நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் ‘நல் உள்ளம்’


நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் ‘நல் உள்ளம்’
x
தினத்தந்தி 1 Jan 2021 9:30 PM GMT (Updated: 1 Jan 2021 7:12 PM GMT)

நாட்டுப்புறக் கலைகள், நம் தமிழ்நாட்டு கிராமங்களின் உயிர்நாடி. இந்த பாரம்பரிய கலைகள் பேணிக் காக்கப்பட வேண்டியவை. ஆனால், இவை தற்போது வலுவிழந்து கொண்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று.

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் விளிம்பு நிலையில் இருக்கையில், நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த ஆரோக்கியம் அது பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் விதைக்கிறார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நாட்டுப்புற கலை பயிற்சியும் வழங்குகிறார். அவை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

* நாட்டுப்புற கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

நெல்லை பாளையங்கோட்டைதான் என் சொந்த ஊர். புனித சேவியர் கல்லூரியில், முதுகலை படிப்பை நிறைவு செய்தேன். அங்குதான் நாட்டுப்புற கலை எனக்கு அறிமுகமானது. சேவியர் கல்லூரியில், ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற பிரத்யேக படிப்பு இருக்கிறது. இது முழுக்க முழுக்க நாட்டுப்புற கலைகளை பற்றியது. நாட்டுப்புற கலை வரலாற்றில் தொடங்கி, கலை பயிற்சி வரை நாட்டுப்புற கலைகளை கொண்டாடி மகிழ்வார்கள். அதேபோல, நாட்டுப்புற கலைகள் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய நூலகமும் அங்குதான் இருக்கிறது. அடிக்கடி இயல், இசை, நாடக போட்டிகள் நடைபெறும். அதில் நாட்டுப்புற கலைகளே அதிகம் அரங்கேறும். இப்படியாக, நான் பார்த்து ரசித்த நாட்டுப்புற கலைகளை, முழுமையாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். அங்கேயே நாட்டுப்புற கலைகளை பயின்று, இறுதியில் நாட்டுப்புற கலைஞராகவும், பயிற்சியாளராகவும் மாறிவிட்டேன்.

* நாட்டுப்புற கலை பயணம் எத்தனை ஆண்டுகளாக தொடர்கிறது?

1995-ம் ஆண்டு தொடங்கிய கலை பயணம், 25 ஆண்டுகளாக தொடர்கிறது. இதற்குள் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகம், சாட்டைக்குச்சி ஆட்டம், தேவராட்டம், களியல் ஆட்டம், மான் கொம்பு ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், மாடாட்டம், காளி ஆட்டம், கருப்பன் ஆட்டம், கும்மியாட்டம், மகுடமாட்டம்... என பலவிதமான கலைகளை பயின்றும், பலருக்கு பயிற்றுவித்தும் இருக்கிறேன்.

* நாட்டுப்புற கலைகள் உங்களை ஈர்க்க காரணம் என்ன?

ஒவ்வொரு நாட்டுப்புற கலைக்கும், தனி வரலாறு உண்டு. குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என ஐவ்வகை நிலங்களில் வாழ்ந்த மக்கள் தங்களின் உடல் களைப்பை போக்கவும், பணியின்போது உண்டாகும் சோர்வை போக்கவுமே இத்தகைய நாட்டுப்புற கலைகளை ஆடி வந்தனர். உதாரணத்திற்கு, களியல் ஆட்டம் நெய்தல் நில மக்களால் உருவானது. கடற்கரை மக்கள் பயன்படுத்தக்கூடிய படகு துடுப்புகளை போன்ற பெரிய கம்புகளை கொண்டு ஆடக்கூடியது. மருத நில மக்கள் விவசாய நிலங்களில் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக ஆடுவதுதான், சட்டிக்குச்சி ஆட்டம். இப்படி ஒவ்வொரு நாட்டுப்புற கலைக்கும், ஒரு தனிப்பெரும் வரலாறும், பண்பாட்டு தொடர்பும் இருக்கிறது. அதை சுவாரசியமாக தேடிப்படித்தேன். கலைஞராக ஆடி மகிழ்ந்தேன்.

* நாட்டுப்புற கலை உலகில் உங்களுடைய பங்களிப்பு என்ன?

