70 இடங்களில் போட்டியிட்டு ராஷ்ட்ரீய ஜனதாதளம் வாய்ப்பை பறித்ததா காங்கிரஸ்?


70 இடங்களில் போட்டியிட்டு  ராஷ்ட்ரீய ஜனதாதளம் வாய்ப்பை பறித்ததா காங்கிரஸ்?
x
தினத்தந்தி 11 Nov 2020 3:11 AM GMT (Updated: 11 Nov 2020 3:11 AM GMT)

பீகாரில் 70 இடங்களில் போட்டியிட்டு ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் வாய்ப்பை காங்கிரஸ் தட்டிப்பறித்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவின் மெகா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர்ந்து போட்டியிட்டது. கூட்டணிக்கு தலைமை வகித்த ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிக்கு 144 இடங்கள் ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி 75 இடங்களை கேட்டபோது 70 இடங்களை தேஜஸ்வி யாதவ் வாரி வழங்கினார். ஆனால் காங்கிரஸ் கட்சி அதை சரியாக பயன்படுத்தி, சோபிக்காமல் போய் விட்டது.

20 இடங்களை மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. 50 இடங்களில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. அதே நேரம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பிற கட்சிகள் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன. ராகுல் காந்தி பீகாரில் பிரசாரம் செய்தும் அது அந்த கட்சிக்கு ஓட்டுகளை அள்ளித்தந்ததா என்றால் அது கேள்விக்குறிதான்.

கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும்கூட மெகா கூட்டணி தோல்வியை தழுவியது. 40 இடங்களில் 39 இடங்களை பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றியது. ஒரு இடத்தில் காங்கிரஸ் வென்றது. ராஷ்ட்ரீய ஜனதாதளத்துக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

காங்கிரசுக்கு சட்டசபை தேர்தலில் ஒதுக்கிய இடங்களில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் போட்டியிட்டிருந்தால் அதன் வாய்ப்பு இன்னும் பிரகாசமாக அமைந்திருக்க வாய்ப்பு உண்டு என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, “காங்கிரஸ் கட்சி 75 இடங்களை கேட்டதற்கு தேஜஸ்வி யாதவ் 70 இடங்களை தந்தார். இது அவரது தாராள மனப்பாங்கை காட்டுகிறது. காங்கிரசுக்கு இவ்வளவு இடங்களை தராமல் இருந்திருந்தால் மெகா கூட்டணி இன்னும் அதிக இடங்களை பெற்றிருக்கக்கூடும்” என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. நசீர் உசேன் கருத்து தெரிவிக்கையில், “பீகாரில் காங்கிரஸ் கட்சி சிறிய கட்சிதான் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ராகுல் காந்தி பிரசாரம் செய்து தனது பங்களிப்பை செய்தார். ஆனால் எங்கள் கட்சியை அமைப்பு ரீதியில் பலப்படுத்த வேண்டியதிருக்கிறது” என கூறினார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கிய மறைந்த சோசலிஷ தலைவர் சரத் யாதவின் மகள் சுபாஷினி யாதவும், நடிகர் சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்காவும் வெற்றி பெறத்தவறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story