந்திரியாக ஆக்கியது!

ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட். இளம் பைலட்டாக இருந்த இவர் தந்தையின் மரணத்திற்கு பிறகு 2002-ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். அடுத்த இரண்டே ஆண்டுகளில் இவருக்கு எம்.பி.யாகும் வாய்ப்பு கிடைத்தது. அழகான தோற்றம், அதிசிறப்பான ஆங்கில உச்சரிப்பு ஆகியவற்றால் காங்கிரசில் ராகுல்காந்தியின் நம்பிக்கையை பெற்ற இவர் அடுத்த தேர்தலிலேயே மத்திய காங்கிரஸ் மந்திரிசபையில் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை மந்திரியானார். அதே சமயம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் இவர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி தரப்பட்டது. 2018 சட்டமன்ற தேர்தல் நடந்த போது சச்சினின் ஆதரவாளர்கள் அவர் முதல்-மந்திரி ஆவார் என்று கட்சிக்குள்ளும், வெளியிலும் பேசி வந்தனர். ஊடகங்களில் கட்சியின் வெற்றிக்கே சச்சின் பைலட் தான் காரணம் என்றெல்லாம் லாபி செய்தனர். ஆனால், அது நடக்கவில்லை.

சச்சின் பைலட் என்ன தான் ராகுல்காந்தி நண்பர் என்றாலும் முதல்-மந்திரி பதவியை திணிக்கக்கூடாது என்ற நிலையில் கட்சி மேலிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் மக்கள் மத்தியில் அசோக் கெலாட்டிற்கு இருந்த செல்வாக்கை மதிப்பிட்டு அவருக்கு தரவேண்டிய முதல்-மந்திரி வாய்ப்பை வலுக்கட்டாயமாக சச்சினுக்கு மாற்றித்தர விரும்பவில்லை.

ஆயினும் சச்சின் பைலட்டிற்கு துணை முதல்-மந்திரி பதவி தரப்பட்டது. ஆனால், இதில் சச்சின் திருப்தியடையவில்லை என்பதான பேச்சு பரவலாக வெளிப்பட்டு, அவ்வப்போது முதல்-மந்திரியுடன் மோதும் போக்கையும் கடைப்பிடித்தார். அனுபவசாலியான அசோக் கெலாட் சச்சினை பக்குவமாக கையாண்டார். எனினும் பா.ஜ.க. பக்கம் சச்சின் நெருங்குவது போன்ற தகவல்கள் வந்தன.

முதல்-மந்திரி அசோக் கெலாட் வீட்டில் நடந்த கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கொறடா கட்டளையை மீறி கலந்து கொள்ளாமல் தவிர்த்தார் சச்சின். அவரது ஆதரவாளர்கள் பா.ஜ.க.வின் மத்திய மந்திரி ஒருவருடன் பேரம் பேசுவதாக தகவல்கள் வெளியாயின. அது தொடர்பாக ஆடியோ டேப் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. இது காங்கிரஸ் கட்சிக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் பா.ஜ.க.வினர் சச்சினை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவுகள் போட்டனர்.

இதையடுத்து பா.ஜ.க.வின் ‘ஆபரேசன் லோட்டஸ்’ தொடங்கி விட்டது. மத்தியபிரதேசத்தில் மார்ச்சில் நடந்தது போல ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க. ஆட்சி வரும் என பேசப்பட்டது.

உடனே இதை விசாரிக்க காவல்துறை சிறப்பு குழுவை முதல்-மந்திரி அறிவித்தார். இதையடுத்து சச்சின் கொந்தளித்தார். காவல்துறை தங்களை அணுகாவண்ணம் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பா.ஜ.க. ஆட்சி செய்யும் அரியானாவில் ‘ரிசார்ட்’ ஒன்றில் சச்சின் முகாமிட்டார். சச்சினிடம் இருந்த துணை முதல்-மந்திரி பதவி மாநில கட்சி தலைவர் பதவி இரண்டும் பறிபோனது. கட்சித்தாவல் சட்டப்படி அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் பதவியை பறித்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை அணுகி தடை வாங்கப்பட்ட நிலையில் ஒரு மாதகால இடைவெளியில் திடீரென்று மீண்டும் காங்கிரசுக்கு திரும்பியுள்ளார் சச்சின்.

