படித்தது `பி.டெக்'.. பிடித்தது லாரி ஓட்டுதல்..


படித்தது `பி.டெக்.. பிடித்தது லாரி ஓட்டுதல்..
x
தினத்தந்தி 21 Feb 2021 3:56 PM GMT (Updated: 21 Feb 2021 3:56 PM GMT)

மாடர்ன் டிரஸ் அணிந்துகொண்டு, பாரம் ஏற்றிய டிப்பர் லாரியை ஜாலியாக ஓட்டிக்கொண்டிருக்கிறார். அது பற்றி கேட்டால், `இதுதான் எனக்கு பிடித்தமான வேலை'

ஸ்ரீஷ்மா `பி.டெக்' படித்திருக்கிறார். ஆனால் மாடர்ன் டிரஸ் அணிந்துகொண்டு, பாரம் ஏற்றிய டிப்பர் லாரியை ஜாலியாக ஓட்டிக்கொண்டிருக்கிறார். அது பற்றி கேட்டால், `இதுதான் எனக்கு பிடித்தமான வேலை' என்று சொல்வதோடு, ஒன்பது மாதங்களாக அந்த வேலையை செய்துகொண்டிருக்கிறார். தினமும் ஏழு முறை பாரங்களை ஏற்றிக்கொண்டு லாரியில் அந்த மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சுழன்றடிக்கிறார்.

ஸ்ரீஷ்மா, கேரளாவில் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர். இவரது தந்தை புருஷோத்தமன் சுயதொழில் செய்து வருகிறார். தாயார் ஸ்ரீஜா ஆசிரி யையாக பணியாற்றுகிறார். தங்கள் மகளுக்கு சிறுவயதில் இருந்தே சாகசங்களில் அதிக ஆர்வம் இருந்ததாக அவர்கள் சொல்கிறார்கள்.

"எப்போதும் எங்கள் வீட்டின் முன்பு பல வகையான வாகனங்கள் நின்றுகொண்டிருக்கும். சிறுவயதில் இருந்தே அவைகளை பார்த்து நான் வளர்ந்துவந்ததால், எல்லாவிதமான வாகனங் களையும் ஓட்டிப்பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை அப்போதே வந்துவிட்டது. ஐந்து வயதில் இருந்தே அப்பா என்னை டிரைவர் சீட்டில் உட்காரவைத்து அழகுபார்த்தார். பின்பு நான் பைக், கார், பஸ் போன்றவைகளை இயக்க கற்றுக்கொண்டேன். 18 வயதில் பைக், ஆட்டோ, கார் போன்றவைகளை ஓட்டுவதற்கான உரிமத்தை பெற்றேன். 21 வயது பூர்த்தியானதும் `பேட்ஜ்' வாங்கினேன். அதன் பின்பு கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தை பெற்றேன்.

நான் பி.டெக் படிப்பை முடித்த காலகட்டத்தில் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது எங்கள் டிப்பர் லாரியை ஓட்டுவதற்கு டிரைவர் கிடைக்காத நிலை உருவானது. அதனால் நானே அதனை ஓட்டுவதற்கு தயாரானேன். டிப்பரை இயக்குவது எனக்கு பிடித்திருப்பதால் தொடர்ந்து அதனை இயக்குகிறேன். ஒருமுறை பாரம் ஏற்றிச்சென்றுகொண்டிருந்தபோது லாரி மண்ணில் புதைந்துவிட்டது. அந்த ஊர் மக்களின் உதவியோடு லாரியை மீட்டெடுத்தேன். தினமும் ஏழு தடவை பாரம் ஏற்றிக்கொண்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறேன். இத்தனை மாதங்கள் லாரி ஓட்டிய பின்பும் அப்பா சம்பளம் எதுவும் எனக்கு தரவில்லை.

மண் வாரும் இயந்திரத்தை இயக்க இப்போது பயிற்சி பெற்று வருகிறேன். பி.டெக் படித்திருந்தாலும், பி.எஸ்சி.யும் படித்துக்கொண்டிருக்கிறேன். எனது சகோதரன் ஷிஜிலின் சுயதொழில் செய்து வருகிறார். நான் படித்த படிப்பிற்குரிய வேலை கிடைக்கும் வரை வாகனங்களை இயக்கிக்கொண்டிருப்பேன். எல்லா பெண்களாலும் இதுபோல் வாகனங்களை இயக்க முடியும். அதற்கு பெண்களுக்கு தேவை லைசென்ஸ் அல்ல, தைரியம். நம்மால் முடியும் என்று பெண்கள் நினைத்துவிட்டால் இதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம்" என்று கூறியபடி டிப்பர் லாரியை வேகமாக ஓட்டிச்செல்கிறார், ஸ்ரீஷ்மா.

Next Story