தடுப்பூசிக்கான மாவட்ட அளவிலான பணிக்குழுவை உருவாக்குங்கள் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுக்கு வேண்டுகோள்


தடுப்பூசிக்கான மாவட்ட அளவிலான பணிக்குழுவை உருவாக்குங்கள் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுக்கு வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Nov 2020 12:08 PM GMT (Updated: 24 Nov 2020 12:08 PM GMT)

கொரோனா மறுஆய்வுக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கான மாவட்ட அளவிலான பணிக்குழுவை உருவாக்குங்கள் என பிரதமர் மோடி மாநில முதல்வர்களிடம் கூறி உள்ளார்.

புதுடெல்லி: 

இந்தியாவில் சமீபத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும்  நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களுடன் கொரோனா மறு ஆய்வுக் கூட்டத்தை இன்று  நடத்தினார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டியம், டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட எட்டு முக்கிய மாநிலங்களில் வைரஸ் நிலைமையை நிவர்த்தி செய்யும் முதல் கூட்டம் இதுவாகும்.

இதில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கார் முதல்வர் பூபேஷ் பாகேல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், என்ஐடிஐ ஆயோக்கின் டாக்டர் வி.கே பால், அமைச்சரவை செயலாளர் மற்றும் சுகாதார செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கோரோனா பரவலுக்கு காற்று மாசும் ஒரு காரணம் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

கெஜ்ரிவால் அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து வரும் தீப்புகையின்  மாசுபாட்டில் இருந்து டெல்லி   விடுபட பிரதமர்  நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டார்.  

சரியான நேரத்தில் கொரோனா  தடுப்பூசி விநியோகத்திற்கான பணிகள் குறித்து மராட்டிய முதல்வர் பேசினார்.

சீரம் நிறுவனத்தின் ஆதர் பூனவல்லாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், தடுப்பூசி சரியான நேரத்தில் விநியோகிக்கப்படுவதையும், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதையும் உறுதி செய்வதற்காக அரசு ஒரு பணிக்குழுவை உருவாக்கியுள்ளது என்றும் முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியிடம்தெரிவித்ததாக மராட்டிய முதல்வர் அலுவலகம் (சிஎம்ஓ) தெரிவித்துள்ளது.

கூட்டத்தில், மேற்கு வங்காள  முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமரிடம் கொரோனா  நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இப்போது புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நிலுவைத் தொகையை செலுத்தாததையும் பிரதமர் மோடிக்கு முதல்வர் நினைவுபடுத்தினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது அரசு கொரோனா பரி சோதனைகளை அதிகரித்துள்ளது மற்றும் தொற்றுநோயை சமாளிக்க உள்கட்டமைப்பை பலப்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் இணைந்து கொரோனா பரவலை  கட்டுப்படுத்த வேண்டும், கொரோனா பாதிப்பை  ஐந்து சதவீதத்திற்குக் கொண்டுவர வேண்டும். மீட்பு விகிதம் அதிகரித்து உள்ளதால்  மக்கள் மத்தியில் கவனக்குறைவு  வந்துள்ளது, இது தீர்க்கப்பட வேண்டும்.மாவட்ட அளவிலான பணிக்குழுவை உருவாக்குங்கள். எழுத்து மூலம் கருத்துக்களை அனுப்புங்கள்.

கூட்டு முயற்சிகளின் விளைவாக, மீட்பு மற்றும் இறப்பு விகிதங்கள் குறைவதால்  இந்தியா மற்ற நாடுகளை விட சிறந்த சூழ்நிலையில் உள்ளது.

கொரோனா தொற்றை கையாள்வதில் கவனக்குறைவு சில நபர்களிடையே ஏற்பட்டு உள்ளது.  இப்போது விழிப்புணர்வை மீண்டும் பரப்புவதற்கு நாம் பணியாற்ற வேண்டும். நல்ல மீட்பு விகிதங்களைப் பார்த்து, பலர் வைரஸ் பலவீனமாக இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து விடுவோம் என்றும் நினைக்கிறார்கள். இது பரவலான கவனக்குறைவுக்கு வழிவகுத்து உள்ளது. 

மக்கள் விழிப்புடன் இருப்பதையும், பரவுதல் தடைசெய்யப்படுவதையும் உறுதி செய்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.  கொரோனா தடுப்பூசி கிடைப்பது விஞ்ஞானிகள் கையில் உள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து தடுப்பூசி வினியோகிக்கப்படும். அதன் விலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கொரோனா தடுப்பூசி திட்டத்திற்குத் தயாராவதற்கு மாநிலங்கள் மாவட்ட அல்லது தொகுதி அளவில் பணிக்குழு / வழிநடத்தல் குழுக்களை அமைக்க வேண்டும்.
ஆக்ஸிஜன் உற்பத்தியில் மருத்துவக் கல்லூரிகளையும் மாவட்ட மருத்துவமனைகளையும் தன்னிறைவு அடைய அரசு முயற்சித்து வருகிறது. நாட்டில் 160 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ முயற்சிகள் நடந்து வருகின்றன.

தடுப்பூசி முன்னேற்றத்தில்  ஒவ்வொரு வளர்ச்சியையும் இந்திய அரசு கண்காணித்து வருகிறது. இந்திய தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். உலகளாவிய கட்டுப்பாட்டாளர்கள், பிற நாடுகளின் அரசுகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்.

இந்தியா தனது குடிமக்களுக்கு கொடுக்கும் தடுப்பூசி என்பது அனைத்து அறிவியல் தரங்களிலும் பாதுகாப்பாக இருக்கும். தடுப்பூசி விநியோக உத்தி மாநிலங்களுடன் கூட்டு ஒருங்கிணைப்பில் வினியோகிக்கப்படும். குளிர் சேமிப்பு வசதிகளையும் மாநிலங்கள் செய்ய வேண்டும்.

தடுப்பூசி ஒன்று, இரண்டு அல்லது மூன்று முறை  இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. தடுப்பூசியின் விலை என்னவாக இருக்கும் என்பதும் முடிவு செய்யப்படவில்லை. இந்த கேள்விகளுக்கான பதில்கள் எங்களிடம் இன்னும் இல்லை.

கொரோனா மூலோபாயம் குறித்து தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளுமாறு மாநில முதல்வர்களை  பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார், எந்தவொரு கருத்தையும் யாரும் திணிக்க முடியாது என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

Next Story