நீச்சலில் அரங்கேறிய துணிச்சல் - ஆறு பேரை காப்பாற்றிய அதிசயம்


நீச்சலில் அரங்கேறிய துணிச்சல் - ஆறு பேரை காப்பாற்றிய அதிசயம்
x
தினத்தந்தி 6 Sep 2020 1:07 PM GMT (Updated: 6 Sep 2020 1:07 PM GMT)

நீரில் பலர் தத்தளித்தாலும, கதாநாயகன் நொடிப்பொழுதில் அவர்களை காப்பாற்றிவிடுவார். திரையில் நடிப்பில் காணும் அது போன்ற சம்பவம் நிஜமாகவே நடந்திருக்கிறது.

சினிமாக்களில் கதாநாயகன் ஆறு, ஏரிகளில் தத்தளித்தவர்களை காப்பாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெறும். நீரில் பலர் தத்தளித்தாலும, கதாநாயகன் நொடிப்பொழுதில் அவர்களை காப்பாற்றிவிடுவார். திரையில் நடிப்பில் காணும் அது போன்ற சம்பவம் நிஜமாகவே நடந்திருக்கிறது. தனது துணிச்சலான செயலால் ஏரியில் தத்தளித்து உயிருக்கு போராடிய 6 பேர்களை காப்பாற்றி நெகிழவைத்திருக்கிறார், இளைஞர் ஒருவர். அவரது வீரதீரத்தை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

அந்த நிஜ நாயகனின் பெயர் ஸ்ரீதர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள மேலையூரை சேர்ந்தவர். 25 வயதான இவர், பி.டெக். படித்தவர். சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பி, தனது தந்தை ராதாகிருஷ்ணனுடன் இணைந்து விவசாயம் செய்துவருகிறார். இவரது தாயார் பெயர் போதுமணி. கிருபாராணி, ராஜேஸ்வரி, கார்த்திகேயன், பாலாஜி ஆகியோர் ஸ்ரீதருடன் பிறந்தவர்கள். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ஆறு பேர் உயிரைக் காப்பாற்றிய அன்று நடந்தது என்ன? ஸ்ரீதர் விளக்குகிறார்!

“அன்று மாலை நேரத்தில், மழவராயர்தெரு வெள்ளையங்கிரி ஏரி அருகே உள்ள எங்கள் வயலுக்கு இருசக்கர வாகனத்தில் தனியாக சென்றுகொண்டிருந்தேன். ஏரிக்கரையை கடந்துகொண்டிருந்தபோது, ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்..’ என்ற அலறல் சத்தம்கேட்டது. அதிர்ந்துபோய் பார்த்தபோது, ஒரு சிறுமியின் கைகள் மட்டும் தண்ணீருக்கு மேலே தெரிந்தது. ஏரியின் சேற்றுக்குள் சிலர் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன்.

நான் உடனடியாக செயல்பட்டு ஏரிக்குள் குதித்தேன். முதலில் அந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து தூக்க முயற்சித்தேன். ஆனால் உயிருக்கு போராடும் பயத்தில் அந்த சிறுமி என்னை சேற்றுக்குள் இழுத்தாள். உடனே அவளது கையை நான் தட்டிவிட்டுவிட்டு, அவளது பின்பக்கமாக சென்று அள்ளி எடுத்து தூக்கினேன். அப்போதுதான் சிறுமியின் கையை பிடித்தவாறு மேலும் 3 பேர் தண்ணீருக்குள் மூழ்கியிருப்பது தெரிந்தது. கடுமையாக போராடி முதலில் அவர்கள் நான்கு பேரையும் வெளியே மீட்டுக்கொண்டு வந்தேன். அடுத்து, தண்ணீருக்குள் சிக்கி தத்தளித்துக்கொண்டிருந்த இருவரையும் கரை சேர்த்தேன். ஆறு பேரையும் துணிச்சலுடன் காப்பாற்றியது எனக்கே வியப்பை தந்தது.

அதில் ஒரு சிறுமி மட்டும் பயத்தில் அதிக தண்ணீரை குடித்துவிட்டதால், மயங்கிய நிலையில் இருந்தாள். உடனே முதலுதவி செய்து அவளது வயிற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றினோம். பின்பு அவளுக்கு நினைவு திரும்பியதும் நிம்மதி பெருமூச்சுவிட்டோம்” என்று, அன்று நடந்த சம்பவத்தை தத்ரூபமாக விளக்குகிறார், ஸ்ரீதர்.

இந்த ஆறு பேரும் எப்படி ஏரிக்குள் சிக்கிக்கொண்டார்கள்?

ஸ்ரீதர் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர், சுதந்திராதேவி. அவர் தனது 13 வயது மகள் சுடரொளி மற்றும் 11 வயதுடைய சுபதினா, கல்பனா ஆகியோருடன் ஏரிக்கு குளிக்கச் சென்றிருக்கிறார். முதலில் மூன்று சிறுமிகளும் குளிப்பதற்காக இறங்கியிருக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்கள் உதவி கேட்டு அலறியதும், கரையில் அமர்ந்திருந்த சுதந்திராதேவி மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியமேரி இருவரும் தண்ணீருக்குள் குதித்து அவர்களை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்கள். இருவராலும் மூன்று சிறுமிகளையும் காப்பாற்றமுடியவில்லை. அதுமட்டுமின்றி ஐந்து பேருக்குமே நீச்சல் தெரியாது என்பதால், எல்லோரது உயிருக்கும் ஆபத்தாகிவிட்டது. அதில் ஆரோக்கியமேரி மட்டும் எப்படியோ தத்தளித்து, கூச்சலிட்டு உதவிகேட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த விவசாயி முத்துசாமி ஏரியில் இறங்கி அவர்களை காப்பாற்ற முயன்று, அவரும் சேற்றில் சிக்கிக்கொண்டார்.

இப்படி ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய 6 பேரையும் காப்பாற்றிய ஸ்ரீதர், ‘இங்கே நடந்தது எதையும் வெளியே சொல்லவேண்டாம். எதுவும் நடக்காததுபோல் வீட்டிற்கு சென்றுவிடுங்கள்’ என்று கூறியிருக்கிறார். தான் மற்றவர்களை காப்பாற்றிய விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று அவர் கருதியிருந்தாலும், இது பாராட்டுக்குரிய விஷயமாக இருப்பதால் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இந்த சம்பவம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந்தேதி நடந்தது. காப்பாற்றப்பட்டவர்களின் குடும்பத்தினர் அனைவரும் இவருக்கு கண்ணீர்மல்க நன்றி கூறியிருக்கிறார்கள்.

இவரது வீரதீரத்தை பாராட்டி முதலில் தமிழக அரசின் சார்பில் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் 2019-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்பட்டது. கடந்த சுதந்திர தினத்தில் மத்திய அரசின் சார்பிலும் விருது, ரூ.1 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது. அதனை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

Next Story