விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை: கையறு நிலையில் கைவினை கலைஞர்கள்!


விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை: கையறு நிலையில் கைவினை கலைஞர்கள்!
x
தினத்தந்தி 16 Aug 2020 11:30 PM GMT (Updated: 16 Aug 2020 10:49 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கைவினை கலைஞர்கள் கையறு நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து பூஜை செய்வதற்கும், சதுர்த்தி ஊர்வலங்களுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மருத்துவ ரீதியான கண்ணோட்டத்தில் இது ஏற்புடைய கருத்தாக தான் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த விழா ஒன்றை தான் தங்கள் வாழ்வாதாரமாக கருதியுள்ள தமிழ்நாட்டின் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கைவினைக்கலைஞர்களின் குடும்பத்தினர் இந்த அறிவிப்பை பேரிழப்பாக பார்க்கின்றனர்.

பொதுவாக நமது தமிழ் பாரம்பரியத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை விநாயகர் சிலைகளை பொதுவெளியில் பிரமாண்டமாக செய்து வைத்து வழிபடும் வழக்கம் இல்லாதிருந்தது. ஆனால், 1980களில் இந்த வழக்கம் மெல்லமெல்ல பெருநகரங்களில் மட்டும் துளிர்விட தொடங்கியது. பிறகு இது சிற்றூர்களுக்கும் பரவியது. தற்போது கிராமங்கள் வரை பெரிய விநாயகர் சிலைகளை பொது வெளியில் நிறுவி தினசரி பூஜைகள் நடத்தி, பிறகு ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்பது இயல்பாகிவிட்டது.

இதன் காரணமாக அழிந்து கொண்டிருந்த கைவினை கலைஞர்களான மண்பாண்ட தொழிலாளர்களின் தொழில் புதுப்பிக்கப்பட்டது. தங்கள் கற்பனை திறனையெல்லாம் பயன்படுத்தி வருடாவருடம் புதுவிதமான பிள்ளையார் சிலைகளை இவர்கள் படைத்தார்கள். அதுவும் அந்தந்த வருடங்களில் எது ‘டிரண்டோ’ அது தொடர்பாக பிள்ளையாரை இணைத்து சிலை வடிப்பார்கள். இதனால், அவரவர்களும் புதுவிதமான பிள்ளையார்களை ஆர்டர் செய்து வாங்க தொடங்கினார்கள்.

குயவர்கள் என்றும், குலார்கள் என்றும் அழைக்கப்படும் சமூகத்தினர் மண்பாண்ட தொழிலுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் முன்பெல்லாம் ஒவ்வொரு கிராமத்திலும் தவிர்க்கமுடியாத அங்கமாக இருந்தனர். காலப்போக்கில் அலுமினியம், சில்வர் போன்ற பாத்திரங்களின் வருகையை தொடர்ந்து மண்பாண்டங்களின் தேவை குறைந்தது.

ஆயினும் பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை இவர்களுக்கு ஓரளவு கைகொடுத்தது. என்றாலும். பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தரும் பெரிய ‘ஆர்டர்’களால் தான் வருடத்தில் ஐந்தாறுமாத காலம் தொடர்ச்சியாக வேலை கிடைக்கிறது. ஆகஸ்டு மாதத்தில் வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு பிப்ரவரி, மார்ச் மாதத்திலேயே வேலையை ஆரம்பித்து விடுகின்றனர். இவர்கள் அனைவரும் கல்லூரி உருவாக்காத கலைஞர்கள். பாரம்பரிய வழியில் தொழில் பயின்ற கைவினை கலைஞர்கள்.

தமிழகத்தில் கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய இடங்களில் இந்த கைவினை கலைஞர்கள் அதிகம் உள்ளனர். தஞ்சையில் ஒருசிலரிடம் பேசியபோது, “வழக்கமாக நாங்கள் 500 சிலைகள் செய்வோம். இந்த ஆண்டு 150 தான் செய்து இருக்கிறோம். 2 அடியில் இருந்து 10 அடிக்குள்ளாக தான் செய்திருக்கிறோம். 10 லட்சம் வரை கடன் வாங்கி இதை செய்துள்ளோம். ஒன்றிரண்டு தான் வாங்கிட்டு போயிருக்காங்க. செய்துவைத்த அளவாவது விற்று கையை கடிக்காம கரை சேர்ந்தா போதும். கடனை கட்டி நிம்மதியாக இருப்போம்” என்றனர்.

சென்னை புரசைவாக்கம் அருகிலுள்ள கொசப்பேட்டையில் இந்த வருடம் வழக்கம் போல பெரிய, பெரிய சிலைகள் செய்யப்படவில்லை. வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலைகள் தான் தயாராகியுள்ளன.

