சிறப்புக் கட்டுரைகள்

64 ஆண்டுகள் கரைந்தாலும் நெஞ்சைவிட்டு மறையாத250 உயிர்களை பலிகொண்ட அரியலூர் ரெயில் விபத்து நடந்த நாள் இன்று... + "||" + 64 years dissolved but never faded from the heart Today is the day of the Ariyalur train accident that claimed 250 lives

64 ஆண்டுகள் கரைந்தாலும் நெஞ்சைவிட்டு மறையாத250 உயிர்களை பலிகொண்ட அரியலூர் ரெயில் விபத்து நடந்த நாள் இன்று...

64 ஆண்டுகள் கரைந்தாலும் நெஞ்சைவிட்டு மறையாத250 உயிர்களை பலிகொண்ட அரியலூர் ரெயில் விபத்து நடந்த நாள் இன்று...
ரெயில் பயணம் என்பது இப்போது மட்டுமல்ல, எப்போதுமே பாதுகாப்பானதுதான். விபத்துகள் என்பது அரிதாக நடந்தாலும், பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்திவிடுகின்றன.

ரெயில் பயணம் என்பது இப்போது மட்டுமல்ல, எப்போதுமே பாதுகாப்பானதுதான். விபத்துகள் என்பது அரிதாக நடந்தாலும், பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்திவிடுகின்றன. தமிழகத்தில் அதுபோன்று நடந்த விபத்து ஒன்று மத்திய ரெயில்வே மந்திரியையே ராஜினாமா செய்ய வைத்தது. 1956-ம் ஆண்டு இதே நாளில் (23-ந்தேதி) நடந்த கோர விபத்து இந்தியாவையே உலுக்கியது.

விபத்துக்கு முந்தைய நாள் இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 603) சுமார் 800 பயணிகளுடன் புறப்பட்டது. நீராவி என்ஜின் இணைக்கப்பட்ட அந்த ரெயில் கொட்டும் மழையில் கரும்புகையை கக்கிக் கொண்டு கிளம்பியது. அந்த ரெயிலுக்கு முன்பாக, திருவனந்தபுரம், நெல்லைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்றிருந்தன. ஆனால், தூத்துக்குடி ரெயிலில் சென்ற பலருக்கு இதுதான் இறுதி யாத்திரை என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.

விடாமல் துரத்திய மழை

மொத்தம் 13 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் சென்ற பாதை எல்லாம் இடைவிடாமல் இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டே இருந்தது. முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் அயர்ந்து தூங்கினார்கள். பொதுப்பெட்டிகள், பெண்கள் பெட்டியில் பயணித்தவர்கள் தூக்கம் இன்றி கண்விழித்த நிலையில் இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தை அடைந்ததும், ரெயிலின் கடைசி பெட்டி கழற்றப்பட்டது. அது சேலம் செல்லும் இணைப்பு ரெயிலில் மாற்றப்படுவதற்காக தனியாக நிறுத்தப்பட்டது.

பின்பு, 12 பெட்டிகளுடன் தூத்துக்குடி ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. ரெயிலை விட்டு பயணிகள் ஏறி இறங்கினாலும், மழை மட்டும் விடாமல் துரத்திக் கொண்டே இருந்தது. அதிகாலை வேளையில், 5.30 மணிக்கு சூரியன் கண் விழிப்பதற்கு முன்பாக ரெயில் அரியலூரை தாண்டி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. காவிரியின் கிளை ஆறான மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ரெயில்வே பாலத்தை மூழ்கடித்த நிலையில் அப்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

இந்த அபாயகரமான பாலத்தைத்தான் ரெயில் கடந்து செல்ல வேண்டும். ஆனால், போதிய வெளிச்சம் இல்லாததால், ரெயிலை இயக்கிய என்ஜின் டிரைவர் துரைசாமி, பயர்மேன்கள் (நிலக்கரியை எரியவைப்பவர்கள்) முனுசாமி, கோதண்டன் ஆகியோரின் கண்களுக்கு வெள்ளத்தின் அபாய நிலை தெரியவில்லை. வேகமான நீரோட்டத்தால், பாலத்தின் தூண்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. ரெயில் என்ஜின் பாலத்தை கடக்க முற்பட்டபோது, தண்டவாளம் ஆட்டம் கண்டது. ரெயில் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னேறிச் சென்ற நிலையில், பாரம் தாங்காமல் பாலம் அப்படியே வெள்ளத்தில் மூழ்கியது.

இதனால், நிலைகுலைந்த ரெயில் பெட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. என்ன நடக்கிறது என்று தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அபயக் குரல் எழுப்பியும், காப்பாற்றுவதற்கு அங்கு யாரும் இல்லை. ரெயிலில் உள்ள முதல் 7 பெட்டிகளை வெள்ளம் மூழ்கடித்துவிட்டது. அதிலும், என்ஜினுக்கு அடுத்த பெட்டி பெண்கள் பெட்டியாக இருந்ததால், அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள்தான் நீருக்கு அடியில் சிக்கிக்கொண்டு மாண்டுபோனார்கள். இந்த கோர சம்பவத்தில் சுமார் 250 பேர் தண்ணீருக்குள் ஜீவ சமாதி அடைந்தார்கள். விடிந்தும் விடியாததுமாக சம்பவத்தை கேள்விப்பட்டு, அங்கு மீட்புக் குழுவினர் வந்தனர். ஆனால், 2 நாள் போராட்டத்திற்கு பிறகும் 150 சடலங்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து அழுகிய நிலையிலேயே மீட்கப்பட்டன.

லால்பகதூர் சாஸ்திரி ராஜினாமா

இந்தியாவையே உலுக்கிய இந்த கோர விபத்து சம்பவத்தின்போது, பிரதமராக நேரு இருந்தார். ரெயில்வே துறை மந்திரியாக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார். ரெயில் விபத்துக்கு முழுப்பொறுப்பேற்று அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், லால்பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த ரெயில் விபத்தின்போது, கடைசி பெட்டியில் இருந்த கார்டுகளான வைத்தியநாதசாமி, ஆறுமுகம் மற்றும் பின்வரிசை பெட்டிகளில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். அந்த விபத்து நடந்து 64 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அதில் இருந்து தப்பியவர்களில் ஒரு சிலர் இன்னும் உயிரோடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. என்றாலும், வரலாற்றில் கருப்பு எழுத்துகளால் பதிவான இந்த கோர நிகழ்வு இத்தனை ஆண்டுகள் கடந்தாலும், நெஞ்சை கசக்கிப் பிழியத்தான் செய்கிறது. விபத்தில் மாண்டவர்களுக்கு அஞ்சலியை செலுத்துவோம்.