பதக்கங்களை குவிக்கிறது.. பலம் பொருந்திய `ஒரு கை'


பதக்கங்களை குவிக்கிறது.. பலம் பொருந்திய `ஒரு கை
x

ஒரு கையால் பலத்தைக் காட்டி எதிராளியை மடக்கி தோற்கடிக்கும் `பஞ்சகுஸ்தி' சர்வதேச அளவில் புகழ்பெற்ற விளையாட்டு.

 `ஆர்ம் ரெஸ்லிங்' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்த போட்டியில் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார், 33 வயதான ராகுல் பணிக்கர். இவர் உலக பஞ்சகுஸ்தி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒன்பதாம் இடத்தை பிடித்தவர். தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 8 முறை வெற்றிவாகை சூடியுள்ளார். கொச்சியை சேர்ந்த இவர் தொடர்ச்சியாக 10 முறை கேரள மாநில சாம்பியனாகவும் திகழ்கிறார்.

சமீபத்தில் இணையதளத்தில் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்த ஆர்ம் ரெஸ்லிங் வீடியோ ஒன்று வெளியானது. அதில் `உலகில் அதிக சக்திகொண்ட மனிதர்' என்று வர்ணிக்கப்படும் பாடி பில்டர் லாரி வீல்சும்- ராகுல் பணிக்கரும் தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டியிடுகிறார்கள். யார் கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்போடு நடந்த இந்த போட்டியில் லாரியை தோற்கடித்து தன்னை பலம் பொருந்தியவராக நிரூபிக்கிறார், ராகுல். அதை பார்ப்பவர்கள் `பாறையை தோற்கடித்த பலவான்' என்று ராகுலை பாராட்டுகிறார்கள்.

"2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்த சவாலான போட்டியின் வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வைரலானது. லாரி வீல்ஸின் மேனேஜர் என்னை அழைத்து `இந்த சவாலை ஏற்றுக்கொள்ளத் தயாரா?' என்று கேட்டார். போட்டி வீடியோவை 2 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களைக்கொண்ட அவரது சேனலில் காட்டுவதாகவும் சொன்னார். நான் அவர்களது சவாலை ஏற்று போட்டியிட்டு வென்றேன். இது சாதாரண வெற்றியல்ல. இதுவரை கிடைத்த அனுபவங்களும், கடுமையான முயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தது.

எனது தந்தையும், நான்கு மாமாக்களும் விளையாட்டு வீரர்கள். தந்தை பி.பி.பணிக்கர் `பவர் மேன் ஆப் இந்தியா' என்ற பட்டத்தை வலு தூக்கும் போட்டியில் பெற்றவர். அவரை போன்று பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலே என்னிடம் ஏற்பட்டது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு ஜிம்மில் முதல் முறையாக ஆர்ம் ரெஸ்லிங் போட்டியை பார்த்தேன். அதன் மீது ஈர்ப்புகொண்டு சஜீஷ், முகுந்தன் போன்றவர்களிடம் பயிற்சி பெற்றேன். 12-ம் வகுப்பு படித்தபோது முதல் போட்டியில் என்னை விட சீனியரை தோற்கடித்து இரண்டாம் பரிசு பெற்றேன். அதன் பிறகு இந்த போட்டிக்குரிய நுட்பங்களை எல்லாம் கற்றுத்தந்தார்கள். நானும் ஆர்வத்தோடு தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றேன்.

எட்டு முறை நான் சாம்பியனாக தேர்வான பின்பும் பல்வேறு காரணங்களால் என்னால் உலக போட்டி களில் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டது. நான் லீடு சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறேன். அந்த நிறுவனம்தான் நான் உலக போட்டியில் பங்கு பெற உதவியது.

2019-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற தயாரானபோது மிஸ்டர் இந்தியா போட்டியில் வென்ற பிரசாத் ஆனந்த் எனக்கு உணவுகள் பற்றிய பட்டியலை தயாரித்து தந்தார். என் மனைவி அப்போது கர்ப்பிணியாக இருந்தார். அம்மா பட்டியல்படி எனக்கு உணவுகளை தயாரித்து தந்தார். அந்த போட்டி ருமேனியாவில் நடந்தது. என் உடல் எடைகொண்ட பிரிவில் 35 பேர் களத்தில் இறங் கினார்கள். போட்டியில் மொத்தம் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பங்கு பெற்றார்கள். கடுமையான அந்த போட்டியில் நான் ஒன்பதாம் இடத்தை பிடித்தேன். அதில் கிடைத்த அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டுதான் சமீபத்திய சவால் போட்டியில் லாரி வீல்சை என்னால் தோற்கடிக்க முடிந்தது.

2019-ல் எபின் குரியன் என்ற சர்வதேச வீரரை தோற்கடித்ததுதான் இதுவரை நான் பெற்ற வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது. எபின் அதுவரை யாராலும் தோற்கடிக்க முடியாதவராக இருந்தார். நான் புரோட்டின் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்கிறேன். வாரத்தில் ஆறு நாட்கள் மூன்று முதல் நான்கு மணிநேரம் பயிற்சி பெறு கிறேன். நான்கு நாட்கள் உடல் முழு வதற்குமான பயிற்சிகளையும், இரண்டு நாட்கள் ஆர்ம் ரெஸ்லிங்குக்கான பயிற்சிகளையும் பெறு கிறேன். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் பெறுவதுதான் என் லட்சியம்" என் கிறார், ராகுல். இவரது மனைவி டாக்டர் ஆர்யா. குழந்தை பெயர் வைஷ்ணவி.

Next Story