கொரோனாவில் இருந்து மீண்டாலும் அவதிப்படும் நோயாளிகள்; விஞ்ஞானிகளின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்


Photo Credit: PTI ( File)
x
Photo Credit: PTI ( File)
தினத்தந்தி 9 Jan 2021 7:09 PM GMT (Updated: 9 Jan 2021 7:09 PM GMT)

கொரோனாவில் இருந்து குணமடைந்து 6 மாதங்களுக்கு பின்னரும் பல்வேறு பின்விளைவுகளால் நோயாளிகள் அவதிப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

புதுடெல்லி, 

சீனாவின் உகானில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பெரும் உயிர்க்கொல்லியாக தொடர்ந்து வருகிறது. உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் இந்த வைரசிடம் சிக்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது.

இந்த வைரசிடம் சிக்கியவர்களில் லட்சக்கணக்கானோர் தங்கள் உயிரை விட்டிருக்கின்றனர். அதேநேரம் வைரசின் பிடியில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளும் பெரும் போராட்டத்துக்குப்பின்னரே குணமடைகின்றனர். கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் இன்னும் கைவரப்பெறாததால், இந்த போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது.

இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகளுக்கு 6 மாதங்களுக்குப்பிறகு பல்வேறு பக்க விளைவுகள் இருப்பது தற்போது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. அந்தவகையில் சீனாவின் உகானில் தொற்றில் இருந்து மீண்ட 1,733 நோயாளிகளை 6 மாதங்களுக்குப்பின் மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். குறிப்பாக அவர்களது நோய் அறிகுறிகள், உடல் நலம் ஆகியவற்றை கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு உடல் பரிசோதனை, ஆய்வக சோதனைகள், 6 நிமிட நடை பரிசோதனை போன்றவையும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் சுமார் 400 நோயாளிகளுக்கு நுரையீரல் பரிசோதனை, 94 பேருக்கு ரத்தத்தில் நோயெதிர்ப்பு அளவு உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்பட்டன.

கொரோனாவின் நீண்டகால விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வில், 63 சதவீதம் பேருக்கு தசை தளர்வுகள் இருப்பது தெரியவந்தது. 26 சதவீதம் பேர் தூக்கமின்மையால் அடிக்கடி அவதிப்படுகின்றனர்.
23 சதவீதத்தினர் கவலை அல்லது மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் செயல்பாட்டில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுவதுடன், மார்பு செயல்பாட்டில் அசாதாரணங்களும் நிகழ்வது கண்டறியப்பட்டு இருக்கிறது.

மொத்தத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளில் 76 சதவீதம் பேர், மேற்படி அறிகுறிகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது கொண்டிருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், அந்த 6 நிமிட நடை பரிசோதனையில் மிகுந்த சிரமப்பட்டதை நிபுணர்கள் கவனித்து இருக்கின்றனர்.

இந்த ஆய்வு குறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, ‘கொரோனா தாக்கிய நோயாளிகள் ஆஸ்பத்திரியை விட்டு வீடு திரும்பினாலும் குறைந்தது சில பின்விளைவுகளுடனேயே வாழ்ந்து வருகின்றனர். இது, கொரோனாவில் இருந்து மீண்ட பின்னரும் அவர்களுக்கு சிகிச்சைகள் தேவைப்படுவதை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக, தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அவசியமாகிறது’ என்று தெரிவித்தனர்.

அதேநேரம் இந்த அறிகுறிகள் அனைத்தும் கொரோனாவை தொடர்ந்து ஏற்பட்டதா? அல்லது நோய் மீண்ட பின்னர் மோசமடைந்ததா? போன்றவற்றை முடிவு செய்ய முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே இந்த விவகாரத்தில் ஆய்வுகள் இன்னும் தேவைப்படுவதாக கூறிய அவர்கள், குறிப்பாக உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளை ஆய்வு செய்து அது குறித்து ஒப்பிட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளை ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.

Next Story