உங்கள் குழந்தைகளை பற்றி நீங்கள் கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டியவை..


உங்கள் குழந்தைகளை பற்றி நீங்கள் கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டியவை..
x
தினத்தந்தி 6 Sep 2020 1:37 PM GMT (Updated: 6 Sep 2020 1:37 PM GMT)

இந்தியாவில் 10 முதல் 13 வயதுக்கு உள்பட்ட 23 சதவீத குழந்தைகள் அதிக உடல் எடைகொண்டவர்களாக இருக்கிறார்கள்.

டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து, கிட்டத்தட்ட நான்கில் ஒரு குழந்தை அதிக உடல் எடை கொண்டதாக இருக்கிறது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் தங்கள் குழந்தைகளை பற்றிய புரிதலே நிறைய பெற்றோர்களிடம் இல்லாமல் இருக்கிறது. அவர்கள், தங்கள் குழந்தைகள் கொழுகொழுவென்றிருப்பது ஆரோக்கியமானது என்று கருதுகிறார்கள். சிறுவயதில் குண்டாக இருந்தாலும் இளம் வயதில் இயல்பான எடைக்கு திரும்பிவிடுவார்கள் என்று தவறாக புரிந்துகொண்டு, அளவுக்கு அதிகமான உணவை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். அதனால் உலக அளவில் எடுக்கப்பட்ட கணக்குகள் படி, ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளில் கிட்டத்தட்ட ஐந்து கோடி பேர் அதிக உடல் எடைகொண்டவர்களாக இருக்கிறார்கள்.

25 ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகள் புத்தகப்பையையும் சுமந்துகொண்டு நடந்தே பள்ளிக்கு சென்றார்கள். பள்ளிகளும் சற்று தூரத்தில் இருந்தன. அப்போது பள்ளிகளில் விளையாடினார்கள். வீட்டிற்கு வந்த பின்பும் மாலை நேரங்களில் வீட்டிற்கு வெளியே சக வயதினர்களோடு ஓடியாடி விளையாடினார்கள். பெரும் பாலும் வீட்டில் அம்மா சமைத்துக்கொடுத்த உணவுகளையே சாப்பிட்டார்கள். அந்த உணவுகளும் பூச்சி மருந்து கலப்பற்ற இயற்கை உணவுகளாக இருந்தன. அதனால் அளவான உடலோடும், ஆரோக்கியத்தோடும் வளர்ந்தார்கள்.

இன்றைய நிலை அப்படியில்லை. குழந்தைகள் பள்ளி வாகனங்களில் செல்கிறார்கள் அல்லது பெற்றோரே சொந்த வாகனத்தில் கொண்டுபோய் விடுகிறார்கள். குழந்தைகளுக்கு விளையாட ஆர்வம் இருந்தாலும் மைதானம் இல்லாத பள்ளிகளிலே படிக்கிறார்கள். வீடுகளுக்கு வந்து விளையாடலாம் என்றால் அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள் இருப்பதால், அதனை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். பலர் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பதால், வீட்டின் அருகில் விளையாடவும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதிக உடல் எடைகொண்ட குழந்தைகளால் சரிவர சுவாசிக்க முடிவதில்லை. பிற்காலத்தில் அவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், மூட்டு நோய்கள் மற்றும் தூக்க குறைபாடு போன்றவை ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் அதிக உடல் எடைகொண்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே குழந்தைகளின் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். காலையில் சில குழந்தைகள் உணவு சாப்பிடாமலே பளளிக்கு சென்றுவிடுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் மிக குறைந்த அளவிலே காலை உணவை சாப்பிடுகிறார்கள். ஆனால் காலை உணவு போதுமான அளவு சாப்பிடவில்லை என்றால் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் இயல்பாக நடக்காது. நடக்காவிட்டால் அவர்களது உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்ந்துவிடும். அதனால் காலை உணவை கட்டாயம் சாப்பிடவையுங்கள். அவர்கள் நொறுக்குத்தீனிகள் கேட்கும் போதெல்லாம் அவைகளை வாங்கிக்கொடுக்காமல் காய்கறி, பழங்களை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொடுங்கள்.

குழந்தைகளிடம் உடல் உழைப்பை அதிகரியுங்கள். ஓடியாடி அவர்களை வேலைகளை செய்ய பழக்குங்கள். அதற்கு தக்கபடி உங்களையும் மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் வீட்டு வேலைகளை செய்தால் அவர்களும் செய்வார்கள். நீங்கள் அருகில் உள்ள இடங்களுக்கு நடந்துசென்றால், அவர்களும் அதற்கு பழகுவார்கள். நீங்கள் மணிக்கணக்கில் டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்காதவர்களாக இருந்தால் அவர்களிடமும் நல்ல மாற்றத்தினை எதிர்பார்க்க முடியும். உங்கள் எதிர்கால சந்ததியை நோயாளியாக உருவாக்காமல் இருக்க இன்றே அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

Next Story