முதல் திருநங்கை மருத்துவர்


முதல் திருநங்கை மருத்துவர்
x
தினத்தந்தி 6 Sep 2020 1:00 PM GMT (Updated: 6 Sep 2020 1:00 PM GMT)

பியோன்சி, வடகிழக்கு மாநிலங்களில் ஒடுக்கு முறைக்கு ஆளாகும் மூன்றாம் பாலின சமூகத்திற்கு நம்பிக்கை விதைக்கும் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

வட கிழக்கு மாநிலங்களில் மருத்துவ படிப்பு படித்திருக்கும் முதல் திருநங்கை மருத்துவர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார், பியோன்சி லைஷ்ராம். 27 வயதாகும் இவர் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். இம்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அத்துடன் மண்டல மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (ரிம்ஸ்) கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான களப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்.

பியோன்சி, வடகிழக்கு மாநிலங்களில் ஒடுக்கு முறைக்கு ஆளாகும் மூன்றாம் பாலின சமூகத்திற்கு நம்பிக்கை விதைக்கும் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

“நான் ஆண் குழந்தையாக பிறந்தேன். பத்தாம் வகுப்பு படித்தபோது நான் உணர்வு ரீதியாக பெண் என்பதை உணர்ந்தேன். பெண்மைக்குரிய அனைத்து நளினங்களும் என்னிடம் வெளிப்பட தொடங்கின. இது எனக்குள் மிகப் பெரிய மனக் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் எந்தவொரு சூழலி லும் படிப்பு தடைப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பல்வேறு சிரமங் களுக்கு மத்தியில் ரிம்ஸ் மருத்துவ நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பை படித்து முடித்தேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் எனக்குள் மறைந்திருந்த பெண் தன்மையை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் 2013-ம் ஆண்டு குடும்பத்தை விட்டு வெளியேற முடிவு செய்தேன். மூன்றாம் பாலினத்திற்குரிய சுபாவங்கள் எனக்குள் இருப்பதை அறிந்ததும் தந்தை மிகுந்த அதிர்ச்சியடைந்தார். என்னை கொலை செய்வதற்கும் முயன்றார்” என்று தனது கடந்த காலத்தை நினைவு படுத்துபவர், “அதற்கு மேலும் என்னால் ஆண் அடையாளத்துடன் வாழ முடியாது என்பதை உணர்ந்தேன். 2016-ம் ஆண்டு நான் ஒரு திருநங்கை என்பதை வெளிப்படையாக அறிவித்தேன்” என்கிறார்.

இவரது இயற்பெயர் போபாய் லைஷ்ராம். 2013-ம் ஆண்டு திருநங்கைகளுக்கான ‘மிஸ் டிரான்ஸ் குயின்’ அழகுப்போட்டியில் பங்கேற்ற பிறகு தனது பெயரை பியோன்சி என்று மாற்றி இருக்கிறார். புதுச்சேரிக்கு வந்து பெண்மைக் குரிய பாலியல் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருக்கிறார். தற்போது தன்னை போல் மூன்றாம் பாலின அறிகுறிகளுடன் தடுமாறுபவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் பெற்றோருடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபத்தை போக்கி, தற்போது சீரான உறவை பேணி வருகிறார்.

“மனிதர்கள் அனைவரும் சமம். பியோன்சியை பணி அமர்த்தும்போது நாங்கள் அவருடைய பாலினத்தைப் பார்க்கவில்லை. திறமையை தான் பார்த்தோம்” என்கிறார் ரிம்ஸ் நிறுவன மருத்துவ அதிகாரி ஜுகிந்திரா.

தற்போது பியோன்சி முதுகலை மருத்துவ பட்ட படிப்புக்கான நுழைவுத்தேர்வு எழுதுவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

Next Story