திமுக... காங்கிரஸ்.. பா.ஜனதா... சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லா குஷ்புவின் 10 ஆண்டுகால அரசியல் பயணம்


திமுக... காங்கிரஸ்.. பா.ஜனதா... சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லா குஷ்புவின் 10 ஆண்டுகால அரசியல் பயணம்
x
தினத்தந்தி 12 Oct 2020 7:53 AM GMT (Updated: 12 Oct 2020 7:53 AM GMT)

திமுக... காங்கிரஸ்.. பா.ஜனதா... என குஷ்புவின் கடந்த பத்தாண்டு கால அரசியல், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

சென்னை:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்களின் கற்பு குறித்து அவர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. குஷ்புக்கு எதிராக போராட்டங்கள் வழக்குகள் தமிழகத்தில் நடந்தன. 

 குஷ்பு 2010 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது அவர் திமுகவில் சேர்ந்தார்."நான் சரியான முடிவை எடுத்தேன் என்று நினைக்கிறேன், மக்களுக்கு சேவை செய்வதை நான் விரும்புகிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக நான் பணியாற்ற விரும்புகிறேன்" என்று அப்போது அவர் கூறியிருந்தார்.

2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்று ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது என குஷ்பு பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குஷ்புவின் இந்தப் பேச்சை எதிர்த்து திமுகவினர் குஷ்புவை தாக்கி அவமானப்படுத்தினர். திமுக-க்குள் குஷ்புவுக்கு பல பிரச்சினைகள் வரத்தொடங்கின. இதையடுத்து 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுகவில் இருந்து விலகினார் குஷ்பு.

அப்போது "திமுகவுக்கு கடின உழைப்பு ஒரு வழி பாதையாக உள்ளது" என்று கூறியிருந்தார். 

2014-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்தித்து காங்கிரஸில் இணையப் போவதாக குஷ்பு அறிவித்தார். தனது வாழ்க்கையில் இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும் எனது சொந்த வீட்டுக்கு வந்து விட்டதைப் போல் உணர்கிறேன் என்றும் அப்போது அவர் பேட்டியளித்தார்.

2016 சட்டசபை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்புவுக்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. கடந்த ஜுலை மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் ஏற்க மறுத்ததும், சச்சின் பைலட் போன்றவர்கள் தலைவர் பதவி ஏற்கலாம் என்ற குஷ்பு கருத்து  மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக காங்கிரஸ் கட்சியினர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர், காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வரும் புதிய கல்விக் கொள்கைக்கு அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு ஆதரவாக கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குஷ்புவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமார் படத்திறப்பு விழாவை, டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என கூறி தனது வருத்தத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் குஷ்பு. மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து முழுமையாக ஓரம்கட்டப்பட்டார்.

தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருக்கும்போது நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கும் வாழ்த்து கூறினார். இதனால் சமீப காலமாக குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
எனினும், குஷ்பூ இந்த தகவலை மறுத்து வந்தார்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்தபோது அந்த நிகழ்ச்சியில் குஷ்பூ கலந்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வடசென்னையில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், குஷ்பு இன்று டெல்லி சென்றுள்ளதாகவும் நாளை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பாஜகவில் இணைய போகிறீர்களா? என்ற கேள்விக்கு No comments என அவர் பதிலளித்தார். காங்கிரசில் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு தாம் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து நடிகை குஷ்பு அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார்.

தேசிய செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களில் குஷ்பு காங்கிரசில் இருந்து விலகினார்.காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு நடிகை குஷ்பு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story