தமிழ்நாட்டு சிறப்புமிக்க நாட்டுப்புற கலைகளை, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு கொண்டு சேர்ப்பதை கடந்த 25 வருடங்களாக சிறப்பாக செய்து வருகிறேன். குறிப்பாக இந்திய அளவில் நடைபெறும் பாரம்பரிய நடன கலை விழாக்கள், பண்பாட்டு திரு விழாக்களில் நாட்டுப்புற கலை குழுக்களோடு பங்கேற்று, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை அரங்கேற்று கிறோம். காஷ்மீர், பீகார் இவ்விரண்டு பகுதிகளை தவிர இந்தியாவின் மற்ற எல்லா பகுதிகளிலும், எங்கள் கலைக்குழு நாட்டுப்புற கலைகளை அரங்கேற்றி இருக்கிறது. இத்துடன், இளைய தலைமுறையினரின் மனதில் நாட்டுப்புற கலைகளை விதைக்க ஆரம்பித்திருக்கிறோம். குறிப்பாக பள்ளிகளை குறிவைத்துதான், நாங்கள் உழைத்து கொண்டிருக்கிறோம். ஏனெனில் பள்ளி மாணவ-மாணவிகளின் மனதில் நாட்டுப்புற கலைகளை விதைப்பதினால் மட்டுமே எதிர்கால சந்ததியினருக்கு நாட்டுப்புற கலைகளை கடத்தமுடியும்.

* நாட்டுப்புற கலைகளை டிஜிட்டல் முறையில் கொண்டு செல்ல முயல்கிறீர்களா?

இந்த முயற்சியை புனித சேவியர் கல்லூரி முன்னெடுத்து, அதில் வெற்றியும் கண்டுள்ளது. எல்லா கலைகளையும் வீடியோவாக பதிந்து, அதை நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பத்திரமாக ஆவணப்படுத்தி வருகிறார்கள். விடுபட்டுப்போன பாடல்கள், ஒரு கலைக்குள் இருக்கும் உட்பிரிவு கலைகளை மட்டும் நான் ஆவணப்படுத்த முயல்கிறேன்.

* நாட்டுப்புற கலைகளுக்கு வரவேற்பு பெருகுகிறதா?

சமீபகாலமாக நாட்டுப்புற கலைகளை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். பொங்கல் விழாக்கள், கோவில் திருவிழாக்களில் அரங்கேறும் நாட்டுப்புற கலைகளை ரசிப்பதோடு, கலைஞர்களையும் மதிப்போடு நடத்துகிறார்கள். மத்திய-மாநில அரசு சார்ந்த நிகழ்ச்சிகள், தேர்தல் பிரசாரக் கூட்டங்கள், பிரமாண்ட திருமணங்களிலும் நாட்டுப்புற கலைகளை அரங்கேற்றுகிறோம். முதலீட்டாளர் மாநாடு, சீன-அமெரிக்க தலைவர்கள் வருகையின்போது என்னுடைய ஒருங் கிணைப்பில்தான் நாட்டுப்புற கலைகள் அரங்கேறின. இனிவரும் காலங்களில் இதைவிட அதிகமான வரவேற்பு இருக்கும் என நம்புகிறேன்.

* பள்ளி குழந்தைகள் நாட்டுப்புற கலைகளில் ஆர்வம் காட்டுகிறார்களா?

வெறும் கலைகளை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை, கலைகளோடு சேர்த்து அதன் பாரம்பரியத்தையும், வரலாற்றையும், சங்க இலக்கியங் களோடு இருக்கும் தொடர்பையும் சேர்த்து கற்றுக்கொடுப்பதால், ஆர்வமாக பயில்கிறார்கள். நன்கு படித்தவர்களே நாட்டுப்புற கலைகளை பயின்று, பயிற்றுவிப்பதால் இளம் மாணவர்கள் விரும்பி பயில்கிறார்கள்.

* அழிவின் விளிம்பில் இருக்கும் நாட்டுப்புற கலை எது? ஏன்?

கணியான் கூத்து என்றொரு கலை இருக்கிறது. கோவில் பண்டிகைகளில் இந்த கூத்து நிகழ்த்தப்படும். ஆனால் சந்ததி மாற்றத்தினாலும், ரெக்கார்டிங் கேசட்டுகளை கோவில் திருவிழாக்களில் பயன்படுத்துவதாலும், இந்த கலை அரிதாகிவிட்டது. அதேபோல தோல் பாவைக்கூத்தும், வில்லுப்பாட்டும் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்த கலைகளை அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கடத்த முயற்சிக்கிறோம்.

Next Story