சிறப்புக் கட்டுரைகள்

சீக்கியர் கொண்டாடும் `ஓலைச்சுவடி பொங்கல்' + "||" + The Sikhs celebrate Olaichuvadi Pongal

சீக்கியர் கொண்டாடும் `ஓலைச்சுவடி பொங்கல்'

சீக்கியர் கொண்டாடும் `ஓலைச்சுவடி பொங்கல்'
பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர், ஜஸ்வந்த் சிங். இவரது தாய்மொழி பஞ்சாபி. இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் புலமைபெற்றிருக்கும் அவருக்கு தமிழ் மொழி சார்ந்த பெரும் லட்சியக் கனவு ஒன்று இருந்திருக்கிறது.
திருக்குறளை தெளிவாக கற்றறிந்து, 1330 குறளையும் பாடம் செய்த பனைஓலையில் தனது கையாலே எழுத்தாணியால் எழுதவேண்டும் என்பதுதான் அவரது கனவு. ஒன்றரை வருட உழைப்பின் பயனால் அந்த கனவு நனவான மகிழ்ச்சியில், அதை திருவள்ளுவருக்கு சமர்ப்பணம் செய்து தித்திப்பாக பொங்கலை கொண்டாடிக்கொண்டிருக்கிறார் ஜஸ்வந்த் சிங்.

‘‘ஜாதி, மதம், இனம், நாடு போன்ற அனைத்து எல்லைகளையும் கடந்து, உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்க்கைக்கும் தேவையான அற்புதமான கருத்துக்களை திருக்குறளாக்கி திருவள்ளுவர் நமக்கு தந்திருக்கிறார். காலத்திற்கு ஏற்ற கருத்துக்கள் இல்லாததால் பல படைப்புகள் வழக்கொழிந்து போயிருக்கின்றன. ஆனால் திருக்குறள் அன்றும் இன்றும் என்றும் நிலைத்து நின்று மனித சமூகத்திற்கு வழிகாட்டும் பொதுமறையாக இருந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் காலம் கடந்தும் உருமாறாமல் அது நிலைத்திருக்க வேண்டும் என்ற எனது நோக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஓலைச்சுவடியில் திருக்குறளை படைக்க திட்டமிட்டேன்.

திருக்குறளை பழங்காலத்தில் ஓலைச்சுவடியில்தான் பதித்தார்கள். பின்பு 1812-ம் ஆண்டு முதன்முதலில் அது அச்சு வடிவம் பெற்றது. அச்சிட ஆரம்பித்ததும் ஓலைச்சுவடியில் எழுதுவதை நிறுத்திவிட்டார்கள். அதன் பின்பு டிஜிட்டல் முறை வழக்கத்திற்கு வந்தது. காகிதத்தில் இருக்கும் பதிவுகள் 60 முதல் 70 ஆண்டுகளே நிலைத்திருக்கும். ஆனால் ஓலைச்சுவடிகளின் ஆயுள் காலம் 600 முதல் 700 ஆண்டுகள். பலவிதங்களில் பலன் தரும் பனை மரத்தில் இருந்து சுவடிகளுக்கு தேவையான ஓலை கிடைக்கிறது. மேலும் பனை மரம் தமிழகத்தின் மாநில மரமாகும். திருக்குறளிலும் பனை மரம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால்தான் நானும் ஓலைச்சுவடியில் திருக்குறளை உருவாக்க திட்டமிட்டேன்’’ என்கிறார், ஜஸ்வந்த் சிங்.

தரமான பனை ஓலைகளை தேர்ந்தெடுத்தது முதல் அதை பாடம் செய்தது- எழுத்தாணியில் எழுதப்பழகி எழுதியது வரையிலான அனைத்தும் ஜஸ்வந்த் சிங்குக்கு பல்வேறு மறக்க முடியாத அனுபவங்களை கொடுத்திருக்கிறது.

