கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு காற்று மாசு தடை- விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்


கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு காற்று மாசு தடை- விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்
x
தினத்தந்தி 28 Oct 2020 1:02 AM GMT (Updated: 28 Oct 2020 1:02 AM GMT)

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு காற்று மாசு தடையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் உணர்த்தி உள்ளனர்.

புதுடெல்லி, 

டெல்லி மற்றும் வட மாநிலங்கள் பலவும் காற்று மாசுவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அங்கெல்லாம் வானம் புகை மூட்டத்துடன் காணப்படுகின்றன. காற்றின் தரமும் வேகமாக மோசம் அடைந்து வருகிறது. இதனால் காற்று மாசுவினால் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா என்ற கவலை எழுந்துள்ளது.

இருப்பினும் காற்று மாசுவுக்கும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக உலகளவில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், நீண்ட காலம் காற்று மாசுக்கு ஆளாகிறபோது அது நிச்சயம் நுரையீரல் தொற்றுநோய்களுக்கு ஆளாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.இதையொட்டி அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வினை நடத்தினர். அதில் காற்று மாசு பி.எம். 2.5 என்ற அளவில் இருக்கிறபோது, அது கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தில் 8 சதவீதம் அதிகரிக்கிறது என்று தெரிய வந்தது.

இதுபற்றி அந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான சியாவோ வு கூறும்போது, “டெல்லியில் காற்று மாசு அளவு பி.எம். 2.5 என்று அதிகரித்து இருப்பது, கொரோனா வைரஸ் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம்” என கூறி உள்ளார். மேலும் அவர் கூறும்போது, “நீண்ட கால காற்று மாசுபாட்டிற்கும், கொரோனா வைரசுக்கான உறவு பல ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  காற்றுமாசுபாட்டின் மோசமான உடல்நல பாதிப்புகள் மக்களை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கும் அல்லது கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அறிகுறிகளின் தீவிரத்தை மேலும் கடுமையாக்கக் கூடும்” என தெரிவித்துள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்திய ஆய்வில், இங்கிலாந்தின் ஒரு பகுதியில் அதிகளவு காற்று மாசுபாட்டுக்கும், கொரோனா வைரசால் ஏற்படும் தீவிரத்தன்மைக்கும் இடையேயான தொடர்பு தெரிய வந்தது.

அந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளரான மார்கோ டிராவாக்லியோ கூறும்போது,“ எங்கள் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் குளிர்காலத்தில் இந்தியாவில் அதிகளவு காற்று மாசுபாட்டிற்கும், கொரோனா வைரசுக்கும் இடையேயான தொடர்பை நான் இங்கிலாந்தில் கண்டறிந்தது போலவே எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

வரும் குளிர்காலத்துக்கு முன்பாக பல மாதங்கள் காற்று மாசுபாட்டின் அளவு தொடர்ந்து சட்ட வரம்புகளை விட அதிகமாக இருந்தால், நவம்பர் மற்றும் அதற்கு பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், அந்த நிலைகளுக்கும், கொரோனா வைரஸ் பரவலுக்கும் இடையேயான உறவை பார்க்க முடியும் என நான் எதிர்பார்க்கிறேன் எனவும் அவர் கூறினார்.

நீண்டகாலமாக காற்று மாசு 2.5 பி.எம். அளவில் இருந்தால், அது நுரையீரலின் தொற்றுநோய் தடுப்பு திறனை பலவீனப்படுத்தி விடும், எனவே மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

எனவே கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு காற்று மாசு ஒரு தடையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் உணர்த்தி உள்ளனர்.


Next Story