ராஜஸ்தான் சட்டசபையின் மொத்த பலம் 200. இதில், 101 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரிக்கு ஆதரவாக உறுதியாக நின்றனர். பா.ஜ.க.விற்கு கூட்டணியோடு 76 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தது. சச்சின் பைலட் தன்னை 30 உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள் என்ற போதிலும் அவருடன் 18 பேருக்கு மேல் செல்லவில்லை. இது மட்டுமின்றி, சச்சினுடன் இருந்த பன்வர்லால் சர்மா என்ற எம்.எல்.ஏ மீண்டும் முதல்-மந்திரி பக்கம் வந்துவிட்டார்.

ஆகவே, ஆகஸ்டு 14 (அதாவது இன்று) சட்டமன்றம் கூடும்போது ஆட்சியை கலைக்கும் அளவுக்கான பலம் சச்சினிடம் இல்லை. இத்துடன் ராஜஸ்தான் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பா.ஜ.க.வின் வசுந்தராஜே சிந்தியா பா.ஜ.க.வுக்குள் சச்சின் வருவதை விரும்பவில்லை. ஆகவே அவரை எதிர்த்து பா.ஜ.க.வின் ராஜஸ்தான் அரசியலில் மேலெழுந்து வருவது என்பதை நினைத்தும் பார்க்க முடியாது என்ற யதார்த்தம் சச்சினுக்கு காலதாமதமாக தான் புரிய வந்தது.கட்சிக்கு எதிராக சச்சின் போன நிலையிலும் ராகுலோ, பிரியங்காவோ அவருக்கு எதிராக கோபத்தை வெளிகாட்டாமல் அமைதி காத்தனர். பதற்றப்படாமல் அசோக் கெலாட் இருக்கும் எம்.எல்.ஏக்களை சரியாக தக்கவைத்தார். இன்னும் அதிக காலம் காத்திருந்தால் இருக்கும் எம்.எல்.ஏக்களை இழக்க நேரும் என சச்சின் உணர்ந்தார். ‘ஆப்பரேசன் லோட்டஸ்’ ராஜஸ்தானில் வெற்றிபெற முடியவில்லை! ஆகவே, சச்சின் பிரியங்காவையும், ராகுலையும் சந்தித்து கட்சிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தார்.

மறப்போம் மன்னிப்போம் என நிகழ்ச்சிகள் நடந்தேறின. அசோக் கெலாட்டும் அரவணைக்க தயார் என்றார். காங்கிரசில் பொறுமையாக இருந்தால் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று சச்சின் பைலட்டிற்கு புரியவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, “எனக்கு பதவி முக்கியமில்லை. கட்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்” என்றவாறு காங்கிரசுக்கு மீண்டும் வந்துவிட்டார் சச்சின்.

ஜோதிராதித்திய சிந்தியாவை போல பா.ஜ.க.விற்குள் சச்சினை ஆதரிக்க தக்க உறவினர்களோ, ராஜகுடும்ப பின்புலமோ இல்லை. அடிப்படையில் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டு ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்ததே சச்சின் பைலட் குடும்பம். ராஜஸ்தானில் பைலட் குடும்பத்தின் செல்வாக்கு என்பது காங்கிரசின் பின்புலத்தால் மட்டுமே சாத்தியமானது. ஆகவே, காங்கிரசை விட்டால் சச்சினுக்கு வேறு கதியில்லை. அத்துடன் அவசர புத்தியால் தற்போது அவர் இழந்த செல்வாக்கை மீட்டு எடுக்க இன்னும் கடுமையாக கட்சிக்கு உழைக்க வேண்டியிருக்கலாம்!


தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தான் மாநிலத்தை போன்று தமிழக அரசும் சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
ராஜஸ்தான் மாநிலத்தை போன்று தமிழக அரசும் சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. ராஜஸ்தானில் இன்று மேலும் 2,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை
ராஜஸ்தானில் இன்று மேலும் 2,112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி
ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலியானார்.
4. ராஜஸ்தானில் இன்று மேலும் 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தானில் இன்று மேலும் 810 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 1,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 1,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...