‘‘பனையில் ஆண், பெண் என இருவகை உள்ளது. ஆண் மரத்தை செங்கல்பட்டு பகுதியில் தேர்ந்தெடுத்து அதன் இளங்குருத்தை வெட்டி சேகரித்து பந்துபோல் சுருட்டினேன். அதனை நீருக்குள் முக்கி அடுப்பில்வைத்து அதில் கடுக்காய், மஞ்சள், பப்பாளி இலை, மூங்கில் இலை போன்றவைகளை சேர்த்து 2 மணி நேரம் கொதிக்கவிட்டோம். பின்பு ஆறவைத்து ஓலையை வெளியே எடுத்து, பிரித்து நிழலில் உலர வைத்தோம். நன்றாக உலர்ந்த பின்பு, தேவையான அளவில் அதனை வெட்டி எடுத்து எழுத்தாணியால் எழுதினேன்.

எழுத்தாணியால் எழுதுவது என்பது எளிதான காரியமல்ல. முதலில் அதற்கான பயிற்சியை பெறவேண்டும். எழுத்தாணியால் மண்ணில் எழுதி பல நாட்கள் கைவலிக்க பயிற்சி பெற்ற பின்பே, ஓலையில் எழுத ஆரம்பித்தேன். 20 செ.மீ. நீளம், 3 செ.மீ அகலம் கொண்ட ஓலைகளில் எழுதினேன். பழங்கால சுவடிகள் பெரும்பாலும் இந்த அளவில்தான் இருக்கின்றன. ஓலையின் ஒரு பகுதியில் இரண்டு திருக்குறள் வீதம் இரு பக்கங்களிலும் எழுதியுள்ளேன். அதன் படி ஒரு ஓலையில் நான்கு குறள்கள் இடம்பிடித்துள்ளன.

ஓலையில் லேசான அழுத்தம்கொடுத்தே எழுதவேண்டும். அதனால் முதலில் அது கோடு போன்றுதான் தெரிந்தது. பின்பு கறுப்பு நிற மூலிகை சாம்பல் தயாரித்து அதன் மேல் பூசி எழுத்தை தெளிவாக்கினேன். கரிசலாங்கண்ணி கீரை இலையை காயவைத்து, கற்பூரத்தில் எரித்தால் கறுப்பு நிற சாம்பல் கிடைக்கும். அதனை லெமன்கிராஸ் ஆயிலில் கலந்து குழம்புபோல் ஆக்கி எழுத்துக்கள் மீது பூசினேன். அடுத்து அரை மணிநேரம் கழித்து லெமன்கிராஸ் ஆயிலை பஞ்சில் முக்கி சுவடியை துடைத்து சுத்தம் செய்தேன். எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தது.

பின்பு சுவடியில் துளைகள் இட்டு, நூல் கோர்த்து கட்டிவிட்டு, பாதுகாப்பிற்காக மேலும் கீழும் மரக்கட்டைகளை வைத்து இணைத்து முழுமைப்படுத்தியிருக்கிறேன். 1330 குறள்களும் இரண்டு கட்டுகளாக என்னிடம் உள்ளன. இது ஒன்றரை வருட உழைப்பால் சாத்தியமானது..’’ என்று கூறும் ஜஸ்வந்த்சிங், தனது சாதனைக் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

நாளை (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம் என்பதால், இந்த திருக்குறள் படைப்பு சாதனை ஜஸ்வந்த்சிங்கிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்திருக்கும் நேரத்தில் அரசுக்கு ஒரு கோரிக்கையும் வைக்கிறார்.

‘‘நமக்கு சொந்தமான லட்சக்கணக்கான அரிய ஓலைச்சுவடிகளை வெளிநாட்டினர் திருடிச்சென்று விட்டனர். அவைகளை மீட்டுக்கொண்டு வந்தால் அற்புதமான மருத்துவ குறிப்புகள் நமக்கு கிடைக்கும். அதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அதுபோல் அனைத்து பள்ளிகளிலும் ஒரு குறிப்பிட்ட பாட நேரத்தில் மட்டும் ஓலைச்சுவடி எழுத மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

ஜஸ்வந்த் சிங் சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி மகிந்தர் கவுர். இந்த தம்பதிகளுக்கு சரண்தீப் கவுர் என்ற மகளும், தரன்ஜித் சிங் என்ற மகனும் உள்ளனர்.