கோவை பைபாஸ் சாலை, சேத்துமாவாய்க்கால், செல்வபுரம், சொக்கம்புதூர் பகுதிகள் இந்த பிள்ளையார் சிலை செய்வதற்கு பேர் போன இடங்களாகும். இந்த வருஷத்தை பொறுத்தவரை இவர்களுக்கு தொழில் ரொம்ப மந்தம் தான். சென்ற வருஷத்தை ஒப்பிட்டால் பத்துல ஒரு பங்கு கூட ஆர்டர் வராத நிலையே உள்ளது. இருக்கிற வரை விற்றால் போதும் ஏதோ கஞ்சிபாட்டுக்கு ஆகும் என்ற நிலைமையில் தான் உள்ளனர்.

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இந்த தொழிலை நம்பி ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக முதுநகர் மணவெளி, வண்டிப்பாளையம், பையூர், பேரங்கியூர், பண்ருட்டி வட்டம் ஏரிப்பாளையம், வையாபுரி பட்டினம், திருவதிகை, பூங்குலம், புதுப்பேட்டை ஆகிய இடங்களில் பரம்பரையாக தொழில் செய்யும் குடும்பங்கள் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருமந்தூர், மலையூர், அறந்தாங்கி அருகிலுள்ள செரியலூர், நெய்வாசல்பட்டி, நாகர்கோவில் இரணியல், மேட்டுப்பாளையத்தை அடுத்த காரைமடை பகுதி இவை எல்லாமே பிள்ளையார் சிலைக்கு பேர் போன இடங்களாகும். எல்லா இடங்களிலுமே இந்த வருடம் தொழில் படுமந்தமாகவே உள்ளது. இனி பெரிதாக ஆர்டர் வரவும் வாய்ப்பில்லை. ஏனென்றால், 4 அடி சிலை என்றாலும் குறைந்தது 10 நாட்கள் அவகாசம் தேவை. ஆகவே, இருக்கும் சரக்கு விற்றால் போதும். பசியும், பட்டினியுமாக ரேஷன் அரிசியை சாப்பிட்டு வாழ்ந்துகிட்டிருக்கோம். இருப்பது அப்படியே தங்கிவிட்டால் எங்க நிலைமை ரொம்ப பரிதாபமாகி விடும் என்கிறார்கள்.

இவை தவிர, பிள்ளையார் சிலைகளை செய்வதற்கென்றே ராஜஸ்தான் பகுதியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி பிள்ளையார் சிலைகளை ஓரளவு செய்து வைத்துள்ளனர். இவை விற்பனையாகாத பட்சத்தில், இவர்கள் திரும்பவும் ஊர் செல்ல கூட காசில்லாத நிலையில் உள்ளனர்.

பொதுவாகவே இந்த ஆண்டு இந்தியா முழுவதுமே கைவினை கலைஞர்கள் நிலைமை பரிதாபகரமாகவே உள்ளது. மும்பையில் தான் பிள்ளையார் சதுர்த்தி விழா பிரமாண்டமாக நடக்கும். ஆனால், இந்த வருடம் இந்த விழாவை நடத்தும் கணேஷ் உத்தவ் கமிட்டி தாமாகவே முன்வந்து விழா நடத்தப்போவதில்லை என முதலில் அறிவித்தது. ஏனெனில், இந்தியாவிலேயே அங்கு தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.

ஆனால், மிகச்சிறிய அளவிலாவது நடத்த வேண்டும் என்ற ஆவல் மக்களிடம் வெளிப்பட்டது. ஆகவே, திலகர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு நடக்கும் இந்த விழாவை முற்றிலும் முடக்காமல் நடத்த ஆலோசிக்கப்பட்டது. அதன்படி தற்போது வார்டுக்கு ஒரேயொரு பிள்ளையார் சிலை மட்டும் வைத்தால் போதும் என்று அரசாங்கம் அனுமதித்துள்ளது. பிள்ளையார் சிலை வைக்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால் மாநகராட்சி பரிசீலித்து அனுமதிக்கிறது. 4 அடிக்கு மேல் பிள்ளையார் சிலை வைக்க கூடாது. பந்தல்களை ஒவ்வொரு நாளும் 3 முறை சுத்தம் செய்ய வேண்டும். வருபவர்களுக்கு முதலில் சானிடைசர் தர வேண்டும் உள்ளிட்ட கடுமையான கட்டுபாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதே போல கர்நாடகாவிலும் மிக சிறிய அளவில் நடத்தலாம் என்றும், அதையும் அந்தந்த மாவட்ட கலெக்டரே அனுமதி தொடர்பாக முடிவெடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கூட மிகுந்த கெடுபிடிகளுடன் மிகச்சிறிய அளவுக்கு பெரிதாக கூட்டம் சேர்க்காமல் நடத்தும்படி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது!


Next Story