மகிழ்ச்சியை உருவாக்கும் மருந்து


மகிழ்ச்சியை உருவாக்கும் மருந்து
x
தினத்தந்தி 21 Feb 2021 2:57 PM GMT (Updated: 21 Feb 2021 2:57 PM GMT)

அவசரமாக வாகனத்தில் செல்லும்போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டால், விடாமல் `ஹார்ன்' அடித்துக்கொண்டிருப்பீர்களா? பொறுமையிழந்து, எப்படியாவது முன்னேறிச்செல்லவேண்டும் என்று முயற்சிப்பீர்களா?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் `ஆமாம்' என்பது உங்கள் பதிலாக இருந்தால், நீங்கள் போக்குவரத்து விதிகளை மட்டும் மீறவில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதற்குரிய சூழல்களையும் நிராகரித்துக்கொண் டிருக்கிறீர்கள். பெரும்பாலானவர்கள் எல்லாவற்றிற்கும் டென்ஷன் ஆகிறார்கள். சமையல் அறையில் உப்பு தீர்ந்துபோனாலும், போக்கு வரத்தில் சிக்கிக்கொண்டாலும் டென்ஷனாகிவிடுகிறார்கள்.

தீர்ந்துபோகும் முன்பே ஒரு பாக்கெட் உப்பு வாங்கிவிட்டாலும், வழக்கத்தைவிட 15 நிமிடங்களுக்கு முன்பே கிளம்பிச்சென்றுவிட்டாலும், அந்த இரு வகை டென்ஷனும் உருவாகாமலே பார்த்துக்கொள்ள முடியும். (டென்ஷன்) வரும் முன்பு பார்த்துக்கொள்வதற்கும் வழி இருக்கிறது. வந்த பின்பு தீர்த்துக்கொள்வதற்கும் நம்மிடம் மருந்திருக்கிறது.

டென்ஷன் உருவாகாத அளவுக்கு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நட்பு ஒரு நல்ல மருந்து. வேலைபார்க்கும் இடத்தில் நல்ல நண்பர்கள் சிலரை உருவாக்கிக்கொள்ளுங்கள். பக்கத்து வீடுகளிலும் நண்பர்கள் இருக்கட்டும். பழைய நண்பர்களிடமும் நட்பை மெருகேற்றிக் கொண்டு வாருங்கள். சமூகம் சார்ந்த பணிகளிலும், ஆன்மிகம் சார்ந்த பணி களிலும் இணைந்து நண்பர்களை உருவாக்கிவைத்திருங்கள். இவர்களிடம் மனந்திறந்து பேசுங்கள். நேரடியாக சந்திக்க வாய்ப்பில்லாதபோது சமூக வலைத்தளங்களில் நட்பு பாராட்டுங்கள். அது மனம் வாடிப்போகாமல் பார்த்துக்கொள்ளும்.

எல்லாவற்றையும் விமர்சிக்கும் போக்கு கொண்ட நண்பர் களிடமிருந்து விலகியிருங்கள். கேலி, கிண்டல் செய்யாமல் நீங்கள் சொல்லும் விஷயங்களை புரிந்து கொண்டு இதமாக நடந்துகொள்கிறவர்களிடம் மட்டும் நட்புவையுங்கள். உங்களை புரிந்துகொள்ள இயலாதவரிடம் உங்கள் மனதை திறந்துகொட்டினால் மனஅழுத்தம் அதிகமாகிவிடும்.

இரவில் குறைந்தது ஆறு மணி நேரமாவது விழிப்பின்றி தூங்கினால் மனஅழுத்தம் குறையும். தூக்கமின்மை மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால், பிரச்சினைகளால் தூக்கமின்றி தவிப்பவர்கள் `ஸ்லீப் ஹைஜின் எக்ஸசைஸ்' மேற்கொண்டு ஆழ்ந்து தூங்க முயற்சிக்கவேண்டும்.

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்வதற்கும், குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பதற்கும் பழகிக்கொள்ளவேண்டும். தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே டி.வி, கம்ப்யூட்டர், செல்போன் போன்றவைகளின் செயல்பாடுகளில் இருந்து விலகிவிடுவது அவசியம். மாலை நேரத்திற்கு பிறகு காபி, டீ, குளிர்பானங்களை தவிர்த்திடுங்கள். மூளையை முழுமையான ஓய்வு நிலைக்கு கொண்டு சென்று தூக்கத்திற்கு துணைபுரிவது `மெலெட்டோனின்' என்ற ஹார்மோனாகும். இது இரவு 11 மணிக்கு உற்பத்தியாகத் தொடங்கி காலை 6 மணி வரை சுரக்கும். இந்த நேரத்தில்தான் ஆழ்ந்த நித்திரை உருவாகும்.

தூங்குவதற்கு சற்று முன்பு ரிலாக்ஸேஷன் பயிற்சி செய்யலாம். ஒரு கையை நெஞ்சிலும், இன்னொரு கையை வயிற்றிலும் வைத்துக்கொண்டு ஆழமாக மூச்சை இழுத்து, ஐந்து வினாடி அப்படியே நிலைநிறுத்திவிட்டு, பின்பு நிதானமாக வெளியேற்ற வேண்டும். இவ்வாறு பத்து தடவை செய்யலாம். மாலையில் உடற் பயிற்சி செய்யும் வழக்கம்கொண்டவர்கள், தூங்கச்செல்வதற்கு நாலைந்து மணி நேரத்திற்கு முன்பே பயிற்சியை முடித்துவிடவேண்டும். இரவு நேரங்களில் உடற்பயிற்சி செய்வது தூக்கத்தை பாதிக்கும்.

நேற்று நடந்ததையும், நாளை நடக்கப்போவதையும் நினைத்துப் பார்த்து குழம்புகிறவர்கள் மிக அதிகம். அது பெரும்பாலும் டென்ஷனைதான் உருவாக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவருக்கு தரமான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும். அவருக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஊட்டவேண்டும். இவைகளை செய்தால்தான் அவர் நோயில் இருந்து விரைவாக விடுபடுவார். உங்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படாது. மாறாக `விதி இப்படி எல்லாம் சதி செய்கிறதே' என்று துக்க சிந்தனையிலே மூழ்கி கிடப்பது உங்களுக்கும் நல்லதல்ல. நோயாளிக்கும் நல்லதல்ல. பிரச்சினை களுக்கு சரியான வழிமுறைகளில் தீர்வுகண்டு அதில் இருந்து மீண்டுவிட்டால் டென்ஷன் இன்றி மகிழ்ச்சியாக வாழலாம்.

Next Story