குடல் அழற்சி நோய், பெருங்குடல் புண்ணுக்கு அருமருந்தாகிறதா? பழைய சோறு குணமாக்கும் தன்மை பற்றி தமிழக சுகாதாரத்துறை ஆய்வு


குடல் அழற்சி நோய், பெருங்குடல் புண்ணுக்கு அருமருந்தாகிறதா? பழைய சோறு குணமாக்கும் தன்மை பற்றி தமிழக சுகாதாரத்துறை ஆய்வு
x
தினத்தந்தி 3 Jan 2021 1:46 AM GMT (Updated: 3 Jan 2021 1:46 AM GMT)

குடல் அழற்சி நோய், பெருங்குடல் புண் போன்ற நோய்களை குணப்படுத்தும் உணவாக பழைய சோற்றை பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் உணவு தானியம் அரிசி. இதன் மூலம் கிடைக்கும் சோறு, வயிற்றை நிரப்புவதற்கு மட்டுமல்லாமல் உடலுக்கு உரம் சேர்க்கும் சத்துகள் நிறைந்த உணவாக உள்ளது.

அதோடு, உடலுக்கு மிக மிக அவசியமான உணவாக பழையது என்று அழைக்கப்படும் பழைய சோறு உள்ளது. பழைய கஞ்சி என்றும் கூறப்படும் பழையது, தண்ணீர் ஊற்றப்பட்டு புளிக்க வைக்கப்படும் சோறாகும். இது நமது மூதாதையர்களின் கண்டுபிடிப்பு.பழைய சோறு, கிராமப்புறங்களில் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. இப்போது உலகம் முழுவதிலுமே பழைய சோற்றுக்கு மவுசு கூடியுள்ளது. நட்சத்திர ஓட்டல்களிலும் இது தற்போது உணவாக கிடைக்கிறது. சென்னையில் பல இடங்களில் பழைய சோறு விற்கப்படுகிறது.

ஐ.பி.டி. என்ற குடல் அழற்சி நோய், பெருங்குடலில் தொற்றில்லாத வீக்கம் மற்றும் புண்களை ஏற்படுத்தும் நோய்களுக்கு காரணமாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு இந்த நோய் புதிதாக இருந்தது. அப்போது மாதம் ஒன்றுக்கு, ஒன்று அல்லது இரண்டு நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைக்கு வந்தனர்.

ஆனால் தற்போது சென்னையில் அரசு மருத்துவமனைகளுக்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்கு ஒரு நோயாளி என்ற வீதத்தில் நோயாளிகள் வருகின்றனர். அவர்களில் பலர், குரோன் என்ற நாள்பட்ட கடுமையான குடல் அழற்சி நோயாளியாகவும், பெருங்குடல் புண்கள் கொண்ட நோயாளிகளாகவும் உள்ளனர். இந்த நோய்கள், அறுவை சிகிச்சை செய்யப்படும் அளவுக்கு முற்றிவிடுகின்றன.

இந்தியாவில் குடல் அழற்சி நோய், ஒரு லட்சம் பேரில் 45 பேருக்கு உள்ளது. இந்த நோயை தீர்க்க, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் ‘ஸ்டிராய்ட்’ மருந்துகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின், இரையக குடலியவியல் அறுவை சிகிச்சை துறையினர், இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். அதற்கு பதிலாக நோயாளிகளுக்கு பழைய சோறு என்ற கஞ்சியை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். அதோடு சில அடிப்படை மருந்துகளையும் அளிக்கின்றனர். இது விரைவாக நோயாளிகளுக்கு தீர்வை அளிப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், குடல் அழற்சி நோய்க்கான சிகிச்சையை கண்டறிவதற்காக, 600 நோயாளிகளுக்கு பழைய சோறு கொடுக்கும் ஆராய்ச்சியை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. இதற்கு ரூ.2.70 கோடி செலவிடப்படுகிறது.

பழைய சோற்றுக்கு குடல் அழற்சியை குணமாக்கும் தன்மை உண்டு என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க தற்போது 3 ஆண்டுகள் ஆராய்ச்சியை கையில் எடுத்துள்ளதாகவும், அதற்கு மாநில வளர்ச்சிக்கான கொள்கைக்குழு (எஸ்.டி.பி.சி.) நிதி உதவி வழங்குவதாகவும் மருத்துவ கல்வி இயக்குநர் ஆர்.நாராயண பாபு கூறினார்.

மனிதனின் குடல் பகுதியில் கோடிக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவைதான் உணவு செரிமானத்திற்கு முழு உதவியை செய்வதோடு நோய் எதிர்ப்பு சக்திக்கும் வலு சேர்க்கின்றன. நார்ச்சத்து, வைட்டமின், சத்துகள் நிறைந்த உணவுதான், பழைய சோறு.

குடல் அழற்சி நோய் வருவதற்கான சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அது, மரபணு வழியாக வரும் நோயாக இருக்கலாம் என்பதும், எதிர்ப்பு சக்தியை குறைக்கும் நோய்கள் தீண்டுவதாலும் குடல் அழற்சி நோய் வரலாம் என்பதும் மருத்துவ வட்டாரத்தின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், சுகாதாரமற்ற உணவு வகைகளாலும், அதிக மன அழுத்தத்தால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை பாதிக்கப்படுவதாலும் குடல் அழற்சி நோய் வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கஞ்சியில் ஏராளமான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கஞ்சியை சாப்பிடும்போது அதிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் மூலம் சமநிலை மீண்டும் உருவாக்கப்பட்டு, குடல் அழற்சி நோய் குறைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சிக்கு தீட்டப்படாத சம்பா அரிசி அல்லது பொன்னி அரிசி அல்லது இயற்கை உரத்தில் விளைந்த அரிசி ஆகிய வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை புளிக்க வைக்கப்படுவதற்கு உகந்த நிலை (வீடுகள், கடலோர பகுதிகள், மருத்துவமனைகள்) குறித்தும் கண்டறியப்படும். தொடர் வயிற்றுப்போக்கு, ரத்தத்துடன் மலம் கழிவது, ரத்த சோகை, உடல் எடை குறைதல் ஆகியவை குடல் அழற்சி நோய்க்கு அறிகுறியாக உள்ளன.

Next Story