இந்தியாவில் விவசாயிகள் போராட்ட சூழல் வருத்தம் அளிக்கிறது; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ


இந்தியாவில் விவசாயிகள் போராட்ட சூழல் வருத்தம் அளிக்கிறது; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
x
தினத்தந்தி 1 Dec 2020 8:39 AM GMT (Updated: 1 Dec 2020 8:52 AM GMT)

இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு வருத்தம் தெரிவித்த ட்ரூடோ அமைதியான போராட்ட உரிமையை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் என கூறினார்.

டொரண்டோ,

சீக்கிய மதகுருவான குருநானக்கின் ஆண்டுதின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, கொரோனா பாதிப்பு எதிரொலியாக நடந்த இணையவழி கூட்டமொன்றில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரையாற்றினார்.  அதில், சீக்கிய சமூகத்தினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதன்பின்னர் அவர் பேசும்பொழுது, இந்தியாவில் விவசாயிகள் மேற்கொள்ளும் போராட்ட சூழல் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது.  விவசாய குடும்பம் மற்றும் நண்பர்களை பற்றி கவலையாக உள்ளது.

அமைதியான போராட்டத்திற்கான உரிமையை பாதுகாப்பதற்கு கனடா எப்போதும் துணை நிற்கும் என கூறினார்.  பேச்சுவார்த்தை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் கனடாவாசிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.  எங்களுக்கு கவலை அளிக்க கூடிய இதுபோன்ற விசயங்களை இந்திய அரசாங்கத்திடம் நாங்கள் பலவகையில் தெரிவித்து விட்டோம் என்றும் அவர் கூறினார்.

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த போராட்டம் இன்று 6வது நாளாக தொடருகிறது.

பேரணியாக சென்ற விவசாயிகளில் சிலர், அவர்களை தடுத்து நிறுத்த போடப்பட்ட தடுப்பான்களை முதல் நாளிலேயே தூக்கி பாலத்திற்கு கீழே வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் கலைந்து போக செய்தனர்.

Next Story