சிறப்புக் கட்டுரைகள்

சுவையோ சுவை சுட்டதும்.. அவித்ததும்.. + "||" + Taste or taste After baking When boiled

சுவையோ சுவை சுட்டதும்.. அவித்ததும்..

சுவையோ சுவை சுட்டதும்.. அவித்ததும்..
பூலோகத்தின் கற்பகத்தரு என்று அழைக்கப்படக்கூடிய பனைமரத்தின் அனைத்து பாகங்களும் பலன் தரக்கூடியது.
 தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. ஒரு பனையில் இருந்து 70 வகையான பொருட்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பனையில் இருந்து கிடைக்கக்கூடிய ஒரு சத்தான பொருள்தான் பனங்கிழங்கு. இந்த பனங்கிழங்கு தைப்பொங்கலிலும் இடம்பெறுவது சிறப்பு. அதாவது சூரியபகவானுக்கு படையலாக வைக்கப்படும் கிழங்கு வகைகளில் இதுவும் ஒன்று.

பனைமரத்தில் இருந்து பழுத்து கீழே விழும் பனம்பழங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் இருக்கும் விதைகள் மண்ணில் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டு பனங்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கரிசல் மண், செம்மண் ஆகிய இரு மண்ணிலும் இந்த கிழங்கு விளையும். இதில், செம்மண்ணில் விளையும் கிழங்குக்கு தனிச்சுவை உண்டு. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் வேம்பார், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் பனங்கிழங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பனங்கிழங்கை அவிக்க மண்பானை சிறந்தது என்றாலும், ஈயம், சில்வர் பாத்திரங்களிலும் அவிக்கலாம். முற்றாத கிழங்காக இருந்தால், தோலுடன் அவிக்கலாம். இல்லா விட்டால் தோலை நீக்கிவிட்டு அவிக்கலாம். பாத்திரத்துக்குள் கிழங்குகளை போட்டு, பாதியளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் சிறிது மஞ்சள்பொடி, உப்பு தூவி மூடி கொதிக்க வைக்க வேண்டும். பானைக்குள் இருக்கும் நீராவி, மூடியின் இடைவெளி வழியாக வெளியேறி விடாமல் இருக்கும்படி, பானையின் வாய்ப்பகுதியை மூடியுடன் சேர்த்து துணியால் இறுக்கி கட்டிவிட வேண்டும்.

நீராவி வெளியேறினால் கிழங்கில் காரல்தன்மை ஏற்படும். நல்ல கொதிநிலையில் கிழங்கு அவிந்துவிடும். பனங் கிழங்கை தீ மூட்டி தீக்கனலில் போட்டு சுட்டும் சாப்பிடலாம். இரண்டும் தனித்தனி சுவையுடையது. கிராமங்களில் பொங்கலன்று பொங்கல் வைத்த பானையை கீழே இறக்கியவுடன், அடுப்பில் கிடக்கும் தீக்கனலில் கிழங்கை சுட்டு சாப்பிடுவார்கள்.

பனங்கிழங்கு சத்து மிகுந்தது. அதிக நார்ச்சத்து உள்ளதால், சிறந்த மலமிளக்கியாக உள்ளது. கிழங்குகளில் பனங்கிழங்கும், கருணைக்கிழங்கும் மட்டுமே வாயுவை உருவாக்காதவை. முன்பு கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள், கருப்பட்டியையும், பனங்கிழங்கையும் உணவுக்காக கொண்டு செல்வார்கள்.

அவித்த பனங்கிழங்கை உரித்து சின்னச்சின்ன துண்டுகளாக்கி அதனுடன் சிறிதளவு சீரகம், மிளகாய் வத்தல், வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து பனங்கிழங்கு துவையலாக்கலாம். அவித்த கிழங்குகளை நீளவாக்கில் இரண்டாக வெட்டி நிழலில் இரண்டு நாள் வரை காயவைத்தால் கடினமாகிவிடும். இதை ‘ஒடியல்’ என்பார்கள். இதை ஒடித்து துண்டுகளாக்கி இடித்து மாவாக்கினால் கிடைக்கும் பனங்கிழங்கு மாவுடன் மிளகு, பனங்கற்கண்டு கலந்து உருண்டை பிடித்தும் சாப்பிடலாம். இதே மாவுடன் சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, உளுந்து, உப்பு சேர்த்து உப்புமாவாகவும், அடை தோசையாகவும் தயார் செய்து சாப்பிடலாம். இவை அனைத்தும் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும் ருசி மிகுந்தவை.

பனை விவசாயி ராயப்பன் சொல்கிறார்:

"தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் பனங்கிழங்குகள் உற்பத்தி செய்யப்படும். இந்த ஆண்டு ராமநாதபுரத்தில் போதிய மழை பெய்யாததால் பனங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் கிழங்கு உற்பத்தி குறைந்து உள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரளவு பனங்கிழங்கு உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இந்த கிழங்குகள் பொங்கல் முதல் விற்பனைக்கு வரத்தொடங்கும். பிற மாவட்டங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால் கிழங்குக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது’’ என்றார் அவர்.